spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: தமிழ் பாடுவோர் பின் தாமோதரர் சென்ற வரலாறு!

திருப்புகழ் கதைகள்: தமிழ் பாடுவோர் பின் தாமோதரர் சென்ற வரலாறு!

- Advertisement -
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 37
சருவும்படி (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

தமிழ் பாடுவோர் பின் தாமோதரரர் சென்ற வரலாறு

திருமழிசையாழ்வார் காஞ்சீபுரத்தில் வரதராஜப் பெருமாளைச் சேவித்துக் கொண்டு தங்கியிருந்த நாளில், ஓர் அன்பர் அவருக்குப் பால் கொண்டு வந்து கொடுக்க, அதனை ஆழ்வார் பருகினார். அப்பாத்திரத்தில் எஞ்சி நின்ற பாலை அந்த அன்பர் பிரசாதமாக நினைத்து, தம் மனைவிக்குத் தர, அதனை அவ்வம்மையர் உண்டனர். அதன் காரணமாக அவர்களுக்கு ஓர் அழகிய புத்திரன் தோன்றினான். அப்புத்திரனுக்கு கணிக்கண்ணன் என்று பெயர் சூட்டினர். அக்குமாரன் இளம் பருவம் முதல் திருமழிசை ஆழ்வாருக்குத் தொண்டாற்றி வந்தனன்.

ஒருநாள் கணிக்கண்ணர் கச்சி வரதருடைய திருவாலயம் சென்று வரதராஜரைச் சேவித்து, ஆலயத்தை வலம் வந்து திரும்புங்கால், அத் திருவாலயத்தில் கைங்கரியம் புரிந்து கொண்டிருந்த ஒரு கிழவியைக் கண்டார். அக்கிழவி மூப்பினால் உடல் தள்ளாடி நடுக்குற்றிருந்தும் சுவாமி கைங்கரியத்திலுள்ள பக்தியால் தன் சிரமம் நோக்காது திருப்பணி செய்து கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடன் கணிக்கண்ணருக்கு கருணை மேலிட்டது.

இக்கிழவி உடல் தளர்ந்து துன்புறுகின்றாளே? இவள் இளமைப் பருவத்தை அடைந்தால் இன்னும் இறவன் திருப்பணியில் நன்கு ஈடுபட இயலுமே என எண்ணி, காஞ்சி வரதரை மனதில் நினைத்து, தன் திருக்கரத்தால் கிழவியின் முதுகைத் தடவினார். உடனே அவள் கிழத் தன்மை மாறி இளமைப் பருவமடைந்து, கட்டிளங் குமரியானாள்.

கணிக்கண்ணரை வாயார வாழ்த்தினள். அங்கிருந்தோர் அனைவரும் இவ் வதிசயத்தைக் கண்டு இரும்பூதுற்று கணிக்கண்ணரைப் புகழ்ந்தனர். கணிக்கண்ணர் கிழவியைக் குமரியாக்கின செய்தி காட்டுத் தீப்போல் ஊரெங்கும் விரைவிற் பரவியது.

அக்காலத்தில் காஞ்சி மாநகரத்தை அரசாண்டு கொண்டிருந்த பல்லவராயனுக்கு இச்செய்தி தெரிந்தது. வியப்புற்றவனாகிக் கணிக்கண்ணரை அழைத்து தன்னுடைய கிழத் தன்மையையும் போக்கி, தன்னை இளைஞனாக மாற்றுமாறு வேண்டினான். கணிக்கண்ணர் நகைத்து, கிழவி குமரியானது காஞ்சி வரதரின் திருவுளப்படி நிகழ்ந்தது எனவே நீயும் வரதனை வேண்டி நின் விருப்பத்தைப் பெறுவாயாக” என்று கூறினார்.

அதனைக் கேட்ட பல்லவராயன் சினமுற்று, கணிகண்ணனாரை அக்கணமே காஞ்சி மாநகரத்தை விட்டுச் செல்ல ஆணையிட்டான். கணிக்கண்ணன் அதனை ஏற்று, அரசவையை விட்டகன்று தனது குருநாதராகிய திருமழிசையாழ்வார்பால் வந்தார். குருமூர்த்தியின் திருவடி பணிந்து, நிகழ்ந்தது கூறி “அடியேன் இந்நகரத்தை விட்டு நீங்குகிறேன். அனுமதிக்க வேண்டும்” என்று அவர்பால் விடைபெற்றுப் புறப்பட்டார்.

தம் சீடராகிய கணிக்கண்ணர் சென்றவுடனே அவர் பிரிவை ஆற்றாத திருமழிசை ஆழ்வார் எழுந்து சீடர் பிறகே செல்வாராயினார். அந்நேரத்தில் திருமழிசை ஆழ்வார், கச்சி வரதரைக் கண்டு,

கணிகண்ணன் போகின்றான், காமருபூங் கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா – துணிவொன்றிச்
செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன், நீயும் உன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்.

என்ற திருப்பாசுரத்தை அருளிச்செய்தனர். இதனைக் கேட்டவுடனே வரதராஜப் பெருமாள், ஆழ்வார் கூறிய வண்ணமே ஆதிசேடனாகிய பாயைச் சுருட்டிக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்து சென்றார். பெருமாள் செல்ல அவர் பின் மகாலட்சுமியும் சென்றனள். காஞ்சிபுரத்தில் சீதேவி அகல மூதேவி வந்து சேர்ந்தனள். நகரம் பொலிவிழந்தது. நகரமாந்தர்கள் அரசன்பால் வந்து முறையிட்டனர்.

அது கேட்ட மன்னன் நடுநடுங்கி “பெரியோரிடத்தில் பிழை இழைத்தோமே” என்று மனம் வருந்தி மந்திரிமார்களுடன் சென்று வரதரையும் சீதேவியையும் தொழுது திரும்பி வருமாறு வேண்டினன். அவர்கள் ஆழ்வார் திரும்பினாலொழிய நாம் திரும்போம் என்றனர். அரசர் ஆழ்வாரிடம் சென்று அவர் பாதமலரில் வீழ்ந்து “எந்தையே! நீர் திரும்பினால் வரதரும் சீதேவியும் திரும்பி வருவார்கள். ஆதலால் கருணை கூர்ந்து வரவேண்டும்” என்றனன்.

ஆழ்வார் நகைத்து “மன்னா! நமது சீடன் வந்தால் அன்றி நாம் திரும்போம்” என்றனர். மன்னன் கணிக்கண்ணர் கால்மேல் வீழ்ந்து “ஐயனே! நின் பெருமையை உணர்ந்தேன். அடியேன் புரிந்த பிழையை மன்னித்தருளல் வேண்டும். நீர் திரும்பினால்தான் அவர்கள் திரும்புவார்கள். கருணை செய்து நகரத்திற்கு எழுந்தருள வேண்டும்” என்று குறையிரந்தனன்.

கணிக்கண்ணர் கருணை கூர்ந்து குருநாதர்பால் வந்து மன்னனை மன்னிக்க வேண்டுமென்று கூறி நகரத்திற்கு திரும்பினர். சீடன் திரும்பவே ஆழ்வாரும் திரும்பினார். உடனே ஆழ்வார் வரதரை நோக்கித் தான் கூறிய வெண்பாவைத் திருப்பிப் பாடினார்.

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும்-துணிவொன்றிச்
செந்நாப் புலவோன்யான் செலவொழிந்தேன், நீயும் உன்றன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்
.

என்று பாடியவுடனே பெருமாள் சீதேவியுடனே சென்று ஆலயத்தில் பைந்நாகப் பாயை விரித்தமர்ந்தனர். இதனால் பெருமாளுக்குச் சொன்னவண்ணஞ் செய்த பெருமாள் என்று ஒரு திருநாமம் வழங்குகிறது. இதனை வடமொழியில் யதோத்தகாரி என்பர்.

பெருமாளும் ஆழ்வாரும் கணிகண்ணரும் போய் ஓரிரவு தங்கியிருந்த ஊருக்கு ஓரிரவிருக்கை என்று பெயர். இவ்வூர் காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கிறது. இதனைக் குமரகுருபர சுவாமிகளும், தாம் பாடி அருளிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில், எடுத்து வியந்துள்ளார்.

பணிகொண்ட துத்திப் படப்பாய்ச் சுருட்டுப்
பணைத்தோள் எருத்து அலைப்பப்
பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe