spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: கருமி

திருப்புகழ் கதைகள்: கருமி

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் 293
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கதிரவன் எழுந்து – சுவாமி மலை
கருமி

கருமித்தனம் என்பது சமஸ்கிருதத்தில் லோபம் எனப்படும். இது மிக மிஞ்சிய கருமித்தனமாகும். எவரையும் அது மகிழ்வுடன் இருக்கவிடாது. ஒரு கருமி, தானும் அனுபவிக்காமல், பிறரையும் அனுபவிக்கவிடாமல் பொருளை வைத்திருப்பான். செயல்களை முன்னின்று செய்தால் கையைக் கடிக்குமோ, அதனால் தன் பணம் குறைந்து விடுமோ என்ற அச்சத்தினால் அவன் எல்லாவற்றிலுமே, பின் தங்கியிருந்து தயங்கியபடியே செயலாற்றுவான். இதை விளக்க ஒரு சிறு கதையைக் காணலாம். கருமி, பெருங்கருமி என்ற இரு சகோதரர்கள் இருந்தனர்.

பெயருக்கு ஏற்ப அவர்கள், சரியான உணவு கூட உட்கொள்ளாத அவ்வளவு கஞ்சத்தன்மை படைத்தவர்கள். விசேஷ நாட்களில் கடவுளிடம், உலக இன்பங்களை மேலும் மேலும் பெற முறையிட்டு வேண்டுவர். ஆனால் சுவாமிக்கு நைவேத்தியம் படைப்பதற்கு அவர்களுக்கு மனம் வராது.

ஒரு கற்கண்டுத் துண்டை வைத்து, படைத்து, அவர் அதை பார்த்து முடிப்பதற்குள் மறுநொடியில், தங்கள் வாயிலிட்டுத் தின்று விடுவர். இங்ஙனம் படைத்த கற்கண்டு, சுவாமி முன்னர் சில நிமிடங்கள் கூட இருக்கவிடாமல், அவர்கள் பரபரத்து எடுப்பதற்கு அவர்கள் கூறிய காரணம் விந்தையானது. அந்த நைவேத்தியம் அங்கு சற்று நேரம் இருந்தால் எறும்புகள் வந்து அரித்துக் கொண்டு போய்விடுமாம்! அதனால் விலையுயர்ந்த சர்க்கரையின் துகள்களில் சிலவற்றை அவர்கள் இருவரும் இழந்து விடுவார்களே. அவர்களது கஞ்சத்தனம் இந்த அளவிற்குத் தாழ்ந்தது.

ஒரு நாள் அவர்களது உறவினர் ஒருவர் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. பெரியவனான பெருங்கருமி நேரில் போய் துயரமுற்ற அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு வர புறப்பட்டான். செய்தி வந்தவுடனே நள்ளிரவில் புறப்பட்டு பேருந்திலோ, புகைவண்டியிலோ போகவும் அவன் விரும்பவில்லை.

ஏனெனில் அவற்றில் பயணம் செய்தால் பயணச் செலவு வீணாக ஏற்பட்டு தாங்க முடியாத மனச்சுமையை ஏற்படுத்தும். அதனால் மறுநாள் விடியற்காலையில், நடந்தே செல்ல திட்டமிட்டான். மறுநாள் விடியலில் அவன் சென்றபிறகு, இளைய கருமி விளக்கை அணைத்துப் பலகணி அருகில் வைத்துவிட்டுப் படுக்கச் சென்றான். இருட்டில் அவனை ஒரு தேள் கொட்டி விட்டது. அவன் அதனால் வேதனையோடு துன்புற்றிருக்கும்போது, இரண்டு மைல் தொலைவில் நடந்து சென்று விட்ட பெரிய கருமி திடீரென நினைவு வந்தவனாக வேகமாகத் திரும்பி வீட்டுக்கு வந்தான்.

கருமி அவன் திரும்பி வந்ததன் காரணத்தை வினவியபோது, பெரிய கருமி, “தம்பி! நான் சென்ற பிறகு நீ விளக்கை அணைத்திருப்பாயோ மாட்டாயோ என்ற ஐயத்தில் நான் மிக்கக் கவலைப்பட்டுப் போனேன். அதனால்தான் உனக்கு நினைவூட்டவே திரும்பி வந்தேன்.” என்றான்.

அதற்கு கருமி, பொறுக்க இயலாத வலியிலும், புலம்பிக் கொண்டே, “அய்யோ அண்ணா! விளக்கு எரிவதால் செலவாகும் கொஞ்சம் எண்ணெய்யை மிச்சம் படுத்த எண்ணிய உன் ஆர்வம் போற்றத்தக்கதுதான். ஆனால் என்ன பரிதாபம்! இவ்வளவு தூரம் வீணாகத் திரும்பி வந்ததால் உன் செருப்புகள் எவ்வளவு தேய்ந்திருக்குமென்று நினைத்து பார்த்தாயா?” என்று கேட்டான்.

உடனே பெருங்கருமி, “என் அன்பின் கருமியே! கவலைப்படாதே, செருப்புகளைத் தேய விடாமல் கையிலெடுத்துக் கொண்டல்லவா வெறுங்காலில்தான் நடந்து வந்தேன்” என்று விடையிறுத்தான். இத்தகைய இழி நிலையையே லோபம் விளைவிக்கும்.

இத்தகைய கருமிகளிடம் புலவர்கள் சென்று அவர்களைப் புகழ்ந்து பாடினால் என்னாகும்? இதற்கு ஔவையார்-கோரைக்கால் ஆழ்வான் கதையைப் படிக்க வேண்டும். முற்காலத்தில் கோரைக்கால் ஆழ்வான் என்ற ஒரு பணக்காரன் இருந்தான்.

கோரைக்கால் என்பது அவனது ஊர். ஒருமுறை அவனை ஒளவையார் புகழ்ந்து பாடினார். அது கேட்டு அவன் “ஒரு யானையை பரிசா தருகிறேன். நாளைக்கு வார்ய்ங்கள்” என்று சொன்னானாம். அடுதத நாள் சென்றபோது ‘பாவம் யானையை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? அதற்கு உணவு அளித்து மாளாது; உணவுக்காக அதிகமாகச் செலவழிக்க வேண்டும். எனவே நான் உங்களுக்கு ஒரு குதிரை தருகிறேன்; நாளை வாருங்கள்’ என்று சொன்னானாம்.

அடுத்த நாள், ‘குதிரை ஒரு பொல்லாத மிருகம்; நீங்கள் அதன் மீது ஏறி பயணம் செய்ய பயிற்சி பெற வேண்டும்; உங்களுக்கோ வயதாகிவிட்டது; எனவே பயிற்சி பெற இயலாது. எனவே உங்களுக்கு ஒரு எருமை தருகிறேன். அதனை மேய்த்து, அது தரும் பாலைப் பருகி வாழுங்கள்.

எருமையை வாங்கிக் கொள்ள நாளை வாருங்கள் எனச் சொன்னான். அதற்கு அடுத்த நாள், ‘மூதாட்டியே எருது மேய்ப்பதும் பாராமரிப்பதும் கடினமான பணி. உங்களுக்கு துன்பம் தர நான் விரும்பவில்லை. எனவே ஒரு புடவை தருகிறேன் நாளை வாருங்கள்’ எனச் சொன்னானாம்.

அடுத்த நாள் ஒரு நைந்துபோன போன புடவையைக் கொடுத்தானாம். அதனை ஒளவையார் ஒரு பாட்டாக்கித் தந்திருக்கிறார்.

“கரியாகி, பரியாகி, கார் எருமைதானாய் எருதாகி,
முழப் புடவையாகி, திரிதிரியாய்த்
தேரைக்கால் பெற்று மிகத் தேய்ந்து காலோய்ந்ததே
கோரைக்கால் ஆழ்வான் கொடை”

இத்தகைய கருமிகளிடம் சென்று நமது புலமையைக் காட்டுவதற்குப் பதிலாக எல்லாம் வல்ல முருகப் பெருமானைப் பாடினால் இன்பமுறலாம் என்பது அருணகிரிநாதரின் கருத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe