
அயர்வறும் அமரர்கள் அதிபதியைக் கண்டு விட வேண்டும் என்கிற துடிப்பினோடு, பிரமன் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தான். வசிஷ்டர் மரீசி போன்ற அறிவிற் சிறந்த பெருமக்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த யாகத்தினை தரிசிக்க, பலரும் பெருமளவில் குழுமியிருந்தனர்.
இடர்ப்பாடுகள் தொடர்ச்சியாக ஏற்படுவதையும் அவற்றை எம்பெருமான் உடனுக்குடன் போக்கியருள்வதையும் நினைத்துப் பார்த்த பிரமன் தன்னையுமறியாது பரமனைப் போற்றிக் கொண்டிருந்தான்..
வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கான பகவான், விளக்கொளியாய் வந்ததென்ன; அவனே நரசிங்கமாய்த் தோன்றி விரோதிகளான அஸுரர்களை மாய்த்ததென்ன; இவற்றையே அங்கு அனைவரும் வாய்வெருவிக்கொண்டிருந்தனர்.
நல்ல காரியங்களுக்குத் தடைகள் பல ஏற்படுமாம். ஆம்! தடைகள் ஏற்பட்டால் மட்டுமே அது நல்ல காரியம் என்று கொள்க. நல்லது செய்வதென்றால் எத்தனையெத்தனை தடைகள்.. இதே ஒரு தவறைச் செய்ய முற்பட்டால் தடையின்றி நிறைவேறி விடுகின்றதே… இது என்ன விந்தை!
இவ்விஷயங்களைத் தன் மனதில் அசை போட்டபடியே மெய் மறந்திருந்த அயன், இனியும் தனக்கும் வேள்விக்கும் பிரச்சினைகள் வரும் என்று திடமாக நம்பினான். ஆனாலும் அவன் கலக்கமுறவில்லை..
பக்கத்திலே ஒருவர் அயனை விசாரித்தார் .. பிரமனே! இனியும் பிரச்சனைகள் வருமா என்ன ?
நிச்சயமாக வரும்! இது பிரமன்..
கேள்வி கேட்டவர், பிரமனின் இந்த விடையைச் சற்றும் எதிர்பார்த்திராததால், விழிகள் வெளியில் விழுந்திடத் திகைப்புடன் அவனை நோக்கினார்; நடுநடுங்கிய குரலில், அயனே அத்தடைகளைச் சமாளிக்க நீ தயாராக இருக்கிறாயா என்றார்!
நிச்சயமாக இல்லை! ஸரஸ்வதியை, அவள் கோபத்தினை, அவள் செயல்களை முறியடிக்கும் ஆற்றல் எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை..
இவ்வாறு பிரமன் பதில் சொல்லவும், வினவினவர் விக்கித்துப் போனார்!
சிரித்தான் அஜன் (பிரமன்)!
ஐயா! நான் தயாரில்லை, என்னால் சமாளிக்க முடியாது என்று தான் கூறினேனேயொழிய, எம்பெருமானால் ஆகாது என்று சொன்னேனா ?!
அவன் நம்மை மீண்டும் மீண்டும் ரக்ஷித்திருந்தும், நாம் சந்தேகிக்கலாமா ? என்னைக் கருவியாய்க் கொண்டு இக் காஞ்சீ மாநகர் முழுவதும் தான் நிறைந்திடவன்றோ அவன் திருவுள்ளம் பற்றியிருப்பது!
அசரீரியாய் அவன் ( பரமன் ) பேச, அயமேத வேள்வியை ஆரம்பித்தேன் அடியேன்..ஆம் ஆரம்பத்திலிருந்தே தடைகள் தான்..ஆனால் அவன் துணையால் தடைகள் தூளாகின்றன அன்றோ!
