
.சொன்னவர்-ஆர்.ஜி. வெங்கடாசலம் சென்னை-24
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
ஒரு மாலை வேளை.மகா பெரியவாளை தரிசனம்செய்ய, ஸ்ரீமடத்துக்கு சென்றிருந்தேன். அதிர்ஷ்டவசமாக பெரியவா சற்று ஓய்வாக இருந்த நேரம்.
“எங்கேருந்து வரே?”
“திருவையாவூர் ஏழுமலையான் கோயிலில் சிரவணதீபம். அங்கே சென்றுவிட்டு வருகிறேன்…..”
பெரியவா, எனக்குள் எதையோ தேடுவதைப் போல் என்னை உற்று நோக்கினார்கள்.
நான் கரைந்தே போனேன்,பேச முயன்றேன்.
நெஞ்சு தழுதழுத்தது.
“எங்க குடும்பத்திலே,ரொம்பநாளா, சிரவணதீபம்,
பூஜை,சந்தர்ப்பணை எல்லாம் நடந்தது. இப்போ,
அங்கங்கே எல்லாரும் பிரிந்து போயிட்டதாலே,
நடத்த முடியல்லே..மனசுக்குக் கஷ்டமா இருக்கு..
குத்தம் செய்கிறமாதிரி இருக்கு…அகத்திலேயே
வெளிச்சம் இல்லாமல் போயிட்டாப்போல இருக்கு..”
பெரியவா சிஷ்யனைக் கூப்பிட்டு ஏதோ சொன்னார்கள். சற்று நேரத்தில், ஒரு பெரிய அகல் விளக்கில் நெய் ஊற்றி, திரி போட்டு ஏற்றிக் கொண்டு வந்து பெரியவா எதிரில் வைத்தார், அவர்.
பெரியவா எழுந்து, கையில் தண்டத்துடன் அந்த
விளக்கை வலம் வந்து வணங்கினார்கள்.
நான் திகைத்துப்போய் நிற்கையில், அவர்கள்
திருமுகத்திலிருந்து அருளமுதம் பொங்கி வந்தது.
“சேவிச்சுக்கோ,சிரவணதீபம் போட்டாச்சு!
இனிமே வெளிச்சம்தான்….”
என்னால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை சிரவணதீபத்துக்கு வணங்கி நிமிர்ந்தேன். அங்கே சங்கரரைக் காணவில்லை;சக்ரபாணியைக் கண்டேன்!
என்ன பாடம் கற்பித்தார்கள்?
அசிரத்தை காரணமாக, ஆசார அனுஷ்டானங்களை விட்டு விடக்கூடாது.யதாசக்தி கட்டாயம் செய்ய வேண்டும்.
எல்லாரும்தான்.



