spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்மதமாற்றம் எதற்கு?! காஞ்சி மகாபெரியவரின் வாக்கு!

மதமாற்றம் எதற்கு?! காஞ்சி மகாபெரியவரின் வாக்கு!

- Advertisement -

மதமாற்றம் எதற்கு?  -காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டனவே! எல்லா மதங்களும் கடவுள் ஒருவர் என்றே சொல்கின்றன. ஒருவரேயான அந்த கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். எனவே, எவருமே தாங்கள் பிறந்த மதத்தை விட்டு இன்னொரு மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.

கோயில், சர்ச், மசூதி, விஹாரம் முதலிய கட்டடங்கள் ஒன்றுக்கொன்று வேறுபடலாம். உள்ளே இருக்கிற மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும் சடங்குகளும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அனுக்கிரகம் செய்கின்ற பரமாத்மா ஒருவரே!

ஒவ்வொரு தேச ஆசாரத்தையும் ஒவ்வொருவித ஜனக் கூட்டத்தின் மனப்பான்மையையும் பொறுத்து பல்வேறு சமயங்கள் ஏற்பட்டுள்ளன. அவை எல்லாம் ஒரே பரமாத்மாவை அவரவர் மனோபாவனைப்படி பக்தி செய்து அவரோடு சேருவதற்கு வழி செய்பவையே. எனவே எவரும் தங்கள் மதத்தை விட்டு விட்டு இன்னொன்றுக்கு மாற வேண்டியதில்லை.

இப்படி மதம் மாறுகிறவர்கள் தாங்கள் பிறந்த மதத்தை குறைவு படுத்துவது மட்டுமின்றி, தாங்கள் சேருகிற மதத்தையும் குறைவுபடுத்துகிறார்கள்.

தங்களது பிறந்த மதத்தில் குறை தோன்றியதால்தான் ஒருவர் அதை விடுகிறார். ஆனால் புதிதாக சேருகிற மதத்தையும் அவர் குறைவு படுத்துகிறார் என்று ஏன் சுவாமிகள் சொல்கிறார் என்று உங்களுக்கு தோன்றலாம்.

சொல்கிறேன்!

கடவுள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவர் என்ற எண்ணம் இல்லாமல் அவரைக் குறுக்குவதால்தானே ஒரு மதத்தை விட்டு இன்னொன்றில் சேருகிறார்கள்? தங்கள் மதத்துக் கடவுள் பிரயோஜனமில்லாதவர் என்று நினைத்து இன்னொரு மதத்திற்குத் தாவுகிறார்கள். மாறுகிற புது மதக் கடவுளாவது எல்லோரையும் தழுவுவதாக நினைக்கிறார்களா? இல்லை. அப்படி நினைத்தால் மாறவே வேண்டாமே!
இவர்கள் தங்கள் பிறந்த மதத்திலேயே இருந்து வழிபட்டாலும், இப்போது அவர்கள் மாறுகிற மதத்தின் கடவுள் இவர்களுக்கு அனுக்கிரகம் செய்வார் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இல்லாததால்தானே மதமாற்றத்துக்கு அவசியம் ஏற்பட்டது?

அதாவது தாங்கள் மாறுகிற புது மதத்துக்கும், அதன் கடவுளுக்கும் கூட இவர்கள் குறுகலான எல்லை கட்டி விடுகிறார்கள். ஒரு மதத்திடம் கௌரவ புத்தி இருப்பதாக நினைத்து அதற்கு மாறுகிறபோதே அதை வாஸ்தவத்தில் அகௌரவப்படுத்தி விடுகிறார்கள்.

மற்ற மதங்களுக்கும் இந்து மதத்துக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், நம்முடைய ஹிந்து மதம் ஒன்றுதான் ‘இது ஒன்றே மோட்ச மார்க்கம்!’ என்று சொல்லாமல் இருக்கிறது.

நம்முடைய வைதீக மதம் பிறரைத் தன் மதத்துக்கு மாற்றுவது என்பதே கிடையாது. ஏனென்றால் ஒரே பரமாத்மாவை அடைவதற்கான பல மார்க்கங்களே பல மதங்களும் என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் இந்த விசால மனப்பான்மையைக் குறித்து பெருமைப்பட வேண்டும்.

வேதம், “ஒரே சத்தியத்தைத்தான் ஞானிகள் பல பெயர்களில் சொல்கிறார்கள்” என்கிறது.

கீதையில் பகவான், “எவன் எந்த விதத்தில் எந்த ரூபத்தில் வழிபட்டாலும் அவனுடைய சிரத்தையை நானே விருத்தியாக்கி அவனை அதே வழிபாட்டில் நிலைப்படுத்துகிறேன்” என்கிறார்.

ஆழ்வார், “அவரவர் தமதம தறிவறி வகைவகை அவரவர் “ என்கிறார்.

