ருஷி வாக்கியம் (101) – நன்றிக்கடன்!


அதர்வண வேதத்தில் ஒரு உயர்ந்த ருஷி வாக்கியம் காணப்படுகிறது. “சர்வான் பதோ அன்ருணா ஆக்ஷியேம !” – “நாம் அனைத்து விதத்திலும் கடன் இல்லாதவர்களாக நல் வழியில் நடந்து உய்வடைய வேண்டும்!”

இதில் விரும்புவது இரண்டு நலன்கள். சன்மார்க்கத்தில் நடக்கவேண்டும். சத்கதியைப் பெற வேண்டும். ‘அன்ருணா’ – எந்தக் கடனும் இல்லாதவராக இருக்கவேண்டும்! இது மிகச்சிறந்த வார்த்தை.

எந்த கடன் தொல்லையும் இல்லாதவர்களாக இருந்தால்தான் நாம் நல்வாழ்க்கை வாழ இயலும். மனிதன் தர்மவழியைப் பின்பற்றுவதோடு கடன் இல்லாத வாழ்க்கை வாழ விரும்ப வேண்டும். கடன் என்றால் பிறரிடமிருந்து தேவைக்கு ஏதோ பணமோ பொருளோ பெறுவது மட்டுமல்ல.

‘ருணம், ருண விமுக்தி’ என்ற கருத்துக்கள் மிகவும் விஸ்தாரமான அம்சம். வெறும் பணம் கடன் வாங்குவது மட்டுமே அன்று. மனிதன் இயல்பாகவே சிலரிடம் கடமைப்பட்டிருக்கிறான்! இதனை அறிய வேண்டும்.

அந்தக் கடன்களை தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அந்தக் கடன்களைத் தீர்க்காமல் எத்தனை நற்செயல்கள் செய்தாலும் அவர்களுக்கு நன்மை கிட்டாது! இதுவே இந்த வேத வாக்கியத்தின் கருத்து.

யார்யாரிடம் மனிதன் நன்றிக் கடன்பட்டிருக்கிறான் என்றால் முதலில் பிறவி அளித்த பெற்றோரிடம்! இங்கு பெற்றோர் என்று கூறும்போது பிறவிக்குக் காரணமான மூதாதையரிடமிருந்து கூட சில குணங்கள் வரும் என்பதால் அவர்களிடமும் நாம் கடன் பட்டிருக்கோம்.

அதேபோல் ஞானத்தை அளித்து குருவிடமும் கடன்பட்டிருக்கிறோம். சமுதாயத்திடமும் கடன் பட்டுள்ளோம். நமக்கு அறிவும் தெளிவும் அளிக்கும் நூல்களையும் சாஸ்திரங்களையும் படைத்த ரிஷிகளிடமும் நன்றிக் கடன்பட்டுள்ளோம். மற்றொருபுறம் பிரகிருதி எனப்படும் இயற்கையிடமும் நாம் கடன்பட்டுள்ளோம். மரம் செடி கொடிகளிடமும் நமக்குக் கடன் உள்ளது. இவை அனைத்திற்கும் நாம் நன்றிக்கடன் செலுத்தியாக வேண்டும்!

ஆனால் கடனைத் தீர்க்கும் போது ஏதோ கோரிக்கையோடு செய்யக்கூடாது. கடன் தீர்ப்பது என்பது கடமையாதலால் அவற்றைப் பலனை எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும்.

பெற்றோருக்கு எதற்காக சேவை செய்ய வேண்டும்? அவர்களிடம் எதையோ எதிர்பார்த்து அல்ல! அவர்களிடம் நன்றிக்கடமை தீர்ப்பதற்கு பிரயத்தனம் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல. சாதாரணமாக உலகியலாக பார்த்தால் கூட கடன் இல்லாமல் வாழ்வதே பெரும் செல்வம்!

அன்னமய்யா ஒரு கீர்த்தனையில் கூறுகிறார்..
”அப்புலேனி சம்சாரமு அயினபாட்டே சாலு!
தப்பு லேனி ஜீதமொக்க தாரமைனா சாலு!”

இதுவும் ஒரு ருஷி வாக்கியமே! அன்னமய்யா ஒரு ருஷி! கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக வாழ வேண்டும். தேவைக்கு என்னதான் குறைவு? பெருக்கிக் கொண்டே சென்றால் பெருகிக்கொண்டே போகும்! அதனால் நம் இருப்பிற்கும் வாழ்க்கைக்கும் எது தேவையோ அதனைச் சிந்திக்க முடிந்தால் கடன் வாங்க வேண்டிய தேவை இருக்காது. அதனால், “தப்பு லேனி ஜீதமொக்க தாரமைனா சாலு!” என்ற உயர்ந்த வாக்கியங்களைக் கூறியுள்ளார். அதர்ம வழியில் சம்பாதிக்காத செல்வம் சிறிதளவாயினும் போதும்! என்கிறார்.

ருண விமுக்தி அடைவதற்கு நாம் முயற்சித்து வரவேண்டும். பெரியவர்கள் முக்கியமாக ஐந்து வித நன்றிக் கடன்களைப் பற்றி கூறியுள்ளார்கள். தேவ ருணம், ருஷி ருணம், பித்ரு ருணம், பூத ருணம் – அனைத்துப் பிராணிகளிடமும் நாம் கடன்பட்டிருக்கிறோம். ஐந்தாவது, மனித ருணம் – சமுதாயத்தில் சக மனிதர்களிடமும் நாம் கடன்பட்டிருக்கிறோம், சக மனிதர்களுக்கு உதவி செய்வது நம் கடமை! எதையோ பிரதிபலன் எதிர்பார்த்து செய்யும் செயல் அல்ல அது. பலனை எதிர்பார்க்காமல் தீர்க்க வேண்டிய கடன் அது! இவ்விதமாக ஐந்து வித கடன்களையும் தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அந்தக் கடன்கள் எப்போது தீருமோ அப்போது மானுடன் உய்வு பெற்று விடுவான் என்று கூறப்படுகிறது.

ஒருவனுக்கு ஏதோ திடீரென்று வைராக்கியம் ஏற்பட்டு கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி துறவியாகிறான் என்று வைத்துக்கொள்வோம். கடன்காரன் வந்து, “என்னப்பா! சன்னியாசி ஆகி விட்டாய்? இதுவரை நீ வாங்கிய கடன் குறித்து என்ன சொல்கிறாய்?” என்றால், “யாருக்கு யார் சாஸ்வதம்?” என்று பேசினால் அவன் மன்னிக்க மாட்டான். இதனை அறிய வேண்டும். உனக்கு உண்மையாகவே அத்தகைய வைராக்கியம் ஏற்பட்டால் கடனை எல்லாம் தீர்த்து விட்டு சன்னியாசம் வாங்குவாயோ வேறு என்ன செய்வாயோ அது உன் இஷ்டம்! என்று கூறுவான்.

அதனால் முக்கியமாக ருணம் என்னும் கடன் இல்லாதவனே உலகில் சுகப் படுவதற்கும் ஞான மார்க்கத்திற்கும் தகுதி வாய்ந்தவன். அதனால்தான் வேதமாதா அத்தனை உயர்வாகக் கூறி உள்ளாள். “சர்வான் பதோ அன்ருணா ஆக்ஷியேம !”

அதனால் நாம் நன்றி கடன்களை செலுத்தி விட்டு அற்புதமான மார்க்கத்தில் செல்ல வேண்டும். இதில் இரண்டு விருப்பங்கள் காணப்படுகின்றன. ஒன்று நல்ல வழியில் வாழ வேண்டும். அதற்கும்முன்பு கடனிலிருந்து விமுக்தி பெறவேண்டும். இவ்விரண்டையும் அறியவேண்டும்.

எப்படிப்பட்ட உயர்ந்த எண்ணங்கள் பாருங்கள்! இது போன்ற வாக்கியங்களை நாம் புரிந்து கொள்ள முடிந்தால் சமுதாயத்தில் உயர்வான நிலைக்குச் செல்ல இயலும்! இதனை சிந்திக்க வேண்டும்.

அதேபோல் நாடும் மனிதனும் கடன் வாங்கும் நிலையில் இல்லாமல் உயர்ந்த நிலைக்கு உயரவேண்டும்! அனைவரும் நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புவோம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...