
உலகில் அனைவரும் தமக்காகத்தான் வாழ்கிறார்கள். அது இயல்புதான். தான் சுகப்பட வேண்டும். அதேபோல் தம்மவர்களை சுகப்படுத்த வேண்டும். இது ஒவ்வொரு ஜீவனுக்கும் உள்ள உணர்வு!
அதுமட்டுமல்ல. தாம் மட்டுமே அன்றி தம் பிள்ளைகள் கூட அதிக சுகத்தோடு வாழ வேண்டும் என்ற தாபத்ரயத்தோடு தாம் சம்பாதித்த செல்வத்தை அவர்களுக்காக சேர்த்து வைப்பதோடு தமக்குப் பின் ஆட்சி அதிகாரம் கூட தம் பிள்ளைகளுக்கே வர வேண்டும் என்று விரும்புபவர்கள் தென்படுகிறார்கள்.
முன்பு முடியாட்சியில் இதுபோன்ற குணம் இருந்தது. ஏனென்றால் தம் பிள்ளைகள் ராஜாக்களாக வேண்டும் என்று விரும்புவது முடியாட்சியில் சகஜமமே!
“யஸ்ய ஜீவந்தி தர்மேண புத்ரா மித்ராணி பாந்தவா:
சபலம் ஜீவிதம் தஸ்ய நாத்மார்தே கோஹி ஜீவதி !”
“ஒவ்வொருவரும் தனக்காகத்தான் வாழ்வார்களே தவிர தர்மத்திற்காக வாழ்பவர்கள் எத்தனை பேர்? தான் மட்டுமேயன்றி தன்னை அண்டியுள்ள புத்தர், மித்திரர், உறவுகள் கூட தர்மத்தோடு வாழும்படி யார் செய்வார்களோ அவர்கள் மட்டுமே பிறவி எடுத்த பயனை அடைந்தவர்கள்”.
அதாவது நாம் தர்மத்தோடு கூடிய அரசாட்சி நடத்தினால்தான் பிறருக்கு ஆதர்சமாக விளங்க முடியும். அரசாட்சி மட்டுமே அல்ல. வாழ்க்கை வழிமுறையில் கூட ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தவரை ஸ்வதர்மத்தை கடைபிடித்து பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். அப்படியின்றி நாம் தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் நீ கடைபிடி என்று கூறினால் பிள்ளைகள் கேட்கமாட்டார்கள். நாம் போதிக்கும் தர்மம் கடைபிடிக்கப்படுவதை பார்த்தால்தான் அது அடுத்த தலைமுறையின் மீது தாக்கம் ஏற்படுத்தும்.
எனவே மனிதன், தான் தர்மத்தோடு வாழ்ந்து தர்ம எண்ணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையை எடுத்துக் காட்டாக காண்பித்து பிறரின் மேல் பிரபாவம் ஏற்படுத்தும் விதமாக வாழ வேண்டும். நாம் தர்மத்தைக் கடைப்பிடித்தால் மட்டும் போதாது. நாம் கடைப்பிடிக்கும் தர்மம் பிறருக்கும் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஸ்பூர்த்தியையும் ஏற்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். இது மிகச் சிறந்த அம்சம்.
இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் முயற்சி செய்தால் முழு சமுதாயமும் தர்மத்தோடு கூடியதாக விளங்கும். ஒருபுறம் போதனைகள் செய்தாலும் வாழ்க்கை வழிமுறையில் கூட தம்முடையவர்கள் அனைவருக்கும் தர்ம மயமான ஸ்பூர்த்தியை அளிக்கக்கூடியவனாக தலைவன் விளங்க வேண்டும்.
அவ்வாறு ஸ்பூர்த்தியை அளிக்கக்கூடிய உத்தம ஜீவிதம் அனைவருக்கும் சாத்தியமல்ல. சிலரே அவ்வாறு வாழ்வர். அவர்கள் மகாத்மாக்கள் ஆவதோடு தம் குடும்பம் முழுவதும் தர்மத்தோடு வாழும்படி செய்வார்கள். தமக்குப் பிற்பாடு வரும் சந்ததிக்கு செல்வமும் பதவியும் அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதல்ல தலைமை லட்சணம்.
தர்ம மயமான வாழ்க்கையை அளிக்க பிரயத்தனம் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர் சிறந்த தலைவர் ஆவார்.
தர்மபுத்திரன் தான் மட்டும் தார்மீகராக இருக்காமல் தன் சகோதரர்களையும் தார்மீகர்களாகச் செய்தார். ஒருபுறம் அர்ஜுனனும் பீமனும் பராக்கிரமத்தையும் ஆவேசத்தையும் காண்பித்த போது கூட அவர்களின் வீரத்தை புகழ்ந்தபடியே அவர்களின் ஆவேசத்தை மெச்சி கொண்டபடியே தர்மத்தின் திசையைக் காட்டினார். அந்த பராக்கிரமமும் ஆவேசமும் தர்மத்திற்காக தகுந்த நேரத்தில் வெளிப்பட வேண்டுமே தவிர நமக்கு ஏதோ அநியாயம் நடந்து விட்டது என்பதற்காக துள்ளக் கூடாது என்று கூறி அவர்களை கட்டுப்படுத்தினார். அதனால் தர்மபுத்திரரோடு கூட அவர் மனைவி, தம்பிகள், பிள்ளைகள், குடும்பம் முழுவதும் கூட தர்ம மய ஜீவிதம் வாழ்ந்தார்கள்.
அதேபோல் ராமச்சந்திர மூர்த்தியும் தான் மட்டுமின்றி தன் சகோதரர்களையும் தர்மத்தோடு கூடிய வாழ்க்கையும் ஆட்சியும் நடத்தச் செய்தார்.
பிறருக்கும் தனக்கும் தார்மீக ஸ்பூர்த்தி அளிக்கக்கூடியவரின் வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை! என்று கூறியருளிய ருஷிகளுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