( நமக்கும் இந்த நம்பிக்கை வேண்டும்! எத்தனை பிரச்சினைகள் ஏற்பட்டாலும்; அவன் துணையிருக்கிறான் என்கிற தெளிவு ..அது முக்கியம்..அவன் நிச்சயமாகக் கைவிட மாட்டான்)
பிரமன் நிதானமாக வார்த்தைகளை உதிர்த்தான்.. இப்பொழுது என் எதிர்பார்ப்பெல்லாம் அவன் அடுத்து என்னவாகத் தோன்றப் போகிறான்! அவனை நான் எவ்விதம் துதிக்கப் போகிறேன் என்பது தான்!
விளக்கொளியாய்,ஸிம்ஹேந்திரனாய்த் தோன்றியவனுடைய அடுத்த எழிற்கோலமென்ன; இது தான் என்னுடைய விசாரம்!
பிரமன் இவ்விதம் பேசவும், அவனுடைய உறுதிப்பாட்டினைக் கொண்டாடியபடி வசிஷ்டர் அவனருகே விரைந்தார்!
அஜனே! இறைவன் பால் நீ கொண்டிருக்கும் விச்வாஸம் நிச்சயம் உனக்கு நன்மையே செய்யும்..உன்னால் எங்களுக்கும் மேன்மையே என்றார்!
மேலும், ஸரஸ்வதி.. என்று தொடங்கி மேலே பேச முயன்றவரைக் கை கூப்பித் தடுத்திட்டான்.
ஆத்திரமுடையவர்களுக்கு புத்தி குறைவு என்பார்கள்.. இங்கோ புத்தியே ( புத்தி -அறிவு ) ( = ஸரஸ்வதி ) கோபித்துக் கொண்டு சென்றுள்ளது! அவள் நிச்சயமாக சும்மா இருக்க மாட்டாள்!
ஆனால்..கவலை வேண்டாம்..ஸ்ரீ ஹரி பார்த்துக் கொள்வான் . பிரமனின் இவ்வுரையைக் கேட்டு அனைவரும் மயிர்க்கூச்செறிந்தவர்களாய் பரமனுக்குப் பல்லாண்டு பாடினர்!
அங்கு தன்னாற்றங்கரையில் ஸரஸ்வதி அஸுரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தாள்!
சம்பராஸுரன், பற்பல அஸுரர்கள் சென்றும் வேள்வியைக் குலைக்க முடியவில்லை.. அடுத்து.. ? சட்டென நினைவிற்கு வந்தவளாய், கலையரசி, காளியின் பெயரை உச்சரித்தாள்.
காளியும் ஸரஸ்வதி முன்பு தோன்றினாள். ஆணையிட்டாள் ஆழ்கலையழகி! ஹே! காளி ..உடனடியாக நீ பலரையும் அழைத்துக் கொண்டு பிரமன் வேள்வி நடத்துமிடம் சென்று, அவ்வேள்வியைக் கெடுப்பாய் என்றாள்!
காளியும் உடனே புறப்பட்டாள்! பல அஸுரர்கள் புடை சூழ!
அட்டஹாஸச் சிரிப்புடன், வெளியில் தொங்கவிடப்பட்ட, கூர்மையான கோரைப் பற்கள் இரத்தக் கறையுடன் விளங்கிட, பற்பல ஆயுதங்களைத் தாங்கியபடி, தீ விழி விழித்தபடி, யாக பூமியில் காளி தோன்றிடவும், அதிர்ந்தனர் அனைவரும்..
ஆனால் பிரமன் மட்டும், அக்கணம் காளியின் எதிர்த்திசை நோக்கியபடி புன்னகை தவழக் கைகூப்பியபடி நின்றிருந்தான்!
இம்முறை, பிரச்சினை வந்த பின்பு அல்ல; காளி தோன்றுவதற்குச் சரியாக ஒரு கணம் முன்னதாகவே எம்பெருமான் தோன்றியிருந்தான்!
அவனைத் தான் பிரமன் கை கூப்பித் தொழுது கொண்டிருந்தான்!
“ஓவி நல்லார் எழுதிய தாமரையன்ன கண்ணும் ஏந்தெழிலாகமும் தோளும் வாயும் அழகியதாம்! ” ..இவர் யார் ?? என்று அனைவரும் வாய் பிளந்து நின்றிருந்தனர்!
யார் அவர் ??
***
பிரமனையும், அவனுடைய வேள்வியையும் ரக்ஷிக்க, எம்பெருமான், எட்டுத் திருக்கரங்களுடன் பல்வகை ஆயுதங்களைத் தாங்கினவனாய்த் தோன்றினான்!
மலர்ந்த முகத்துடன், காளியையும் அவளுடன் வந்த கொடிய அரக்கர்களையும் எதிர்கொண்டான் .. கணப்பொழுதில் வெற்றி இறைவன் வசமானது! காளி விரட்டியடிக்கப்பட்டாள். அரக்கர்கள் மாய்ந்தொழிந்தனர்!
பிரமனுக்காக விரைந்து வந்தவன், வந்த காரியத்தையும் விரைவாக முடித்திட்டான்! பிரமன் பகவானையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். எத்தனை அழகு! ரசிக்காமல் இருக்க முடியுமா ?!
“பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” தன்னைக் கண்ட ஆடவரையும் பெண் தன்மை கொள்ளச் செய்யும் பேரழகன்றோ அது!
என் பால் எத்தனை அன்பு! எட்டுத் திருக்கரங்களைக் கொண்டு என்னை ரக்ஷிக்க ஒடோடி வந்துள்ளானே!
சித்திரத்திலே வரையப்பட்டது போன்ற அவயவங்களை ( உடல் உறுப்புகளை ) கொண்டிருக்கிறானே! மந்மதனுமன்றோ இவனிடம் தோற்றுப் போவான்! அழியா அழகனை, நித்ய யுவாவை எத்தனை ஏத்தினாலும் தகும்!
ஓவியம் வரைவதிலே தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு வரையப்பட்ட ஓவியத்தைப் போலே, தாமரையையொத்த கண்ணும், கோல மேனியும், ( எண் ) தோளும், வாயும் ..நிறை கொண்டதென் நெஞ்சினையே என்றான் அயன்!
திருவரங்கக் கலம்பகத்திலே, பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஸ்வாமியின் அனுபவம் இவ்விடத்திலே நினைக்கத் தகுந்தது!
திருவரங்கனிடத்திலே அசஞ்சலமான பக்தியுடையவர் அவர்! திருவரங்க நாதனை சித்திரமாக வரைய ஆசைப்பட்டார்! வரைந்தும் முடித்தார்!
ஓவியம் அழகாகத் தான் இருந்தது .. அச்சு அசல் அரங்கனை அந்த ஓவியம் காட்டியது . ஆனாலும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிக்கு த்ருப்தியில்லை..
ஓவென அழுதேவிட்டார்!
காரணம் கேட்டபொழுது அவர் சொன்னது இது தான்;
“வாழும் மவுலித்துழாய் மணமும் மகரக் குழை தோய் விழியருளும்
மலர்ந்த பவளத் திருநகையும் மார்விலணிந்த மணிச்சுடரும்
தாழுமுளரித் திருநாபித் தடத்துளடங்குமனைத்துயிரும்
சரண கமலத்துமை கேள்வன் சடையிற் புனலும் காணேனால்
ஆழமுடைய கருங்கடலின் அகடு கிழியச் சுழித்தோடி
அலைக்கும் குடக்காவிரி நாப்பண் ஐவாயரவில் துயிலமுதை
ஏழுபிறப்பிலடியவரை யெழுதாப் பெரிய பெருமானை
எழுதவரிய பெருமானென்றெண்ணாது எழுதியிருந்தேனே! ”
படம் வரைந்தாயிற்று! பார்க்கிறவர்களும் தத்ரூபமாக இருப்பதாகச் சொல்லுகின்றார்கள்!
பின்பு குறையென்ன; ஏன் ஐயங்கார் ஸ்வாமி அழுகிறார்; காரணம் இது தான் ..
படத்தில் இறைவனுக்குத் துழாய் மாலை சாற்றப் பட்டிருக்கிறது..ஆனால் வாசனை வரமாட்டேன் என்கிறதே! துழாய் முடியில் இருந்து நாற்றம் ( வாசனை ) வரவில்லையே என்று ஏங்குகிறார்..
படத்தில் பெருமானுடைய விழிகள் பேசுகின்றன! வாஸ்தவம் தான்..ஆனால் விழி(களின்) அருள் வெள்ளமிடவில்லையே! என் செய்கேன் நான்!
விம்மி வெளி விழுகின்ற சிரிப்பினை, அவ்வனுபவத்தினை இப்படம் தரவில்லையே!
படத்திலிருக்கும் நீலநாயகம் ஒளி வீசவில்லையே! ஞாலமேழுமுண்ட திருவயிரன்றோ! அது காணக் கிடைக்கவில்லையே!
அரங்கன் திருவடிகளே தஞ்சம் என்கிற நினைவோடு, அவனுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கியிருக்கும் பெருமையுடைய சிவன், அவன் சிரஸில் பாய்ந்தோடும் ஹரி பாதோதகமென்னும் கங்கையைக் காணவில்லையே படத்தில்!
உபய காவேரி மத்யத்தில், ஐந்தலை அரவில் ( நாகத்தில் ) துயில் கொள்ளும் எம்பெருமான், அடியவர்களுக்கு முக்தி தருபவன்!
பெரிய பெருமாள் என்று போற்றப்படுமவன்!
ஓவியத்தெழுதவொண்ணா ( ஓவியத்தில் காட்டிட முடியாத பேரழகன் ) உருவமுடையவன், என்பதனை மறந்து அவனைச் சித்திரமாக வரைந்து விடலாம் என்று நினைத்திருந்தேனே! என்னே என் அறியாமை என்று தம்மையே நொந்து கொள்கிறார்!
அட்டபுயகரத்தெம்பெருமானைக் கண்ட பிரமன் நிலையும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஸ்வாமி நிலையை ஒத்திருந்தது!
திருமுகமண்டலத்தைக் காண்பேனா! திரு மூக்கு, மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ ?! அறியேன் ( கற்பக வ்ருக்ஷத்தின் கொடி, கொழுந்து போன்ற திருமூக்கு ) கோவைச் செவ்வாயைக் காண்பேனா ?!
எதனை இயம்புகேன்..எதனை விடுகேன் ?!
திண் கைம்மா துயர் தீர்த்தவன் ( கஜேந்த்ரன் என்கிற ஆனையைக் காத்தவன் ) எண் கையனாய் என் முன் நிற்பதே! என்று கதறினான் பிரமன் .
“ஸ பீட்யமாநோ பலிநா மகரேண கஜோத்தம : ப்ரபேதே சரணம் தேவம் தத்ரைவ அஷ்டபுஜம் ஹரிம் ” என்று, அன்று ஆனைக்கு ( இவன் ) அருளையீந்த சரித்திரத்தினை புராணமும் பேசுகின்றது!
ஸத்துக்களுக்கு ( நல்லவர்களுக்கு ) என்றுமே ஆப்தன் ( நம்பிக்கைக்குரியவன், வேண்டியவன் ) நீ தானே!
எல்லை காண முடியாத நற்பண்புகள் கொண்டவனன்றோ நீ!
“ஆதி கேசவன் ” என்கிற திருநாமத்தோடு நீர் இங்கு நித்திய வாஸம் செய்வது என் போல்வாரைக் காக்கத் தானே! என்று கடகடவெனத் துதிக்கலானான் பிரமன்!
புராணம் இத்தலத்தெம்பெருமானை ( அஷ்டபுஜப் பெருமாளை) கஜேந்த்ரனைக் காத்தவனாகவும் போற்றுகின்றது!
தொட்டபடையெட்டும் என்கிற பேயாழ்வார் பாசுரம் இத்தலத்து எம்பெருமானின் கஜேந்த்ர ரக்ஷண வ்ருத்தாந்தத்தையே பேசுகின்றது!
தீய ஸ்வப்னங்களால் உண்டாகும் பயம் நீங்க கஜேந்த்ர வரதனான ” அஷ்டபுஜப் பெருமாளே ” புகல் என்பதறிவீர்களா ??
அப்படியா என்று நீங்கள் புருவங்களை உயர்த்தியிருப்பின், அந்நிலையிலேயே அடுத்த பகுதிக்காகத் காத்திருங்கள்!!!
அடுத்த பகுதியில்… பீஜகிரி க்ஷேத்ர மஹிமை, திருப்பாற்கடல் க்ஷேத்ரப் பெருமை, முக்யமான திருவெஃகா மஹிமை..இவை வெளிவரும்!
அதன் பின்பு தான் அத்திகிரியப்பனின் அருட்பார்வை வெள்ளமிடும்!
***
திருவட்டபுயகரம் – காஞ்சியில் வைகுந்த வாசலுடன் விளங்கும் ஒரே க்ஷேத்ரம் ! எட்டுத் திருக்கரங்களுடன் பகவான் சேவை ஸாதிக்கும் தலம்.
வலப்புறம் உள்ள நான்கு கரங்களில் சக்கரம் , வாள் , மலர் , அம்பு ஆகியவற்றையும், இடப்புறம் உள்ள நான்கு கைகளில் சங்கு, வில், கேடயம் , தண்டு ஆகியவற்றை ஏந்தினபடி இங்கு இன்றும் நம்மைக் காத்து நிற்கிறான் !
ஆதி கேசவன் என்றும் கஜேந்த்ர வரதன் என்றும் அட்டபுயகரத்தான் என்றும் இறைவன் போற்றப்படுகின்றான்..
இந்தத் தலத்திற்கே ” அஷ்டபுஜம் ” என்று பெயர் ! இங்கு உறைகின்றமையால் பெருமான் அட்டபுயகரத்தான் என்றழைக்கப்படுகின்றான் !
“பரகாலன் பனுவல்” ( திருமங்கையாழ்வார் பாசுரம் ) கொண்டு இத்திருத்தலத்தினை நாம் அனுபவிக்கலாம்..
கலியனுக்கு , எம்பெருமான் திறத்தில் அளவற்ற காதல் ! அக்காதல் அவரை தாமான தன்மை ( ஆண் தன்மை ) இழக்கச் செய்து , ஆன்மாவின் உண்மை நிலையான பெண் தன்மையில் பேசச் செய்தது ! அப்பொழுது அவருக்கு ” பரகால நாயகி ” என்று பெயர் !
பெண் தன்மையில் பாடும் பொழுது , பெண்ணான தான் அவனைப் பிரிந்து படும் வேதனைகளை , தானே ( ஒரு பெண்ணாக ) சொல்லுவதாகவும் தன் தாய் சொல்லுவதாகவும், தன் தோழி சொல்லுவதாகவும் பாடுவர் !
திருவிடவெந்தை என்கிற திருத்தலத்தைப் பாடும் பொழுது , மகள் ( பரகால நாயகி ) படுகின்ற வேதனைகளைக் கண்ட அவள் தாயார் , இறைவனைக் குறித்து , என் பெண் உன்னைப் பிரிந்து இத்தனை அல்லல் படுகின்றாளே ! இடவெந்தை ஈசனே !! என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறாய் ?!! உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் ?! என்று கேட்பதாக அத் திருமொழி அமைந்துள்ளது !!
பெண் தன்மையை அடைந்த ஆழ்வார் படும் சிரமங்களைக் கண்ட பகவான் , அவரைத் தேற்ற ” எட்டுத் திருக்கைகளுடன் ” மிகவுமினியவனாய் காஞ்சியில் ஆழ்வாருக்கு முகம் காட்டினான் !!
பரகால நாயகி , அவனைப் பார்த்து , இத்தனை அழகாயிருக்கிறானே !! இவன் யாரோ என்று அறிந்து கொள்ள விரும்பி, அவனை நேரடியாக வினவாமல் , தள்ளி நிற்கிற ஒருவரிடம் ;
அதோ அங்கே எட்டுத் திருக்கரங்களுடன் பேரழகனாய் ஒருவன் நிற்கிறாரே ; யார் அவர் ?? என்று கேட்டார்.. உடனே இவ்வெம்பெருமான் தானாகவே முன் வந்து ” நான் தான் அட்டபுயகரத்தேன் ” என்று பதில் சொன்னானாம் !!
நான் அஷ்டபுஜன் என்று சொல்லியிருக்கலாம் ! அப்படிச் சொன்னால் நான் தான் எம்பெருமான் என்று சொன்னதாக ஆகும் !! பெருமானுக்கு அதில் விருப்பமில்லை போலும் ! தன்னை வேறொருவனாகப் பொய்யுரைக்கவும் அவன் விரும்பவில்லை !!
எனவே சாமர்த்தியமாக, “அஷ்டபுஜ க்ஷேத்ரத்திலே இருப்பவன் நான் ” என்றானாம் !!
எனவே தான் இப்பதிகத்தில் பாசுரந்தோறும் ” இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே ” என்று வருகின்றது !
வேதாந்த தேசிகனும் தம்முடைய அஷ்டபுஜாஷ்டகத்தில் , இவ்வெம்பெருமானை அழைக்கும் பொழுது “அஷ்டபுஜாஸ்பதேச ” ( அஷ்டபுஜத்தை இருப்பிடமாக உடையவனே , ஈசனே ! ) என்றருளினார் !
ஆக இத்திருத்தலத்திற்கே அஷ்டபுஜம் என்கிற பெயர் உண்டு என்பதறிந்தோம் !
பிரமன் தொடங்கி பரகால நாயகி வரை அனைவரையும் தன் வசமாக்கிக் கொண்டவன் இவ்வெம்பெருமான் !
அடியவர்களைக் காப்பதைத் தன் பேறாகக் கருதும் இயல்வினன் !
பிரமன் அவன் பெருங்கருணையைத் துதிக்கலானான்..
பெருமானே ! ” உன்னைத் துதிக்கத் தோன்றின துதிக்கை முகனை “( யானை – கஜேந்த்ரன் ) ரக்ஷித்து , கஜேந்த்ர வரதன் என்று பெயர் பெற்றவனன்றோ நீ ! என்றான் !
அழகான சரித்திரம் ..
ஒரு அரசன் , கர்ம வசத்தால் யானை ஆயினன் ! அரசனாய் இருந்த பொழுது ஒரு நாளும் எம்பெருமானைத் துதிக்கத் தவறியதில்லை ! இறையருளால் யானையாய் உருமாறின பின்பும் தன்னிலை மறவாமல் நாடோறும் மலர்களைக் கொய்து வந்து , எம்பெருமானைப் பூசித்து வந்தான் ..
ஒரு நாள் நீர் நிலையில் தாமரை மலர்களை கொய்வதற்காக அந்த யானை முயல , அந்தச் சமயத்தில் அங்கிருந்த பெரிய முதலை ஆனையின் காலைக் கவ்வியது !
கலங்கிப்போனது களிறு ! தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனை முயன்றும் முடியவில்லை ! பிடிகளும் ( பெண் யானைகளும் ) அதனைக் காக்க முயன்றன ! ஆனால் தோல்வியே மிஞ்சியது !!
ஆயிரம் தேவ வருஷங்கள் பெரிய போராட்டம் தான்..இறுதியில் தன் முயற்சி தன்னைக் காக்காது என்றுணர்ந்த யானை ” நாராயணா ! ஓ மணிவண்ணா ! நாகணையாய் ! வாராய் என்னிஆரிடரை நீக்காய்” என்று அரற்றியது ..
“ஆதி மூலமே” ” ஆதி கேசவா ” என்று உரக்கப் பிளிறியது !
மற்ற தேவதைகள் ” நாஹம் நாஹம் ” ( (ஆதிமூலம் ) நானில்லை ; நானில்லை ) என்று பின் வாங்கினர் ..
இவ்வெம்பெருமான் தான் ஓடோடி வந்து முதலையை முடித்து , ஆனையைக் காத்தான் !
யானை இறைவனுக்கு நன்றி செலுத்தியது ! அஷ்டபுஜப் பெருமாள் தன்னுடைய உத்தரீயத்தினாலே ( மேலாடையினாலே ) தன் வாயில் வைத்து ஊதி யானையினுடைய காயங்களுக்கு ஒத்தடம் கொடுத்தானாம் !!
யானை ஆனந்தக் கண்ணீர் பெருகப் பேசியது ! ஹே ! ஆதி கேசவா ! உன்னைக் கொண்டாடுவேனா ?! உன் அன்பினைக் கொண்டாடுவேனா ?! என்னைக் காக்க நீ வந்த வேகத்தைக் கொண்டாடுவேனா ?!
பராசர பட்டர்
பகவதஸ்த்வராயை நம : என்று அடியவனான யானையைக் காக்க அவன் ஓடி வந்த வேகத்திற்குப் பல்லாண்டு பாடுகிறார் !!
இறைவா.. நீ ” அநாதி : ” ( விஷ்ணு ஸஹஸ்ரநாமம் – 941 ) என்று ஏன் அழைக்கப்படுகிறாய் தெரியுமா ?
மற்றைய தேவர்கள், உன்னைப் புகழ்ந்தாலும் , அவ்வப்பொழுது தாங்களே உயர்ந்தவர்கள் என்று தலைக்கனத்தாலே பிதற்றுகின்றார்கள் ..
“அருளையீ என்னம்மானே ! என்னும் முக்கணம்மானும் பிரமனம்மானும் தேவர் கோனும் தேவரும் ஏத்தும் அம்மான் ” அன்றோ நீர் !
அப்படியான தேவர்களுக்கு நீ அல்ப பலன்களையே வழங்குகிறாய் !
உன்னையே எல்லாமுமாகக் கொண்டிருக்கும் எங்களுக்கோ உன்னையே வழங்குகின்றாய் !
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் அன்றோ நீ !
எனவே தான் நீ அநாதி என்றழைக்கப் படுகிறாய் !
( ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் , சப்த ஸஹ : ( 912 ) என்கிற திருநாமம் தொடங்கி ருசிராங்கத : ( 945 ) என்கிற திருநாமம் வரை ” ஆனை காத்த கண்ணன் ” விஷயமே என்பது ஸ்ரீ பராசர பட்டர் திருவுள்ளம் !!
காலை கண் விழித்தவுடன் இந்த கஜேந்த்ர ரக்ஷண வ்ருத்தாந்தத்தையும், கஜேந்த்ர வரதனான அஷ்டபுஜப் பெருமானையும் நாம் சிந்தித்தால் , தீய கனவுகளினால் நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதாம் !!
” உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ்ஸ்வப்ந நாசன : ” என்கிறது ஸஹஸ்ரநாமமும் !!
முன்பே ஆதி கேசவன் , கஜேந்த்ர வரதன் என்று அழைக்கப்பட்டவன் இன்றும் அஷ்டபுஜப் பெருமானாய் நம்மைக் காக்கிறான் !!
பிரமன் வேள்வியைத் தொடர்ந்தான் ..
தோல்வியுற்ற காளி தன் தலையைத் தொங்கவிட்டபடி ஸரஸ்வதியிடம் சென்றாள் !
ஸரஸ்வதி அடுத்த பாய்ச்சலுக்குத் தயாரானாள் !! அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தாள் ..
நாமும் அடுத்த பகுதிக்குக் காத்திருப்போம் !!
எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி
குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

With his Thiruttagappanaar (in the framed photo )



