spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: மாதராசை பற்றாமல் ஞானமருள்!

திருப்புகழ் கதைகள்: மாதராசை பற்றாமல் ஞானமருள்!

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் – பகுதி – 267
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இராவின் இருள் – சுவாமி மலை

அருணகிரிநாதர் அருளிச் செய்துள்ள இருநூற்றி நான்காவது திருப்புகழான “இராவின் இருள்” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, மாதர் ஆசை எனைப் பற்றாமல், திருவடி ஞானத்தை அருள்வாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்
இராமசர மாகும் …… விழியாலும்

இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்
இராதஇடை யாலும் …… இளைசோர்நெஞ்

சராவியிரு போதும் பராவிவிழ வேவந்
தடாதவிலை கூறும் …… மடவாரன்

படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்
அநாதிமொழி ஞானந் …… தருவாயே

குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்
குலாவியினி தோதன் …… பினர்வாழ்வே

குணாலமிடு சூரன் பணாமுடிக டோறுங்
குடாவியிட வேலங் …… கெறிவோனே

துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந்
தொடாமல்வினை யோடும் …… படிநூறுஞ்

சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும் …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – குராமரத்தின் குளிர்ந்த நிழலில் (திருவிடைக்கழி தலத்தில்) எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே என்று தினந்தோறும் குலாவி இனிமையாகத் துதி செய்கின்ற அன்பர்களுக்கு வாழ்வாகத் திகழ்பவரே; வீரவுணர்ச்சியால் கொக்கரிக்கின்ற சூரனுடைய பருத்த முடிகள் யாவும் துளைபட்டு வளையுமாறு வேலை அவ்விடத்தில் விடுத்தவரே;

பெருந்தீயின் முன் செத்தை எரிந்து இல்லாமல் போவது போல், வினை தம்மைத் தொடாது ஓடிப் போகுமாறு பொடி செய்யவும், நன்மையை உட்கொள்ளவும் ஞான தவ சீலர்கள் சேர்ந்து வாழ்கின்ற சுவாமிமலையில் வாழ்கின்ற பெருமிதம் உடையவரே;

இரவின் இருள் போன்றது என்று புகழ்கின்ற குழலினாலும், இராமபாணம் போன்ற கண்களாலும், இசை மயமான மொழிகளாலும் (இடை) தாங்கமாட்டாத கனமுள்ள தனங்களாலும், இல்லையென்று கூறும்படி அத்துணை நுண்ணியதான இடையாலும், இளைஞர்களுடைய உள்ளத்தை அரம் அறுப்பதுபோல் அறுத்து, காலை மாலைகளில் அந்த இளைஞர்கள் புகழ்ந்து தளருமாறு, அவர் முன் வந்து நியாயமின்றி மிகுந்த விலைகூறும் பொதுமகளிரின் ஆசை என்னைத் தொடராமல், அடியேனுக்கு உமது திருவடியைத் தேடும் அநாதி மொழியான ஞானத்தைத் தந்தருளுவீர் என்பதாகும்.

மாதர்களின் உடல் நலன்களை முடி முதல் அடிவரை கூறுவது மரபு. இதனை பாதாதி கேச வர்ணணை என்பர். இத்திருப்புகழில் அருணகிரியார் பெண்களின் கூந்தல் மிகுந்த கரிய நிறத்துடன் இருப்பதனால் இருள் போன்றது என்று வியந்து கூறுகிறார். வேறு ஒரு திருப்புகழில் கொந்துத் தருகுழல் இருளோ சுருளோ? கூறுகின்றனர். ஆடவருடைய மனம் இருள்வதற்கு அந்தக் கூந்தலின் இருள் ஏதுவாகின்றது என்ற குறிப்பையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும்.

அடுத்து பெண்களின் விழிகளுக்கு இராமபாணத்தை உதாரணமாகச் சொல்லுகிறார். இராமரின் கணை உயிரை மாய்க்குந் தன்மையது. எனவே கணைகளில் சிறந்தது இராமருடைய கணை. இராமசரம் குறி தவறாது; மாறுபட்டோரை மாய்க்க வல்லது. அந்த இராம சரம் போல் இளைஞரின் உள்ளத்தை மாய்க்க வல்லது அம் மாதர்களின் கண்கள் என்று குறிப்பிடுகின்றார்.

இன்னும் என்னென்ன சொல்கிறார்? நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,173FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,898FollowersFollow
17,300SubscribersSubscribe