23/09/2019 1:15 PM

ருஷி வாக்கியம் (105) – அனுமனின் ஆளுமை!
ராமாயணத்தில் வால்மீகி மகரிஷி அனுமன் பற்றிக் கூறியருளிய வாக்கியங்களில் இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன.

ஆஞ்சநேய ஸ்வாமி உறுதியான உடல் பலம் உடையவர். அதேபோல் அற்புதமான புத்திக்கூர்மை கொண்டவர். இவை இரண்டிற்கும் துணையாக பரோபகார புத்தி உடையவர். இம்மூன்றும் இயல்பாக பெற்ற மகா ஞானியும் யோகியுமாவார் ஹனுமான். அப்படிப்பட்ட ஒரு ஆளுமையை நினைத்தாலே ஆனந்தம் ஏற்படுகிறது.

அதனால் இளைஞர்கள் சூப்பர்மேன், பேட்மேன், ஹீமேன், ஸ்பைடர்மேன்… போன்றவர்களை ஆதர்சமாகக் கொள்ள வேண்டியது இல்லை. ஹனுமானை ஆதர்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் சீலம், நற்குணம், நன்னடத்தை, நல்ல பண்பாடு, விஞ்ஞான அறிவு அனைத்தோடும் கூடிய உடல் பலம் கொண்டவர் ஹனுமான். அதோடுகூட அற்புதமான செயல்வீரர். இத்தனையும் அவரிடம் காணப்படுகின்றன.

“ஜெய ஹனுமான் ஞான குண சாகர்…!” ஞானம், குணம் இவ்விரண்டிலும் கடல் போன்றவர் அனுமான். அதாவது அபாரமான ஞானமும் அரிதான நற்குணச் செல்வங்களும் நிறைந்தவர். செயல்வீரராக அனுமனை ஆராய்ந்து பார்த்தால் வெற்றிக்குத் தேவையான சூத்திரங்கள் எல்லாம் அவரில் காணப்படும்.

சமுத்திரத்தைத் தாண்டி திரும்பி வந்தபோது அவருடைய உற்சாகத்திற்கும் செயல்திறனுக்கும் சந்தோஷமடைந்த தேவதைகள் பெருமிதம் அடைந்தனர். அவ்வாறு பெருமை கொண்ட தேவதைகள் ஒரு வாக்கியம் கூறினர். அந்த வாக்கியத்தில் வெற்றிக்கான சூத்திரங்கள் அடங்கியுள்ளன. அதனையே இன்றைய ரிஷி வாக்கியமாக பார்க்கப் போகிறோம்!

“த்ருதிர் த்ருஷ்டிர் மதிர் தாக்ஷ்யம் ஸ்வகர்மசு நசீததி !”

இது மிகவும் சிறப்பான வாக்கியம். இந்த நான்கு குணங்களும் யாரிடம் உள்ளனவோ அவர்கள் தம் செயல்களில் எப்போதும் தோல்வி அடைய மாட்டார்கள் என்று கூறுகிறார் வால்மீகி முனிவர்.

அவையாவன, த்ருதி, திருஷ்டி, மதி, தாக்ஷ்யம். இந்த நான்கையும் பற்றி அறிந்து கொள்வோம்! வால்மீகி மகரிஷி அளிக்கும் கருத்துக்கள் இவை!

த்ருதி – ஒரு வேலையை ஆரம்பிக்கும் போது இருக்க வேண்டிய குணம் இது. த்ருதி என்றால் நிலைத்தன்மை, உறுதிச்சமநிலை, ஸ்திரத்துவம் என்று பொருள். தைரியம் என்றும் பொருள் கொள்ளலாம். ஒரு செயலைத் தொடங்கியபின் தடைகளைக் கண்டு அஞ்சாமல் முன்னேற வேண்டும். ஆரம்ப சூரத்தனம் என்ற சொல் கூட உள்ளது. அது போல் இருக்கக்கூடாது. சிலர் தடைகளுக்கு அஞ்சி வேலையையே தொடங்க மாட்டார்கள். சிலர் வேலையை ஆரம்பித்த பிறகு தடை ஏதாவது ஏற்பட்டால் செயலைப் பாதியில் நிறுத்தி விடுவார்கள். வெகு சிலர் மட்டுமே விக்னங்களை எதிர்த்துப் போராடி வேலையைச் செய்து முடிப்பார்கள். அவர்களே உயர்ந்தவர்கள்! எப்போதும் நாம் உயர்ந்த நிலையை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். அதனால் வேலையைத் தொடங்கியது முதல் மனதிற்கு இருக்கவேண்டிய குணம் த்ருதி. இதனையே ஸ்டெபிலிடி என்கிறோம். இது மிகவும் இன்றியமையாதது.

இரண்டாவது, திருஷ்டி. இதற்கு இரண்டு அர்த்தங்களைக் கூறலாம். ஒருமுகப்பட்ட மனம் என்பது ஒன்று. வேலை முழுமை அடைந்தபின் எவ்வாறு இருக்கும் என்பதை முன்கூட்டியே தன் பார்வையில் நிறுத்திக் கொள்வது இரண்டாவது. இதனையே ‘விஷன்’ என்பார்கள். அதனால் திருஷ்டி என்ற சொல்லுக்கு ஒருமித்த மனம், வேலையை முழுமையாக தரிசித்தல் என்று இரண்டு பொருள் கொள்ளவேண்டும்.

