October 23, 2021, 1:20 am
More

  ARTICLE - SECTIONS

  திருப்புகழ் கதைகள்: திருச்செந்தூரில்..!

  முன்பு திகிரிவ லம்வந்த செம்பொன் …… மயில்வீரா என்ற வரிகளில் விநாயகப் பெருமான் ஞானப்பழம் பெற்ற கதையக் கூறுகிறார்.

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ் கதைகள் பகுதி 67
  அனைவரும் மருண்டு – திருச்செந்தூர்
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  இத்திருப்புகழ் அருணகிரிநாதர் அருளிய முப்பதாவது திருப்புகழாகும். அனைவரும் மருண்டு எனத் தொடங்கும் திருச்செந்தூர் தலத்துப் பாடலாகும். அருணகிரியார் இத்திருப்புகழில் நோயிலிருந்து தம்மைக் காத்து முருகன் திருவடி மலரில் அடைக்கலம் தர வேண்டுகிறார். இனி பாடலைக் காண்போம்.

  அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப
  அமரஅ டிபின்தொ டர்ந்து …… பிணநாறும்
  அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு
  மவலவுட லஞ்சு மந்து …… தடுமாறி
  மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி
  மனவழி திரிந்து மங்கும் …… வசைதீர
  மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு
  மலரடி வணங்க என்று …… பெறுவேனோ
  தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை
  திகழிரு தனம்பு ணர்ந்த …… திருமார்பா
  ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு
  திகிரிவ லம்வந்த செம்பொன் …… மயில்வீரா
  இனியக னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த
  இறைவகு ககந்த என்று …… மிளையோனே
  எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு
  மிமையவ ரையஞ்ச லென்ற …… பெருமாளே.

  இப்பாடலிலே அருணகிரியார் – தினைப்பயிர் மீது அமர்ந்த கிளிகளை ஓட்டிட புனத்தில் வாழ்ந்த மயில் போன்ற வள்ளியமையாருடைய தென்னங் குரும்பை அனைய இரு தனபாரங்களுடன் கலந்த திருமார்பினை உடையவரே, சிவபெருமான் முன்னிலையில் யானைமுகப் பெருமானுடன் போட்டியிட்டு, உலக முழுவதும் வட்டாகாரமாக வலம் வந்த செம்பொன் நிறமுடைய மயில்வாகனத்தையுடைய வீரமூர்த்தியே,

  குரங்குகள் இனிய கனிகளை உதிர்க்கின்ற நிலத்திற்கு உரியவரே, திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள இறைவரே, குகப்பெருமானே கந்தநாயகனே என்றும் அகலாத இளமையுடையவரே, ஏழு கடல்களும், எட்டு குலமலைகளும், அசுரர்களும் அஞ்சுமாறு, அஞ்சி நின்ற அமரர்களை, அஞ்சேல் என்று உரைத்தருளிய பெருமிதம் உடையவரே!

  எனக்கு உற்ற பெரும் நோயைக் கண்டு யாவரும் அச்சமும் கலக்கமும் அடைந்து “விரைவில் விலகிப் போ” என்று கோபித்துக் கூறியும், நான் அவரை விடாது அவர் அடிப் பின்தொடர்ந்து சென்று, பிணம் போல் நாறுகின்ற அழுகிய சதையுடன் கூடிய நோயுடன், புழுக்கள் வெளிப்படவும் எலும்புகள் நிலைகுலையும் துன்பத்துடன் கூடிய உடம்பைக் கொண்டு தடுமாற்றமுற்று,

  வீடுகள் தோறுஞ் சென்று இனிய சொற்களைக் கூறி, நாள் செல்லச் செல்ல புதிய புதிய இடங்களுக்குச் சென்று உணவு உண்டு, மனம் போன வழியில் திரிந்து அழிகின்ற பழி நீங்குமாறு, நான்கு வேதங்களின் வகைகளை அறிந்து இனிமையாகக் கொஞ்சி ஒலிக்கின்ற சதங்கையுடன் கூடிய தேவரீரது திருவடிகளை வணங்கும் பெரும் பேற்றினை அடியேன் எந்நாள் பெறுவேனோ? – எனப் பாடுகிறார்.

  இந்தத் திருப்புகழில் அருணகிரியார் தொழுநோய் பற்றி விரிவாகக் கூறுகிறார். இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ என்ற வரியில் அருணகிரிநாதர், திரிகூடராசப்ப கவியாரின் திருக்குற்றாலக் குறவஞ்சியின்

  வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
  மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
  கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்
  கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்

  தேன் அருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
  செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
  கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
  குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே.

  என்ற பாடலை நினைவுபடுத்துகிறார்.

  ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு திகிரிவ லம்வந்த செம்பொன் …… மயில்வீரா என்ற வரிகளில் விநாயகப் பெருமான் ஞானப்பழம் பெற்ற கதையக் கூறுகிறார்.

  இக்கதைகளை நாளை காணலாம்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,137FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,581FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-