
பகவத் கீதை : எனது தந்தையார் மறைதிரு வைத்தீஸ்வரன்
முனவர் கு.வை.பால சுப்பிரமணியன்
பகவத்கீதை பற்றி எனக்கு என்ன தெரியும்? பகவத்கீதை பற்றி எழுதும் அளவிற்கு நான் தகுதியானவனா? இந்தக் கேள்விகள் எப்போதும் என்னைத் துளைத்துக்கொண்டிருக்கும். நான் பள்ளிச் சிறுவனாக இருக்கும்போது என் தந்தையார் மறைந்த வைத்தீஸ்வரன் அவர்கள் இரண்டு பகவத்கீதை ஸ்லோகங்களை வீட்டில் அடிக்கடி சொல்லிகொண்டிருப்பார்.
அவர் சமஸ்கிருதம் படித்தவர். பகவத்கீதையைப் படித்தவர். மயிலாடுதுறை அருகே உள்ள செம்பொனார்கோவில் இரயில்வே ஸ்டேஷனில் உதவி இரயில்வே நிலைய அதிகாரியாகப் பணியாற்றியவர்.
இப்போது அந்தப் பாதையில் இரயில் ஓடவில்லை. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இண்டர்மீடியட் வரை படித்தவர். அவரது திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்த அவருக்கு, எனக்கு கிடைத்த அளவிற்குகூட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அவர் சொல்லிக்கொண்டிருந்த அந்த இரண்டு பகவத்கீதை ஸ்லோகங்களில் ஒன்று
ஸ்ரீபகவானுவாச
ப்ரஜஹாதி யதா காமான்ஸர்வான்பார்த்த மனோகதான் |ஆத்மன்யேவாத்மனா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே || 55||
பகவத்கீதை, இரண்டாம் அத்தியாயம், 55ஆவது ஸ்லோகம். ஸ்திதப்ரஜ்ஞன் என்பவன் யார் என்ற விளக்கம் சொல்லும் ஸ்லோகம்.
இதன் பொருள் என்னவென்றால் – பகவான் கூறுகிறார் – ஒரு மனிதன் மனதின் அனைத்து ஆசைகளையும் முற்றிலுமாகத் துறந்து, ஆத்மாவில் நிலைத்திருக்கும் தனது மனதை முழுமையாக திருப்திப்படுத்தும்போது, அவன் நிலையான ஞானமுள்ள மனிதன் என்று அறிவிக்கப்படுகிறான்.
இதனைப் பற்றி விளக்கமாக நாளை காணலாம்.