அதனால்தான் மற்ற மதங்களில் செய்வது போல் மதமாற்றம் செய்வது (Proselytisation), அதற்காக தண்டிப்பது (Persecution, Crusade, Jehad) முதலான போர்களில் படையெடுத்துச் சென்று நிர்ப்பந்தமாகத் தங்கள் மதத்துக்கு மற்றவரைத் திருப்புவது முதலான காரியங்களில் ஹிந்துக்கள் என்றுமே இறங்கியதில்லை.

நம்முடைய நீண்டகால சரித்திரமே இதற்குச் சான்று. சகல சரித்திர ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக் கொள்கிற விஷயம் இது. தூரக் கிழக்கு (Far East) முதலான தேசங்களில் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் முதலிய ஹிந்து ராஜ்ஜியங்கள் ஏற்பட்டபோது கூட நிர்ப்பந்த மதமாற்றமே இல்லை (Forced Conversion) என்றும், நம் கலாச்சாரத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு அந்நியர்களே நம் மதத்தை தாங்களாக எடுத்துக் கொண்டார்கள் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அநேக சமயங்களில் வியாபாரம் மூலமே நம் மத அம்சங்கள் பிற தேசங்களில் புகுந்தது என்றும் வாள் மூலம் அல்ல என்றும் கூறுகிறார்கள்.

என் அபிப்பிராயப்படி ரொம்பவும் ஆதிகாலத்தில் உலகம் முழுவதும் வேதமதம்தான் இருந்தது. பிற்பாடு ஆங்காங்கே வெவ்வேறு மதங்கள் உண்டானாலும் நம் மதத்தின் அம்சங்கள் குறைந்தபட்சம் இடிபாடுகளாக பழைய ஞாபகச் சின்னங்களாகவாவது (Relics, Ruins) அங்கெல்லாம் இன்னமும் காணப்படுகின்றன.

இப்படி நான் சொல்வதை ஒப்புக் கொள்ளாத ஆராய்ச்சியாளர்கள் கூட நம் பாரத நாகரீகத்தை மற்ற நாடுகளில் தாங்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்டார்களே அன்றி பலவதத்தின் மீதல்ல என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

ஒருவனைப் புது மதத்துக்கு மாற்றுவது என்றால் அதற்கென ஒரு சடங்கு (Ritual) இருக்க வேண்டும். இப்போது கன்வெர்ட் செய்கிற மதங்களிலெல்லாம் அப்படி ஒன்று – ஞானஸ்நானம் (Babtism) என்கிற மாதிரி ஏதாவது ஒன்று – இருக்கிறது. மற்ற எந்த மதத்தையும் விட மிக அதிகமான சடங்குகளைச் சொல்கிற ஹிந்து சாஸ்திரங்களைப் பார்த்தால், இப்படி நம் மதத்துக்கு மற்ற மதத்தவரை மாற்ற ஒரு சடங்கும் இருக்கக் காணோம். இதுவே நாம் மத மாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி .

ரயிலடியில் பிரயாணிகள் வந்து இறங்கியதும் ஜட்காக்காரன், ரிக்ஷாக்காரன், டாக்ஸிக்காரன் என்று பலபேர் வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். யாருடைய வண்டியில் ஏறிக் கொண்டாலும் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரலாம். வண்டிக்காரர்கள் கிராக்கி பிடிப்பதற்காகப் போட்டி போடுவதைத் தவறு என்று சொல்வதற்கில்லை. அது அவர்கள் பிழைப்பு.

ஆனால் கடவுள் என்கின்ற ஒரே லட்சியத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு மதமாற்றத்தில் முனைவது அர்த்தமற்ற செயல்.

நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது. அதில் பல வளைவுகள் உள்ளன. எல்லா வளைவுகளும் ஒரே அளவாகக் கட்டப்பட்டவைதான். ஆனால் ஒவ்வொரு வளைவுக்கும் அருகில் இருப்பவனுக்கு அந்தந்த வளைவே பெரியதாகவும் மற்றவை சிறியதாகவும் தெரியும். அதேபோல் அந்தந்த மதத்தவர்களுக்கும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால் பிறரை அதற்கு அழைக்கிறார்கள். ஆனால் எல்லா வளைவுகளும் ஒரே அளவுதான். யாரும் தாங்கள் பிறந்த மதத்தை விட்டு விலக வேண்டியதில்லை.

மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும் அனுஷ்டானங்களிலும் சில வேறுபாடுகள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒன்று போல் பார்க்க வேண்டிய தேவையில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம். யூனிஃபார்மிடி அவசியமில்லை யூனிட்டி இருப்பதே அவசியம்.

– தெய்வத்தின் குரலில்.. மகா பெரியவர்

– ராஜி ரகுநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe