To Read it in other Indian languages…

Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருப்புகழ் கதைகள்: 14. பாற்கடல் கடைந்தது!

திருப்புகழ் கதைகள்: 14. பாற்கடல் கடைந்தது!

thirupugazhkathaikal 1
thirupugazhkathaikal 1

திருப்புகழில் காணப்படும் கதைகள் பகுதி 14
பாற்கடல் கடைந்த கதை
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

முத்தைத்தரு பத்தித் திருநகை திருப்புகழில் இடம் பெறும் ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு என்ற வரியில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்ற கதை இடம் பெறுகிறது.

பகவான் மகாவிஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் முதலாவதாக அவர் எடுத்த அவதாரம். மச்ச அவதாரம். நீரில் வாழும் மீனாக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரண்டாவதாக நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமையாக அதாவது கூர்மமாக அவதாரம் எடுத்து பாற்கடலில் அமிர்தம் பெறுவதற்காக தேவ அசுரர்களுக்கு உதவி செய்தார்.

அதே மகாவிஷ்ணு தான் அமிர்தம் கிடைத்த உடன் அதை பகிர்ந்து கொடுப்பதற்காக மோகினியாக அவதரித்தார். ஆமை அற்புதமான உயிரினம் என்பதை அவர் ஆமையாக அவதரித்தார் என்கின்றன புராணங்கள். ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

உருவு கண்டு இகழாமல், அதன் பெருமை கண்டு போற்ற வேண்டும் என்பதே கூர்ம அவதாரத்தின் நோக்கம். பணிவு கொண்டு மலை சுமந்த கூர்ம மூர்த்தி பாற்கடலில் இருந்து அனைத்தையும் மீட்டு கொடுத்தார். திருமாலின் கூர்ம அவதாரத்தின் போது தான். இந்த கூர்ம அவதார நிகழ்வுகள் அனைத்தும் ஏற்பட்டன.

கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தில் கருங்கல் சிற்பமாகவும், பாங்காங்கின் விமான நிலையத்தில் வண்ணமிகு சுதைச் சிற்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம், ஸ்ரீகூர்மம் என்ற ஊரில், கூர்ம அவதாரத்துக்கான கோவில் இருக்கிறது. கருவறையில், ஆமை வடிவில் அருள்பாலிக்கிறார் பெருமாள்.

சுவேத மன்னனால் கட்டப்பட்ட இவ்வாலயம் அதன் பின் வந்தவர்களால் திருப்பணி செய்யப்பட்டது. சுவேத மன்னனுக்கு அருளிய திருமால், இத்தலத்தில் ஸ்ரீகூர்ம நாயகி தாயாருடன் ஸ்ரீகூர்மநாதராக அருள்புரிகிறார். இறைவனின் திருமுகத்தில் உள்ள திருநாமம் வெள்ளித் தகட்டிலும், விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்ராமத்தாலும் அமையப் பெற்றிருக்கிறது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இந்த ஆலயத்தில் ஆமைகளும் வளர்க்கப்படுகிறது. கூர்மாவதாரத்திற்கு என உலகில் உள்ள ஒரே கோவில் இதுதான்.

தேவலோகத்துப் பெண் ஒருத்தி, மகாலட்சுமி கொடுத்த மலர் மாலையைத் தனது வீணையில் சுற்றிக் கொண்டு பிரம்ம லோகம் வழியாக சென்றாள். அப்போது வழியில் துர்வாச முனிவரைச் சந்தித்தாள். அவரை வணங்கியவள், தன்னிடமுள்ள மாலையை அவரிடம் கொடுத்தாள். அதைப் பெற்றுக்கொண்ட முனிவர், அந்த மாலையுடன் தேவலோகம் நோக்கிச் சென்றார்.

parkadal
parkadal

எதிரே தேவேந்திரன் யானை மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். அவனிடம் அந்த மலர் மாலையைக் கொடுத்தார் முனிவர். தேவேந்திரனோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி, யானையின் தலையில் வைத்தான். யானையோ தன் துதிக்கையால் அந்த மாலையை எடுத்துக் கீழே போட்டு காலால் மிதித்தது.

துர்வாசருக்கு கடும் ஆத்திரம் வரவே, லட்சுமி தேவியின் பிரசாதத்தை அவமதித்ததால், மூன்று உலகங்களிலும் லட்சுமி கடாட்சம் அழியட்டும் என சாபமிட்டார். இந்திரன் பதறிப் போய் முனிவரின் காலில் விழுந்தான்; ஆனால், துர்வாசர் கண்டு கொள்ள வில்லை. லட்சுமி கடாட்சம் இல்லாததால், உலகமே வறுமையில் ஆழ்ந்தது.

இதனை அறிந்த அசுரர்கள் தேவேந்திரனின் கோட்டைக்குள் புகுந்து போரிட்டனர். போரில் அசுரர்கள் வீழ்ந்தாலும், அசுர குருவான சுக்ராச்சாரியாரின் சஞ்சீவி மந்திரத்தால், அவர்கள் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள். ஆனால் தேவர்களில் இறந்தவர்களை உயிர்ப்பிக்க வழியில்லை. இதனால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

இதனைக் கண்ட தேவேந்திரன், பிரம்மன் தயவை நாடினான். பிரம்மன், மகா விஷ்ணுவிடம் தேவேந்திரனை அழைத்துச் சென்றார். அதற்கு விஷ்ணுவோ அமிர்தம் பருகினால் மட்டுமே சாகா வரம் பெற முடியும் என்றார். அதற்கு பாற்கடலை கடைய வேண்டும் என்றும் ஆலோசனை சொன்னார்.

parkadal2
parkadal2

அசுரர்களை உதவிக்கு அழைத்த தேவர்கள் அவர்களுக்கும் அமிர்தம் தருவதாக கூறினர். வாசுகி பாம்பை கயிறாக்கி மேரு மலையை மத்தாக்கி கடைந்தனர். அசுரர்கள் தலை பகுதியிலும் தேவர்கள் வால் பகுதியிலும் பிடித்துக்கொண்டனர் மலை அசையவில்லை. உடனே மகாவிஷ்ணு ஆமையாக உருமாறி கடலுக்கு அடியில் சென்று மலையை தன் முதுகில் சுமந்தார்.

பாற்கடலில் இருந்து வரிசையாகப் பல பொக்கிஷங்கள் வந்தன. அதில் இருந்து பல நல்லவைகளை தேவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். மகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்தார். காமதேனு, ஐராவதம், கற்பகம் ஆகிய பல பொருட்கள் தேவர்களிடம் சென்றன. வருணி, சுராதேவி, அழகு மங்கையர் களை அசுரர்கள் கைப்பற்றினர். கடைசியாக அமிர்த கலசம் தாங்கி தன்வந்திரி பகவான் தோன்றினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 11 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.