மூன்றாவது, மதி. மதி என்றால் ஞானம். எந்த வேலையைச் செய்யப் போகிறோமோ அதோடு தொடர்புடைய முழுமையான புரிதல் நமக்கு இருக்க வேண்டும். செயலை எவ்வாறு செய்ய வேண்டும்? ஒருவேளை அதில் ஏதாவது தடங்கல் நேரிட்டால் என்ன ஆகும்? அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது? என்று முன்பாக ஒரு திட்டமிடுதல் அவசியம். அந்த திட்டத்தை மீறி புதிய தடைகள் ஏற்பட்டால் அப்போதைக்கப்போது சரி செய்து கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அதனால் முன்பாகவே அந்த வேலையில் எதிர்ப்படக் கூடிய பிரச்சனைகள் என்ன என்பதை அனைத்து கோணங்களிலும் யோசித்து அதற்கான தீர்வுகளைக் கூட சிந்தித்து வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வேலைக்குத் தொடர்பாக பூரணமான புரிதலை ‘மதி’ என்கிறார்.

பிறகு தாக்ஷ்யம். தாக்ஷ்யம் என்றால் சாமர்த்தியம், கெட்டிக்காரத்தனம். ‘கெபாசிடி’ என்று கூறலாம்.

இவ்விதம் த்ருதி, திருஷ்டி, மதி, தாக்ஷ்யம் என்ற நான்கும் யாரிடம் இருக்குமோ அவர்கள் கட்டாயம் தம் செயல்களில் வெற்றி பெறுவார்கள் என்று அனுமனிடம் உள்ள குணங்களைப் பற்றி மகரிஷி வால்மீகி அழகாக எடுத்துரைக்கிறார்.

அனுமனைப் பார்த்து தேவதைகள் இந்த வார்த்தைகளைக் கூறியதாக எழுதுகிறார் வால்மீகி. இவ்வாறு புகழ்ந்து கூறி அனுமன் மீது புஷ்பங்களைப் பொழிந்தனர் தேவதைகள்!

ஆஞ்சநேய ஸ்வாமி புறப்பட்டபோது நடந்ததை பார்க்கும்போது… மைநாக பர்வதம் எழுந்து குறுக்கே நின்றது. உண்மையில் தன் மீது தங்கி விருந்துபசாரத்தை ஏற்கும்படி வேண்டியது. தடை ஏற்படுத்தவில்லை. ஆனால் அந்த மலையிடம், “நான் ஒரு காரியமாக புறப்பட்டுள்ளேன். அதனை முடிக்கும் வரை ஓய்வெடுக்க மாட்டேன். அதனால் எதுவும் தவறாக நினைக்காதே! நீ எனக்கு விருந்து அளித்தாற்போலவே மகிழ்கிறேன்!” என்றார் சுவாமி ஹனுமான்.

அதாவது பிறர், ‘இதைப் பெற்றுக் கொள்!’ என்று ஏதாவது அளிக்கும் போது அவர்களின் மனதை நோகடிக்கக் கூடாது என்பது அனுமனின் பண்பாடு. அதனால், “ஆதித்தியம் அளிக்கிறேன்! ஏற்றுக்கொள்!” என்று கூறியபோது தன் சங்கல்பத்தையும், பிரதிஞையையும், நியமங்களையும் கருத்தில் கொண்டு மென்மையாக அதை மறுக்கிறார். அதோடுகூட சிறந்த சொல் சொல்கிறார்.

“ப்ரீதோஸ்மி க்ருதமாதித்யம் மன்யுரேஷோபநீயதாம் !” என்கிறார். “உன் அன்பான சொற்களுக்கும், விருந்துபசாரம் அளிக்கவேண்டும் என்ற எண்ணத்துக்கும் மிகவும் மகிழ்ந்தேன்” என்கிறார்.

அதேவிதமாக வழியில் சுரஸாவும், சிம்ஹிகாவும் மிகவும் தடை ஏற்படுத்திய போது கூட விக்னங்களைத் தாண்டிச் சென்றார்.

தடைகளைத் தாண்டி காரியத்தை செய்து முடிக்கும் சாதகனுக்கு இருக்க வேண்டிய குணங்களை ராமாயணம் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்! ஸ்ரீ ராமச்சந்திர பரப்பிரம்மணே நமஹ!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்Recent Articles

டிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..?

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்! செங்கோட்டையன்!

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு ! வாபஸ் பெற தமிழிசை முடிவு?

தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்ற நிலையில் வழக்கை தொடர விரும்பவில்லை என்று தமிழசை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தைக்கு விபத்து! அறிவித்த வாட்ச்! உயிர் மீட்ட போலீஸ்!

அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சேதமடைந்த நிலையில் விபத்து நடந்து இருப்பதை உறுதிசெய்து நடந்த இடத்தையும், நபர் சுயநினைவை இழந்து கிடப்பதாகவும் குறுஞ்செய்தியை அவரது மகன் மற்றும் அவசர சேவை மருத்துவமனைக்கு மற்றும் அவசர அழைப்புக்காக கொடுக்கப்பட்ட எண் இரண்டிற்கும் குறுஞ்செய்திஅனுப்பியுள்ளது.

கட்சி தைரியமா இருந்தா… நானும் தைரியமா இருப்பேன்: ப.சிதம்பரம்!

இவரது டிவிட்டர் பதிவுக்கு பலரும் கேலி செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories