spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்வேலால் உருவான நதிகள்!

வேலால் உருவான நதிகள்!

- Advertisement -

வேலால் உருவான நதிகள் உண்டு!!


கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்

நேற்று காலை என் நண்பர் ஒருவர் முருகப்பெருமானுக்கு அழகிய வேல் ஒன்றை வாங்கி அர்ப்பணிப்பதாகச் சொல்லி என்னிடம் அதைக் காட்டினார். மகிழ்ந்து போனேன். என் சிரசில் அந்த வேலை வைத்து மௌனமாக கொஞ்ச நேரம் நின்றேன். கண்ணில் ஒற்றிக் கொண்டு பின்னர் அவர் கையில் கொடுத்தேன். சிறப்பான பூஜைகளுக்குப் பின்னர் ஆடி வெள்ளிக்கிழமை அன்று முருகனுக்கு அந்த வேல் அர்ப்பணிக்கப்படுவதை எண்ணி அகம் மகிழ்ந்தேன்! வேல் பற்றி சில சிந்தனைகள் என் மனதில் எழுந்தன.

வேல் வழிபாடு முருக வழிபாட்டுக்கும் முந்தையது என்கிறார்கள். வேலுக்கென்றே தனிக்கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள் தமிழர்கள். அதற்கு ‘வேற்கோட்டம்’ என்று பெயர். ‘கோடு’ என்றால் மலை. அக்காலத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள கோயிலை கோட்டம் என அழைத்தனர். வேல் சிவந்த நிறம் உடையது. முருகனும் செம்மை நிறம் கொண்டவர். மலையின் மேல் கோயில் கொண்டவர்.

திருவிளையாடல் புராணம் மூலம் பாண்டிய மன்னன் கடல் கடந்து சென்று, தனது வேலால் பல நாடுகளை வென்று அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான் என்று அறிய முடிகிறது.

நல்லியக்கோடன் எனும் சிற்றரசனுக்கு முருகன் கனவில் தோன்றி அருளியவாறு, கேணியில் பூத்த பூக்களைப் பறித்து, அவன் பகைவர்கள் மீது எறிந்த போது, அவை வேலாக மாறி அவர்களை அழித்தன என்பதை சிறுபாணாற்றுப்படை என்ற சங்க இலக்கியம் மூலம் அறிகிறோம்.

முருகப்பெருமானின் கையில் உள்ள வேல் மகத்துவமானது. அந்த வேலுக்கு அற்புதமான அபார சக்தி உண்டு. வேல் வழிபாடு சிறந்ததொரு பலனைக் கொடுக்கக் கூடியது. ஆனால் வீட்டில் வைத்து வழிபடும் வேல் ஒரு அங்குலத்திற்கு மேல் இருக்கக் கூடாது!! நீளமான வேல்களை கோவிலில் வைத்து தான் வழிபட வேண்டும்.

வேல் பூஜை செய்கிறவர்கள் அவசியம் தினசரி வேலுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். சிவ பூஜை செய்கிறவர்கள் சாளிக்கிராமத்தை வைத்து பூஜை செய்கிறவர்கள் எப்படி மூர்த்தங்களை பட்டினி போடாமல் பூஜை செய்கிறார்களோ அதே போன்று வேலையும் எண்ணி நைவேத்தியம் செய்ய வேண்டும்.

முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும். நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது வேல் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் வேல் தீர்த்தம் சிறப்புடன் விளங்குவதைக் காண்கிறோம்.திருச்செந்தூர், திருத்தணி, வள்ளிமலை முதலிய இடங்களிலும் முருகப்பெருமான் வேலாயுதத்தையூன்றி உண்டாக்கிய தீர்த்தங்கள் உள்ளன.கிணறு வடிவிலான தீர்த்தங்களை அமைத்ததோடன்றி முருகன் தனது வேலால் நதிகளை உண்டாக்கியதையும் காண்கிறோம்.

திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓடும் செய்யாறு, கன்னட நாட்டிலுள்ள குமாரதாரை முதலியன வேலால் தோன்றிய நதிகள் ஆகும். பூண்டி எனும் ஸ்லத்தில் குமரக் கடவுள் வேலாயுதத்தால் தீரத்தம் உண்டாக்கினார் என்று அவ்வூர்த் ஸ்தலபுராணம் கூறுகிறது.

முருகப்பெருமான் கண்ணாடி போன்ற தெளிந்த நீரை உடைய குளங்களை உண்டாக்கிய வேலாயுதத்தை உடையவன் என்பதை அருணகிரிநாதர் வயலூர்த் திருப்புகழில் ‘கண்ணாடியிற் தடம் கண்ட வேலா’ என்று குறித்துள்ளார். வயலூரில் உள்ள தீர்த்தம் சக்திவேலின் பெயரால் சக்தி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. வேலை சமஸ்கிருதத்தில் ” சக்தி ஆயுதம் “என அழைக்கிறார்கள்

வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!
சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்!
– என்பது நக்கீர பாடிய அடிகளாகும்.

“சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், ஏரகமும், நீங்கா இறைவன் கை “வேல் அன்றே!” என்று தொடங்கும் சிலப்பதிகார பாடலில் இளங்கோ அடிகள் வரிசையாக, “வேல் வேல்”-ன்னு ஒரு வேல் விருத்தத்தை.

அருணகிரி நாதருக்கு முன்பே பாடிவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது. சிலப்பதிகார வேல் வருணனையில், இசையும் கலந்து, ’பாட்டு மடை’யாகப் பெருகி வரும்! என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேலும் சங்கும் சக்கரமும் தமிழ் மன்னர்கள் பயன்படுத்திய சின்னங்கள் ஆகும்.

திருமங்கை ஆழ்வார் மன்னர் மரபில் வந்தவர். அவர் கையில் வேல் உண்டு!!

ஸ்கந்த புரணத்திலும் (ஸ்காந்தம்)அதன் தமிழ் மொழிபெயர்ப்பான கந்த புராணத்திலும் முருகனுக்கும் சூரபதுமனுக்கிடையே நடந்த போரில், இந்த வேலைப் பயன்படுத்தி முருகன் சூரபதுமனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மேல் தப்பிக்க வழியில்லை என்ற நிலையில் அசுரன், முருகனின் கண்களில் படாமலிருக்க ஒரு பெரிய மாமரமாக மாறி விடுகிறான்.

ஆனால் அவனது சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட முருகன் தனது வேலை எறிந்து மாமரத்தை இரண்டாகப் பிளக்க, அதில் ஒரு பாதி சேவலாகவும் மறுபாதி மயிலாகவும் மாறிவிடுகிறது.

முருகன் மயிலைத் தனது வாகனமாகவும் சேவலைத் தன் கொடியாகவும் ஆக்கிக் கொள்கிறார் என்பதை இல் இருபுராணங்கள் கூறு கின்றன. இதனால் வீரத்தின் அடையாளமான வேல், கொடியவர்களை அழித்து நல்லவர்களைக் காக்கும் சக்தியுடையது என்ற நம்பிக்கை முருக பக்தர்களிடம் உண்டு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe