
ஆகஸ்ட் 1 – வியாழக் கிழமை:- கௌரி விரதம்.
இன்றைய தினம் கௌரி தேவியின் விரதம் கூறப்பட்டுள்ளது. மஞ்சள் பிள்ளையார் போல் பிடித்து வைத்து அதில் கௌரி தேவியை ஆவாஹனம் செய்து ஷோடசோபசார பூஜை செய்து கொழுக்கட்டை நிவேதனம் செய்யவேண்டும். இரண்டு சரடுகளை ரக்ஷையாக தயாரித்து ஒன்றை கௌரி தேவிக்கு சமர்ப்பித்து ஒன்றை கையில் கட்டிக் கொள்ள வேண்டும். கன்னிப் பெண்கள் இந்த விரதத்தை செய்தால் விரைவில் திருமணமாகும். சுமங்கலிகளுக்கு சௌபாக்கியம் அளிக்கும்.
ஆகஸ்ட் 2 – வெள்ளிக்கிழமை:- ஔதும்பர விருக்ஷ பூஜை.
இன்று அத்தி மரத்தில் சிவபெருமானையும் சுக்கிரனையும் வழிபட்டு பூஜை செய்ய வேண்டும். அத்தி மரம் அருகில் இல்லாவிட்டால் சுவரில் ஔதும்பரம் வரைந்து பூஜை செய்து இவ்விதம் பிரார்த்திக்கவேண்டும்.
“உதும்பர நமஸ்துப்யம் நமஸ்தே ஹேம புஷ்பக
சஜன்து பல யுக்தாய நமோ ரக்தாண்ட சாலினே !”
ஆகஸ்ட் 3 – சனிக்கிழமை:- மது ஸ்ரவா விரதம், சுவர்ண கௌரி விரதம்:-
புதிதாக திருமணமான பெண்கள் பிறந்த வீட்டிற்குச் சென்று நாகதேவதையை வழிபட்டு செய்ய வேண்டிய விரதம் மது ஸ்ரவா விரதம். பிறந்த வீட்டில் செய்த பட்சணங்களை கணவனுக்கும் மாமனார் மாமியாருக்கு கொடுக்க வேண்டும். இது அதிகமாக வட இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. சாஸ்திரம் அனைத்து மனிதர்களையும் உத்தேசித்து கூறப்பட்டுள்ளதால் எந்த பிரதேசத்தவர் ஆனாலும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.
அந்நியோன்னிய தாம்பத்தியத்திற்கு சுவர்ண கௌரி விரதம் கூறப்பட்டுள்ளது. பார்வதி பரமேஸ்வரர்களுக்கு ஷோடசோபசார பூஜை செய்து பதினாறு முடிகள் கொண்ட சரடு தயாரித்து ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையில் அல்லது கழுத்தில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி கட்டிக் கொள்ள வேண்டும்.
“குணை: ஷோடசி பிர்யுக்தம் தோரகம் தக்ஷிணேகரே
பத்னாமி தேவ தேவேசி பிரசாதம் குருமே வரம் !”
கௌரி தேவியை,
“ஜய தேவி நமஸ்துப்யம் ஜய பக்த வரப்ரதே
ஜய சங்கர வாமாங்கே ஜய மங்கல மங்களே !” என்று கூறி வணங்க வேண்டும்.
ஆகஸ்ட் 4 – ஞாயிற்றுக்கிழமை:- தூர்வா கணபதி விரதம்:-
இன்று கணபதியை பிரதிமையிலோ கலசத்திலோ ஆவாகனம் செய்து அருகம்புல்லாலும் சிவப்பு மலர்களாலும் ‘பஞ்ச பல்லவங்கள்’ என்று கூறப்படும் மாவிலை, அசோக இலை, நாவல் இலை, பலாச இலை, வேப்பிலை… இவற்றாலும் அர்ச்சனை செய்யவேண்டும். வசதியைப் பொறுத்து தங்கத்தால் அருகம்புல் செய்து அர்ச்சிக்கலாம். இதன் மூலம் அருகம்புல் எவ்வாறு பரவலாக வேரோடி வளருமோ அதேபோல் வம்சம் விருத்தியாகிக் சகல சௌபாக்கியங்களோடும் வசதியாக வாழலாம்.
ஆகஸ்ட் 5 – திங்கட் கிழமை:- நாகபஞ்சமி, சோமவார விரத ஆரம்பம்.

