கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரியையொட்டி பக்தர்கள் சிவாலய ஓட்டம் ஓடியே சுவாமி
தரிசனம் செய்தனர்
காவி துண்டு, காவி வேஷ்டி, கையில் விபூதி, பனையோலை விசிறி உடன்
புகழ்பெற்ற முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் நேற்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.
திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றியோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணர் கோவில், பன்றிபாகம் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.
சைவ வைணவ ஒற்றுமையை குறிக்கும் வகையில் இந்த சிவாலய ஓட்டம் உள்ளது. நட்டாலம் ஆலயத்தில் மூலவர் சங்கரநாராயணராக காட்சி தருகிறார். இங்கு ஒரே விக்ரகத்தில் ஒரு பாதியில் சிவன் உடுக்கையுடனும், மறுபாதியில் விஷ்ணு சக்கராயுதத்துடன் காட்சியளிக்கிறார்.
நேற்று காலை முதல் விடிய விடிய பக்தர்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிந்தா… கோபாலா… என்ற பக்தி கோஷத்துடன் கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள்.
இன்று மகாசிவராத்திரி யில் பக்தர்கள் காலையிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து அனைத்து சிவன் கோயில்களிலும் கூட்டம் அலை மோதியது.
குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இரு சக்கர வாகனங்களிலும் வேன்களில் சென்று தரிசனம் செய்தனர். சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாக சென்றும், ஒடி சென்றும் தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு வழிநெடுகிலும் உணவு வகைகள் வழங்கப்பட்டது. சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பக்தர்கள் இன்றிரவு சிவாலயங்களில் தங்கி கண்விழித்து வழிபாடு செய்வார்கள்.
அனைத்து சிவாலயங்களிலும் இன்று இரவு விடிய விடிய மகாசிவராத்திரி அபிஷேகம் பூஜைகளும் துவங்கி நடைபெற்றுவருகிறது.





