
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி
விளக்கம்: வேதா டி. ஸ்ரீதரன்
மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (4)
பொருள்
வள்ளல் தன்மை உடைய மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்லும் இடையர்கள் ஊதும் புல்லாங்குழல் ஓசையும், மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகளின் ஒலியும் சேர்ந்து பிறந்த இனிய நாதம் எல்லாத் திசைகளிலும் நிறைந்தது. வயல்வெளியிலும் தடாகத்திலும் வண்டினங்கள் ஆர்ப்பரித்துக் கிளம்பின. விசுவாமித்திரரின் யாகம் நிறைவடையும்வரை பாதுகாத்து நின்ற மாவீரனே, இலங்கைவாழ் அரக்கர்களை அழித்தவனே, தேவாதி தேவனே, அயோத்தியின் அதிபனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

அருஞ்சொற்பொருள்
மேடு – உயர்வு (பசுக்களின் வள்ளல் தன்மையைக் குறிக்கிறது.)
இள மேதி – எருமைக் கன்று (மாடுகள் என்று பொதுவாகவும் பொருள் கொள்ளலாம்.)
தளைவிடும் – கொட்டடியில் இருந்து விடுவித்து மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும்
வேய்ங்குழல் – புல்லாங்குழல்
விடை – எருது
குரல் – ஓசை
ஈட்டிய இசை – கலந்த இசை (ஆயர்களின் புல்லாங்குழல் ஓசையும், மாடுகளின் கழுத்து மணி ஓசையும் கலந்து பிறந்த நாதம்)
இரிந்தன – ஆர்ப்பரித்துக் கிளம்பின
சுரும்பினம் – வண்டினம்
வாட்டிய – அழித்த
வரிசிலை – ஸ்ரீராமனின் வில்லாகிய கோதண்டம் (சிலை – வில்)
வானவர் ஏறு – தேவர் தலைவன்
அவபிரதம் – யாகம் முடிந்ததும் செய்ய வேண்டிய அவப்ருத ஸ்நானம்
அவபிரதம் ஆட்டிய – யாகத்தின் கர்த்தா, யாகத்துக்கான உடைகளை அணிந்திருப்பார். யாகம் நிறைவடைந்ததும் அவப்ருத ஸ்நானம் செய்த பின்னரே வழக்கமான உடைகளை அணிவார். இங்கே அவபிரதம் ஆட்டிய என்பது விசுவாமித்திரரை அவப்ருத ஸ்நானம் செய்யவைத்த – அதாவது, விசுவாமித்திரரின் யாகத்தை நிறைவடையச் செய்த – ராமபிரானைக் குறிக்கிறது.
அடுதிறல் என்றால் அழிக்கும் ஆற்றல். அது வீரத்தைக் குறிக்கிறது. அடு என்ற சொல் சமையலையும் குறிக்கும். எனவே, அடுதிறல் என்பதைப் பக்குவப்பட்ட ஆற்றல் என்றும் கொள்ளலாம். இது நல்லோரைக் காக்கும் அறக்கருணையையும் (பக்குவப்பட்ட ஆற்றல்), தீயோரை அழிக்கும் மறக்கருணையையும் (வீரம்) ஒருங்கே வெளிப்படுத்தும் இறை ஆற்றலைக் குறிக்கிறது.