July 31, 2021, 6:47 pm
More

  ARTICLE - SECTIONS

  என்றென்றும் கண்ணதாசன்!

  “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” - கண்ணதாசன்.

  kannadasan
  kannadasan

  என்றென்றும் கண்ணதாசன்
  – ஜெ.பாஸ்கரன் –

  இன்று கவிஞர் கண்ணதாசன் அவர்களின் 95 வது பிறந்தநாள்!

  தி நகரில் நான் வசித்த ராஜா தெருவிலிருந்து ஒரு தெரு தள்ளி இருந்த ஹென்ஸ்மன் ரோட்டில் (இப்போது அது கண்ணதாசன் சாலை) ஒரு ‘அந்தக்கால பங்களா’ – நடேசன் பூங்காவைப் பார்த்தவாறு, பெருமையுடன் பெரிய மர நிழலில் நின்றுகொண்டிருக்கும்! கார் வைக்க போர்டிகோவும், மேலும், கீழும் அழகிய பால்கனியும் இருப்பது அவசியம்! – ஓட்டு வீடுகளையும், வரிசையாக சட்டம் அடித்து, திண்ணை வைத்து, சார்பு இறக்கிய வீடுகளையும் பார்த்து வளர்ந்த எனக்கு, இம்மாதிரியான ‘புதுமாம்பலம்’ பங்களாக்கள் வியப்பினையும், சில சினிமா நினைவுகளையும் மனத்திரையில் ஓட விடும்! 60 – 70 களின் சிறுவர்களுக்கு (சிறுமிகளுக்கும்!) தமிழ் சினிமாவின் முக்கியமான பெயர்களில் ‘கண்ணதாசன்’ என்ற பெயர் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை – அவருடைய வீடுதான் அந்த பங்களா!

  dr j baskar
  Dr J Baskaran

  ஓரிரு முறை, காலையில் அந்தப் பங்களாவைக் கடந்து செல்கையில், முன் வராந்தாவில் ‘பளிச்’ சென்ற ‘கை வைத்த’ பனியன், தும்பைப்பூ போன்ற வெள்ளை வேட்டியில், பிரம்புக் கூடை நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பார். கையில் அன்றைய தினசரியோ அல்லது டெலிபோனோ (இதற்கென ஒரு ப்ளக் பாய்ண்ட், டெலிபோன் இணைப்புக்கு – அந்தக் கால கருப்பு நிறப் பெரிய போன்) இருக்கும். ‘இவர்தான் கண்ணதாசன்’ என்றெண்ணியபடி, பார்த்துக்கொண்டே போயிருக்கிறேன் – பேசியதில்லை. அந்த வருத்தம் இன்றும் உண்டு!

  இத்தனைக்கும் காந்தி கண்ணதாசன், என் மூத்த சகோதரனுக்கும் , கமால் கண்ணதாசன் எனக்கும் (நான் மருத்துவம் படிக்கையில் அவர் பல் மருத்துவம் பயின்றார்), சீனிவாசன் கண்ணதாசன் என் இளைய சகோதரனுக்கும் நண்பர்கள்!

  திருமதி விசாலாட்சி கண்ணதாசன் அவர்கள் என் அம்மவுடைய ‘கோயில்’ சிநேகிதி!

  ‘நான் ஏன் அவருடன் பேசியதில்லை’ என்ற கேள்விக்கு இன்று வரை எனக்கு விடை தெரியாது. அவருடைய ’வனவாசம்’, ‘சிறு பகுதி’களாக வானதியிலிருந்து வெளி வந்துகொண்டிருந்த ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். ‘உன்னையே நீ அறிவாய்’ (பத்தாம் பாகம்) – ‘விசாலாட்சியம்மா குடுத்தாங்க, இந்தா’ அம்மா கொடுத்த அந்தப் புத்தகம் இன்னும் என் அலமாரியில், பழுப்பு நிறத்தில், அம்மாவின் வாசத்தோடு வீற்றிருக்கிறது!

  endrendrum kannadasan - 1

  வனவாசம் – ’அவன்’ என்று படர்க்கையில் தன்னை விளித்து எழுதிய தன் வாழ்க்கை வரலாறு. முகத்தில் அறைவதைப் போல உண்மைகளை, வாழ்வின் முரண்களை, துரோகங்களை, ஏமாற்றங்களை சின்ன சின்ன வரிகள் அடங்கிய சின்னச் சின்ன பத்திகளில் எழுதிச் செல்வார். ஆழ்மனதில் எழுத வேண்டும் என்ற சிந்தனையை விதைத்தவை அவரது அனுபவம் கொப்பளிக்கும் எழுத்துக்கள் – மருத்துவக் கல்லூரி ஆண்டு மலரில் ‘அவன்’ என்றே ஒரு கவிதையும் இல்லாத, கட்டுரையும் இல்லாத ஏதோ ஒன்றை எழுதியதாய் நினைவு – அப்போதெல்லாம் ‘அவன்’ எழுதிய சோகங்களிலும், தத்துவங்களிலும் மனம் லயித்துக் காணும் ‘சுகம்’ விவரிக்க முடியாதது.

  எதையோ எழுதத் துவங்கி, மனம் எங்கோ ஓடிவிட்டது.

  இரண்டு தினங்களுக்கு முன் காந்தி கண்ணதாசனின் மகன் முரளி கண்ணதாசன் என்னைப் பார்க்க வந்திருந்தார். வழக்கம்போல், ஓர் அருமையான புத்தகத்தைக் கொடுத்தார். “என்றென்றும் கண்ணதாசன்” என்னும் மலரும் நினைவுகள் – அண்ணாதுரை கண்ணதாசன் எழுதிய நினைவுக் கட்டுரைகள் – தினத் தந்தியில் தொடராய் வந்தது!

  “அண்ணாதுரை கண்ணதாசன், தனது இளம் வயதிலேயே திரைப்படத் துறைக்கு வந்துவிட்டார். திரையுலகக் கவியரசரையும், அப்பா கண்ணதாசனையும் ஒருங்கே இணைத்துப் பார்த்தவர். எனது பதிமூன்று சகோதர, சகோதரிகளில் மிகவும் அதிர்ஷ்டக்காரர் இவர்தான். எங்களது பார்வையில் ‘அப்பா கண்ணதாசன்’ மட்டுமே தெரிகிறார்.” காந்தி கண்ணதாசனின் இந்த வரிகள் இப்புத்தகத்தை அழகாக அறிமுகம் செய்கின்றன!

  அவசரமாக திருச்சி செல்ல வேண்டியிருந்ததால், காலை 6 மணிக்குக் கிளம்பினேன் – வேலை முடித்து இரவு 7 மணிக்குச் சென்னை வந்தேன். 422 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட்டேன்! எளிமையான நடையில் நேரில் உரையாடுவதைப் போன்ற உண்மையான, நிகழ்வுகள். பாசமிக்க அப்பா, ஏளனம் செய்தவரே, அவர் முன்னால் தரையில் அமர்ந்து, பாடல் எழுதச் சொன்ன முதலாளி, தன்னை நிந்தனை செய்த ‘தபலா’ அனுமந்துவின் பிள்ளைக்கு வேலை வாங்கிக் கொடுத்தது, காட்சிக்கு மட்டுமல்லாமல், நடிக்கும் நடிக நடிகையர் பெயரே வருவது போல எழுதிய பாடல்கள், சிரமப்பட்டு எழுதிய பாடல், அதிக நேரம் எடுத்துக்கொண்ட பாடல், கவிஞரின் பெயரில்லாமல் வெளிவந்த பாடல்கள், ஒரே மெட்டில் இரண்டு பாடல்கள் என சுவாரஸ்யமான பதிவுகள்; கண்ணதாசன் என்னும் மனிதனின் அறிந்திராத, மென்மையான, வெகுளியான பக்கங்களை சுவையுடன் சொல்கிறார் அண்ணாதுரை.

  எம்ஜிஆர், சிவாஜி, நாகேஷ், சோ, ஶ்ரீதர், பாலசந்தர், பாலாஜி, சின்னப்ப தேவர், பானுமதி, எம் எஸ் வி, அண்ணா, கலைஞர் என சினிமாவில் பிரபலமானவர்களுடன் கவிஞரின் நட்பு, முரண்கள் என விறுவிறுப்பான செய்திகள்.

  ‘சிவந்தமண்’ படம் பார்க்கப் போன பிள்ளைகள், காலை, மாட்னி காட்சிக்கு டிக்கட் கிடைக்காமல் மூன்றாவது காட்சி பார்த்துவிட்டுத் திரும்புகிறார்கள். பிள்ளைகளைக் காணாமல் வாசலிலேயே கவலையுடன் கண்ணதாசன், மனைவியுடன் காத்திருக்கிறார். பிள்ளைகள் வந்தவுடன் விபரம் தெரிய, கூட்டிப்போனவரைக் கடிந்து கொள்கிறார். பின்னர் அவர் செய்ததுதான் வித்தியாசமானது! தன் உறவினர் மூலம் இரண்டு 35 எம்.எம். ப்ரொஜெக்டர் வாங்கி, எந்தப் புதுப் படம் வந்தாலும், முதல் நாளே ஒரு பிரதி வாங்கி, வீட்டின் மொட்டை மாடியில் திரையிட ஏற்பாடு செய்தாராம்!

  “விழியே கதை எழுது” – கண்ணதாசன் எழுதி, எம் எஸ் வி இசையில் ஒலிப்பதிவாகிவிட்டது. அப்போது கவிஞருக்கும், எம் ஜி ஆருக்கும் ஏதோ மனஸ்தாபம். ‘பரவாயில்லை, வாலி எழுதியதாகச் சொல்லிவிடுங்கள்’ என்கிறார் கவிஞர். பாட்டை முழுதும் கேட்ட எம் ஜி ஆர், ‘பாட்டை எழுதியவர் யார்?’ என்கிறார். “வாலி” என்கிறார் ஶ்ரீதர். “இருக்கவே முடியாது. இது கண்னதாசன் பாட்டு” என்கிறார் எம்.ஜி.ஆர். வேறு வழியின்றி ஶ்ரீதர் உணமையைச் சொல்ல, “ஆயிரம் பாட்டு வைத்தாலும், கண்ணதாசன் பாட்டை நான் கண்டுபிடித்து விடுவேன் – அவர் நடை எனக்கு அத்துப்படி” என்று சொல்லி, ‘சினிமாவிவில் எனக்கொன்றும் அவருடன் மன வேறுபாடில்லை – இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது. வைத்துக்கொள்ளலாம்’ என்கிறார். பின்னர் அந்தப் பாடலின் வெற்றி எல்லோரும் அறிந்ததே.

  கண்ணதாசன் என்னும் மனிதனின் மனித நேயம் வெளிப்படும் கட்டுரைகள் – அண்ணாதுரைக்கு வாழ்த்துகள்!

  கவிஞரின் பிறந்தநாளில் அவர் நினைவாக எழுத, அவரைப் பற்றிய புத்தகம் வாசிக்க நேர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தக் கட்டுரைக்கு, அண்ணாதுரையின் புத்தகத் தலைப்பையே இரவல் வாங்கியிருக்கிறேன்!

  “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” – கண்ணதாசன்.

  உண்மைதான்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  28FollowersFollow
  74FollowersFollow
  1,331FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-