மஞ்சள் கலந்த சந்தனத்தால் சுவரில் ஐந்து தலை நாகத்தின் படம் வரைந்து அருகம்புல், புஷ்பம், அட்சதையால் பூஜை செய்து கோதுமை நொய்யால் பிரசாதம் செய்து நைவேத்தியம் படைப்பதால் நாக தோஷங்கள் விலகி தெய்வ அருள் கிடைக்கும். இன்று இரும்பு வாணலியில் எதையும் வறுக்கக்கூடாது.
சிராவண மாதத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் சிவபெருமானின் ப்ரீத்திக்காக நக்த விரதம் இருக்க வேண்டும் என்று ஸ்காந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் சோம வார விரதம் ஆரம்பம். நக்த விரதம் என்றால் பகலில் உபவாசம் இருந்து இரவில் மட்டும் உண்பது.
ஆகஸ்ட் 6 – செவ்வாய்க்கிழமை:- மங்களவார நோன்பு, சூரிய சஷ்டி பூஜை:-
சிராவண செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் சௌபாக்கியம் வேண்டிய மங்கள கௌரி விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.
“மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா !”
என்று மங்கள கௌரியை பிரார்த்திக்க வேண்டும்.
சிராவண மாதத்தில் சஷ்டி திதியன்று சூரியனை வழிபடுவதால் சூரிய பகவானின் அருள் கிட்டி ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
ஆகஸ்ட் 9 – வெள்ளிக்கிழமை:- வரலட்சுமி விரதம்.

இன்று அவரவர் வீட்டு சம்பிரதாயப்படி கலசத்தில் லட்சுமி தேவியை ஆவாஹனம் செய்து விதி விதானத்தின் படி பூஜை செய்யவேண்டும்.
“பத்மாசனே பத்ம கரே சர்வ லோகைக பூஜிதே
நாராயண ப்ரியே தேவி சுப்ரீத பவ சர்வதா !”
என்ற ஸ்லோகத்தால் சாருமதி தேவி வரலட்சுமியை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே பெண்கள் அனைவரையும் இந்த ஸ்லோகத்தை படித்து ஷோடசோபசார பூஜை செய்வது உத்தமமான பலனை அளிக்கும். வரலட்சுமி விரதக் கதையில் கூறியுள்ளபடி சாருமதி என்ற இல்லாள் போல் நடந்து கொண்டால் ஒவ்வொரு பெண்ணுக்கும் வரலட்சுமி தேவியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
ஆகஸ்ட் 11 – ஞாயிற்றுக் கிழமை:- புத்ர ஏகாதசி விரதம்:-
சிராவண மாதம் சுக்லபட்ச ஏகாதசி புத்ர ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. புத்திர பாக்கியம் அருளக் கூடிய விரதம் இது. நாராயணனை “ஸ்ரீதர” நாமத்தால் பூஜித்து ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இந்த ஏகாதசியன்று குடை தானம் செய்வது விசேஷ பலனை அளிக்கும்.
ஆகஸ்ட் 12 – திங்கட்கிழமை:- தாமோதர துவாதசி:-
இன்று தாமோதர துவாதசி ஆதலால் நாராயணனை “தாமோதர” நாமத்தால் பூஜித்து விஷ்ணு பிரதிமையை தானம் செய்வதால் தாமோதரனான விஷ்ணுவின் அருள் கிடைக்கும்.
ஆகஸ்ட் 15 – வியாழக்கிழமை:- ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன், ஹயக்ரீவ ஜெயந்தி,

ஸ்ராவண பௌர்ணமி திதி அதிக தெய்வீக சக்திகளோடு கூடியது. சகோதர சகோதரிகளின் உறவுக்குச் சின்னமாக ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ரட்சை கட்டிக் கொள்வது என்பது பாரதீய சம்பிரதாயங்களில் முக்கியமான அம்சம். சகோதரியால் கட்டப்படும் ரக்ஷாபந்தனம் அனைத்து பீடைகளையும் விலக்கிவிடும். அந்த ரட்சையை,
“யேன பந்தோ பலீ ராஜா தானவேந்த்ரோ மஹாபல:
தேனத்வாமபி பத்னாமி ரக்ஷ மாசால மாசல !”
என்ற ஸ்லோகத்தைச் சொல்லிக் கட்டவேண்டும்.
உபநயனம் ஆனவர்கள் புதுப் பூணல் அணிவதும் வேத அப்யாசம் ஆரம்பிப்பதும் இன்று செய்வார்கள்.
அசுர சக்திகள் வேதம் முதலான ஞான குவியல்களை எல்லாம் அபகரித்தன. நாராயணன் குதிரை முகத்தோடு ஹயக்ரீவ அவதாரம் எடுத்து ராட்சசர்களை வதைத்து வேதங்களை மீட்டு வந்தார்.
இன்று லௌகீகம் மற்றும் பாரமார்த்திகம் இரண்டு வித கல்விகளையும் அளிக்கும் ஹயக்ரீவரை வழிபடுவதால் நற்கல்வியும் நல்ல புத்தியும் வரும்.
ஆகஸ்ட் 19 – திங்கட்கிழமை:- சங்கட ஹர சதுர்த்தி:-
ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள் சிராவண மாதத்தில் அதை கடைபிடித்து கணபதியின் அருளைப் பெற்று கஷ்டங்களில் இருந்து விமுக்தி பெறலாம் என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது.
ஆகஸ்ட் 23 – வெள்ளிக்கிழமை:- ஸ்ரீகிருஷ்ணாஷ்டமி:-
பதினாறு கலைகளின் பரிபூரண அவதாரமாக ஸ்ரீமகாவிஷ்ணு பூமியில் அவதரித்த புண்ணிய தினம். இன்று கிருஷ்ணனை பூஜித்தால் சகல பாவங்களும் நீங்கி நான்குவித புருஷார்த்தங்களும் கிடைப்பதோடு மிகுந்த வெற்றியும் பெறலாம் என்று ஸ்காந்தபுராணம் கூறுகிறது.
பகல் முழுவதும் உபவாசமிருந்து மாலை ஸ்ரீகிருஷ்ணனை பூஜை செய்யவேண்டும். ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான பசும்பால், வெண்ணெய், பாலேடு, பழங்கள், முதலியவற்றோடு சீடை, முறுக்கு, அவல் வெல்லம், தயிர்சாதம்… நிவேதனம் செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும்
“நமஸ்துப்யம் ஜகன்னாத தேவகி தனய பிரபோ
வசுதேவாத்மஜ அனந்த த்ராஹி மாம் பவசாகராத் !”
என்று வழிபட்டு வணங்கி, சந்தனம் அட்சதை புஷ்பம் கலந்த இளநீரால் இவ்விதமாக அர்க்கியம் சமர்ப்பிக்க வேண்டும்.
“ஜாத: கம்சவதார்தாய பூபாரோத்தரணாய ச
கௌரவாணாம் விநாசாய தைத்யானாம் நிதனாய ச !
க்ருஹீணார்க்யம் மா தத்தம் தேவக்யா சஹிதோ ஹரே !!”
அதோடுகூட வெள்ளியால் செய்த சந்திர பிம்பத்தை சுத்தமாக உள்ள பாத்திரத்தில் வைத்து சந்திரனுக்கு அர்க்கியம் அளிக்க வேண்டும் என்று பவிஷ்யோத்ர புராணம் தெரிவிக்கிறது.
ஆகஸ்ட் 26 – திங்கட்கிழமை:- பஹுள ஏகாதசி:-
இன்று நாராயணனை ‘ஜனார்தன’ நாமத்தால் பூஜை செய்து ஏகாதசி விரதம் இருக்க வேண்டும்.
ஆகஸ்ட் 28 – புதன்கிழமை:- மாத சிவராத்திரி:-
சிராவண மாதம் முழுவதும் சிவனுக்குப் பிரியமானது. அதிலும் மாத சிவராத்திரியன்று செய்யும் சிவார்ச்சனை சிறப்பான பலனை அளிக்கக்கூடியது.
ஆகஸ்ட் 30 – வெள்ளிக் கிழமை:- குச கிரகணம், போலா விரதம், அகஸ்திய அர்க்யம்:-
பவித்ரமான தர்ப்பையை (குச) சேகரிப்பதற்கு இந்த நாள் மிகச் சிறப்பான நாள் என்று சாஸ்திரம் கூறுகிறது.
அந்தகாசுர சம்ஹாரத்தில் நந்தி காட்டிய வீரத்துக்கு மகிழ்ந்து பரமேஸ்வரன் “போலா” என்ற விருதினை அளித்து சிரவண மாதம் அமாவாசை அன்று பசுக்களையும் காளைகளையும் வழிபட வேண்டும் என்று கட்டளை இட்டதால் இதற்கு ‘போலா விரதம்’ என்ற பெயர் வந்தது. இன்று பசுக்களோடு காளைகளையும் வஸ்திரம், ஆபரணம் அணிவித்து வணங்கி உணவளித்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
(ருஷிபீடம் ஆகஸ்ட், 2019 தெலுங்கு மாத இதழிலிருந்து)
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்



