spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஸ்ரீ மஹாஸ்வாமி - ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

- Advertisement -
mahaswamigal series
mahaswamigal series

24. ஸ்ரீ மஹாஸ்வாமி
– ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
-Serge Demetrian (The Mountain Path) –
– தமிழில் – ஆர்.வி.எஸ்

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன். எனக்கு மிகவும் பிடித்த சாந்தோக்ய உபநிஷத ஸ்லோகத்தில் தியானம் செய்ய முடிந்தது.

யோ வை பூமா தத் ஸுகம், நால்பே ஸுகமஸ்தி,
பூமைவ ஸுகம், பூமாத்வேவ விஜிஜ்ஞாஸிதவ்ய இதி,
பூமானம் பகவோ விஜிஜ்ஞாஸ இதி||-
-சாந்தோக்கிய உபநிஷத் – 23.1

“எது அளவுகடந்ததோ அதுவே சுகம்; அல்பத்தில் சுகமில்லை. அளவு கடந்ததே (பூமா) சுகம்; அளவு கடப்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். குருவே! அளவுகடந்ததை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்”

சட்டென்று எனக்கு ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் அத்வைத பெரும் அனுபவம் ஒன்றைப் பற்றிய ஞாபகம் அப்போது வந்தது. அவருடைய குரு தோடாபுரி ஸ்ரீ இராமகிருஷ்ணரின் கண் இமைகளுக்கு நடுவில் கண்ணாடித் துகள் ஒன்றை வைத்து தியானம் செய்யச் சொன்னாராம். ”நானும் அப்படிச் செய்யட்டுமா?” என்று ஸ்ரீ மஹாஸ்வாமியிடம் மௌனமாகக் கேட்டேன். தாய்ப் பருந்து தான் பொறித்த குஞ்சைச் சுற்றி வருவது போல ஸ்ரீ மஹாஸ்வாமி என்னைச் சுற்றி வருவதாக உணர்ந்தேன்.  அதற்கு எதிர்ப்பு உணர்ச்சி எதுவுமில்லை. மேலும் முட்டியளவு தாமரைக்குளத்தின் தண்ணீரில் நிற்கும் போது கண்ணாடித் துண்டை எங்கே தேடுவது?

“சூரியன் மேலேறி தியானம் செய்தால்?”…. உடனே என்னுடைய ஆத்ம நண்பன் சூரியன் இந்த நிகழ்வுக்கு தயாரானது போல மறைந்திருந்த மேகக்கூட்டத்திலிருந்து வெள்ளி நாணயமாய் தலையை அங்கே நீட்டினான். ஐந்தாறு முறை சூரியனால் இரவல் பெறப்பட்ட அந்த பிரகாசமான கதிர் வெளிச்சத்தை வாங்கி என் இரண்டு கண்ணிமைகளுக்கு நடுவில் அழுத்திக்கொண்டேன். மானசீகமாகத்தான்! பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது. எனக்கு உதவி செய்த பிம்பங்கள் அனைத்தும் மாயமாயின. அங்கே நானொருவன் மட்டும் என்னுடைய பிரக்ஞையில் அதைத்தவிர வேறெதுவுமில்லாமல் இருந்தேன். “நான்” என்ற ஒரு எண்ணம் தலைதூக்கி பின்னர் அதுவும் அப்போதே அழிந்தது.

வெளிர்நீல வெளிச்சக் கடலின் ஓரத்தில் ஒரு நினைவு இன்னும் இருப்பதாக எனக்குத் தோன்றியது. “நான்” என்றோ “நான் – நினைவு” என்றோ யாராவது அவர்களது சௌகரியத்துக்காக பெயர் சூட்டினால் அது தவறு. பெரியிலிக்கு எவ்விதம் பெயர் சூட்டுவது? பின்னர் இந்த எண்ணமும் அழிந்துபோயிற்று.

இனி அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு யார் முடிவு செய்வது? அது ஏற்கனவே ஒருவரால் முடிவு செய்யப்பட்டு அவர் என் முன்னால் நிற்கிறார். அவர் ஸ்ரீ மஹாஸ்வாமி.  கிழக்குமுகமாக தாமரைக்குளத்தின் கடைசிப் படியிலிருந்துகொண்டு கைகளை அஞ்சலி பந்தம் செய்ய தியானித்துக்கொண்டிருக்கிறார். அவர் மொத்தமாக மெழுகு போன்ற ஒரு திட விளக்குத் தூணாகவே அப்போது உருமாயிருந்தார்.

அவரது கட்டளையிடன் படி “நான்” என்பதைப் பற்றிய நினைவு வந்தது பின்னர் இந்த சரீரத்தைப் பற்றியும் பிரக்ஞையும் கொஞ்சம் மெதுவாக வந்தது. இவ்வளவு நேரமும் என் கைகளைக் கூப்பியபடி முட்டியளவு நீரில் அசையாமல் நின்றுகொண்டிருந்தேன். என்னை தேற்றும் விதமாக ஸ்ரீ மஹாஸ்வாமி தனது பிம்பத்தினை சுகந்தமான காற்றாக்கி என்னை நோக்கி அனுப்பினார்.

இப்போது எனது மூச்சும் சுவாசிப்பதற்கு தயாராகி மீண்டு வந்தது. அப்போதுதான் நான் இதுவரையில் சுவாசிக்கவே இல்லை என்று தெரிந்தது. அது எப்படி மூச்சுவிடாமல் இருக்க சாத்தியமாகும்? இந்தக் கேள்வி எழுந்தவுடன் பதிலும் தொடர்ந்து வந்தது. எந்தவிதமான கஷ்டமுமின்றி சுவாசம் தானாய் நின்றிருந்தது. பின்னர் எவ்விதம் சுவாசம் வந்தது? நெஞ்சின் அசைவுகள் உணராதவண்ணம் மெல்லிய நூல் போன்ற தேவையான காற்றை யாரோ என்னுடைய நாசியில் வலுக்கட்டாயமாக ஊதியபின் சுவாசம் வந்திருக்கிறது. சரீரம் தனது கட்டுக்குலையாமல் எண்ணங்கள் மீண்டும் தொடர்ந்து ஓடுவதற்கு இது சுவாசக்காற்றுதானா அல்லது வேறெதாவதா? ஐயம்!

நான் ஸ்ரீ மஹாஸ்வாமியுடன் ஐக்கியமாகிவிட்டேன். அவர் ஜோதிவடிவானவர்.

அவர் ஒளி. அவர் பிரகாசமானவர். ஒளி ஊடுருவம் தேகம் கொண்டவர்.

கண்மணிகளிலிருந்து குட்டிக் குட்டி அக்னிப்பிழம்பான கதிர்களைப் பாய்ச்சும் தோற்றுவாய் அவர்.

இரவைத் துளைக்கும் ஒளிக் கம்பிகளை பாய்ச்சும் மூலகாரணி அவர்.

அவரது ஆசீர்வாதத்தை எதிர்நோக்கும் கண்களைக் காயப்படுத்தாமல் வருடி மிளிரும் ஒருவிதமான பிரகாசத்தின் ஆதாரஸ்ருதி அவர்.

கருவிழிகள் பற்றியெரியும் சக்கரமாகவும் கண்ணின்மணிகள் மின்னல்களின் கிடங்காகவும் கொண்டு தொடர்ந்து மின்னல்மழைக் கம்பிகளைப் பொழியும் அடித்தளம் அவர். அந்த மின்னல் கம்பிகள் கண்களை வார்த்தைகளால் விளக்கமுடியாததொரு கதவாக்கி அதன் வழியே தெய்வத்தைக் காண திறந்துவிடப்படுகிறது…

அவர் இதுதான்… இதற்கு மேலும்தான்…..

இதுதான் ஸ்ரீ மஹாஸ்வாமியைப் பற்றிய பிரக்ஞையாக இருந்தது, இது எதுவரை நீடித்திருந்தது? அவர் எதுவரை எனக்குக் காட்டினாரோ அதுவரை. அவர் இதைத் திறந்துகாட்டினார். பின்னர் மீண்டும் அவரே மூடிக்கொண்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக அவர் உருமாறுவதை நான் கவனித்தேன். நான் பார்க்கும்பொழுதே அவரது உண்மையான தோற்றத்தை விட்டு அதாவது அவரது மெய்யான தோற்றத்தின் மேலே சாதாரணமான ஒரு மேலுறையை மீண்டும் தாமாகவே சேர்த்துக்கொண்டார். உண்மை என்னவெனில் அவரது அங்கங்கள் அசைய கரங்களும் கால்களும் அவரது விருப்பதிற்கேற்ப தேவையானளவு திடமானது.  அவரது கரங்களில் தண்டத்தையும் கமண்டலத்தையும் ஏந்திக்கொண்டு மென்மையான நகர்வுகளால் எழுந்து நிற்கிறார். படிகளில் விறுவிறுவென்று ஏறி வேகமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் சீராக அவரது குடிலை நோக்கிச் செல்கிறார்.

அவர் அங்கிருந்து விலகியதும் வழக்கம் போல நான் ஸ்ரீ மஹாஸ்வாமி அமர்ந்திருந்த கல்லைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டேன். அவர் ஸ்பரிசித்த நீரை அள்ளிக் கொஞ்சம் பருகினேன். அவரது சிரசிலும் கழுத்திலும் அணிந்திருந்த சந்தன மாலையின் மணி ஒன்றை அந்த நீரிலிருந்து பாக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என் இலக்கு. கிடைக்குமா? அதோ.. அந்தக் கடைசி படியில் எப்படி அந்த மணிகள் நழுவிக் கிடக்கின்றன என்பது ஆச்சரியமாக இருந்தது. குளிர்ந்த நீர்த் தேக்கத்தின் அந்த ஸ்நேகிதமான தண்ணீர் மூன்று மணிகளையும் கபளீகரம் செய்யாமல் இருந்ததைக் கண்டு எல்லையில்லா ஆனந்தமடைந்தேன். என்னுடைய துண்டில் ஒரு ஓரத்தில் அவைகளை முடிந்துகொண்டு என் இதயத்தின் அருகில்  அதை சர்வமரியாதையாக வைத்துக்கொண்டேன்.

எனக்கு இன்னொரு சந்தோஷமும் காத்திருந்தது. சென்ற சனிக்கிழமை சாயந்திரம் ஸ்ரீ மஹாஸ்வாமியின் உபன்யாசத்தை உள்ளூர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து ஓய்வுபெற்ற முதல்வர் திரு. வெங்கடாத்ரி ஆங்கிலத்தில் பதிவு செய்து கொண்டு வந்திருந்தார்.  மூன்று முதன்மை வேதாந்தப் பள்ளிகளின் தத்துவங்களின் கருத்துக்களை அடங்கிய அதை நள்ளிரவு வரை கேட்டுக்கொண்டிருந்தேன். அதை எவ்வளவு விரும்பிக் கேட்டேன்! அந்த சொற்பொழிவுக்கு என்னை வர அனுமதிக்காத ஸ்வாமி, சந்தேகமில்லமால், எனக்கு வார்த்தைகளினால் இல்லாமல் மௌனத்தினாலேதான் உபதேசம் என்பதைக் காட்டினார்.

நான் சந்தோஷத்தில் மிதந்தபடியே பழைய நிலைக்கு வந்தேன். இம்முறை எதிரலை அதாவது சில அற்புதமான அனுபவங்களுக்குப் பிறகு “சாதாரண” நிலைக்குத் திரும்பும்போது ஏற்படும் அதிர்ச்சி அலைகள் ஏற்படவில்லை. ஸ்ரீ மஹாஸ்வாமி எப்போதும் அவருடன் என்னைத் தொடர்பிலிருக்கும்படி அனுமதித்தார். அவரை நினைத்தபடி இருத்தலே போதும், ஆனால் அது கூட அவர் உங்களை நினைக்காமல் அப்படி நடந்துவிடாது! இன்று போல வெகுநேர அமர்களில் நடக்கமுடியாதது  என்று எதுவுமில்லை. “நான்” என்ற எண்ணத்தை நிர்மூலமாக்கி, கடந்த மற்றும் எதிர்காலத் தொடர்புகளை கிழித்தெறிந்து, கொடுங்குணங்களை அழித்தொழித்து என்று எல்லாமே மிகவும் சுலபமாக முடிந்தது. ஆனால் கடவுளின் மருத்துவமனையில் அனுமதி கிடைத்தபின் நோயாளி தனது விருப்பங்களைக் கட்டளையிடத்தான் முடியுமோ?

…நிறைவடைந்தது…

ஜய ஜய சங்கர!  ஹர ஹர சங்கர!!

#ஸ்ரீ_மஹாஸ்வாமி_ஒளிவீசும்_கண்கள்_கொண்ட_மாமுனி
#மஹாஸ்வாமி_ஆர்விஎஸ்_பகுதி24


வாசகர்களுக்கு வணக்கம், எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உள்ளம் நிறைகிறது. நண்பர் சௌந்திர பாண்டி The Mountain Path சஞ்சிகைகளின் 2019-2020 மின்நூல்களை வாட்ஸப்பி அதிலிருந்த Serge Demetrian என்ற ரொமேனிய மஹானுபாவர் எழுதிய Sri Mahaswami – The Sage with Eyes of Light என்ற தொடரை அடியேனை மொழிபெயர்க்கக் கேட்டுக்கொண்டார். மஹா பெரியவாளை அதிசயங்கள் புரிபவராகவும் அநேக பக்தர்களின் வேண்டுகோளுக்கு அவர்களுக்கு அருள்புரிந்ததையும் பற்றியும் பல்வேறு அனுபவக் கதைகளை மட்டுமே நாம் நிறைய படித்திருக்கிறோம். இது புது மாதிரி!

ஸ்ரீ ரமணபகவான் பற்றி தொடர்ந்து எழுதும் போது என்னுடைய உறவினர் ஒருவர் “நாம காஞ்சி சங்கரமடம்தானே… நீ ரமணாஸ்ரமம் ஆயிட்டியே… பெரியவாளைப் பத்தியும் எழுதுடா” என்றார். ஸ்ரீரமணரும் நானும் ஒன்றுதான் என்று மஹா பெரியவா சொன்னதாக ஓரிடத்தில் படித்திருக்கிறேன்.

எனக்கு ஸ்ரீ பெரியவாளின் அற்புதங்களைப் பற்றி எழுதுவதில் சிறு தயக்கம் இருந்தது. ஒன்று எனக்கு தனிப்பட்ட முறையில் அவ்வித அனுபவங்கள் இல்லை. இரண்டாவதாக யாருக்கோ கிடைத்த அந்த அதிசய அனுபவத்தை மூன்றாம் மனிதனாக நான் விவரிப்பதில் சுவாரஸ்யமோ சிலாக்கியமாகவோ இருக்காது என்பது என் எண்ணம். மலைத் தேனை நாம் நேரடியாகச் சுவைக்கவேண்டும். சப்புக்கொட்டிச் சுவைத்த இன்னொருவரின் அனுபவத்தை வெறும் வாயோடு நாம் சுவைத்தது போல எழுதுதல் முடியாது.

ஆனால் டிமிட்ரியனின் இந்த ஆத்மானுபவத்தைப் படித்ததும் நான் மலைத்தேன். இது அதிசயமில்லை. வெளியுலக அற்புதங்கள் ஏதும் நிகழவில்லை. எல்லாம் அகத்துக்குள் நிகழ்ந்தது. சுயம் மலர்ந்த தருணங்கள். அவருடைய அனுபவங்களை வாசித்து முடித்ததும் ஒருவர் கண்களை மூடி யோசித்தால் சுயம் பூக்கிறது. இதில் தெய்வத்துவத்தையும் பூர்ணத்துவத்தையும் உணரமுடிகிறது. ஸ்ரீ பெரியவா அருகில் இருந்து “நான்” என்ற உணர்வு அழிந்து அவர் ஆத்மசுகம் என்னும் பேரின்பத்தை அடைந்தார்.

ஸ்ரீ பெரியவாளைப் பற்றி இப்படி எழுதுவது எல்லோருக்குமே புதியதாகவும் தாங்களும் இப்படி அகத்தினுள் ஊறி திளைத்து அவரது ஆசீர்வாதத்தை பரிபூரணமாக அடையலாம் என்று தோன்றியதால் 25 நாள்களாக விடாமல் எழுதினேன். கார்வெட்டிநகரில் டிமிட்ரியன் இருந்ததை மனக் கண்ணில் கண்டேன். மெய்சிலிர்க்கும் அந்த பக்தியின்பத்தில் திளைத்தேன். அவருடைய இலக்கியத்தரமான ஆங்கிலத்தை எனக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் எழுதினேன்.

டிமிட்ரியனின் இந்த அனுபவங்கள் 800 பக்கங்களுக்கு மேலான ஒரு பிரம்மாண்ட புத்தகமாக வாரணாசியின் INDICA BOOKS நிறுவனத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அமிர்த சமுத்திரத்திலிருந்து இந்த 24 பகுதியில் நீங்கள் அள்ளிப் பருகியது ஒரு துளிதான். ஜய ஜய சங்கர!  ஹர ஹர சங்கர!!

அன்பன்,
ஆர்.வி.எஸ்

2 COMMENTS

  1. நமஸ்காரம் ..ஏன்நிறுத்தி விட்டீர்கள் ..வேறு பனி காரணமா ? முழுமையான புஸ்தகம் இல்லையா ? அல்லது காபி ரைட் பிரச்சனை ஏதாவதா? தொடர்ந்து எழுதவும் ..நன்றி …வேணுகோபால் ., காஞ்சிபுரம் ..  [email protected] 9443486117

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe