தெலுங்கில்: பிரம்மஸ்ரீ டாகடர் சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
சிவராத்திரியின் முக்கிய நியமங்களாக உபவாசமும் தூங்காமல் கண் விழிப்பதும் கூறப்பட்டுள்ளன. கண் விழித்தல் என்னும் விரதம் மகா சிவராத்திக்கு மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசிக்கும் கூறப்பட்டுள்ளது.
சில விரதங்களிலும் நோன்புகளிலும் தூங்காமல் கண் விழிக்கும் நியமம் உள்ளது. சில மந்திர தீட்சைகளிலும் சில உபாசனா சம்பிரதாயத்திலும் கண் விழித்திருக்கும் நியமம் விதித்துள்ளார்கள். இதனை “அகோ ராத்ரி” விரதமாக கடைபிடிப்பார்கள்.
இதன் முக்கிய உத்தேசம் என்னவென்றால் பகலும் இரவும் கூட விழிப்போடிருந்து பரமாத்மாவை பூஜிக்க வேண்டும் என்பதே.
உபவாசமிருந்தும் விழித்திருந்தும் இரவை சில காலங்களாகப் பிரித்து சிவனை ஆராதிப்பது வழக்கம். ஒரு நாளை நான்கு மணிகளுக்கு ஒரு பாகமாக ஆறு பாகங்களாகக் கொண்டு ஷட்கால சிவ பூஜை செய்வதைப் பார்க்கிறோம். அதனால் அர்த்த ராத்திரி நள்ளிரவில் கூட சிவபூஜை செய்கிறோம்.
சிவ பூஜை செய்தும் அபிஷேகம் செய்தும் சிவ நாம ஜபம் செய்தும் பஜனை செய்தும் ஏதோ விதத்தில் நேரத்தை சிவமயமாகக் கழிக்க வேண்டும். சிவ பாவனையோடு சிவ க்ஷேத்திரங்களை தரிசிப்பதிலும் சிவாலயங்களில் இருப்பதுமாக சிவராத்திரி தினத்தைக் கழிக்க வேண்டுமென்று கூறப்படுகிறது.
சிவன் நித்திய ஜாக்ரதையில் இருப்பவர். அதாவது எப்போதும் விழித்திருப்பவர். பிரளய காலத்தில் பிரபஞ்சத்திற்கு ஓய்வளிக்கப்படுகிறது. பிரபஞ்சமனைத்தும் சோர்வடைகையில் ஓய்வளிப்பவர் பரமாத்மா. ஓய்வில் என்ன நிகழ்கிறது? மீண்டும் உயிர்த்தெழுவதற்குத் தேவையான சக்தியை அந்த ஓய்வு அளிக்கிறது. அதே போல் பிரளயத்தில் ஓய்வளித்து மீண்டும் சிருஷ்டிக்குத் தேவையான சக்தியை ஒன்று கூட்டி உலகிற்கு அளிப்பவன் பரமாத்மா. சிருஷ்டி ஸ்திதி லயத்திற்குக் காரணமான பரமாத்மாவான சதாசிவன் பிரளய கால ஓய்வை அருளுகிறார்.
பிரபஞ்சத்திற்கு ஓய்வு கொடுத்தலும் பரமாத்மா எப்போதும் விழித்திருப்பவர். சிவனுக்குத் தூக்கம் விழிப்பு என்பது கிடையாது. எப்போதும் விழிப்போடிருக்கும் ஞான சொரூபம். ஞானம் எப்போதும் விழித்திருக்கக் கூடியது. அப்படிப்பட்ட பரம சிவனைப் பூஜிக்கும் மகா சிவராத்திரியன்று அவருக்கு மிகவும் பிடித்தமான விழித்திருக்கும் செயலை நாமும் மேற்கொள்கிறோம். இதன் மூலம் நம் பாவங்கள் தொலைகின்றன.
இதனை தத்துவ ரீதியாக கவனித்தால் ஆழமான பொருள் கிடைக்கிறது. இரவெல்லாம் விழித்திருப்பது என்னும் கூற்றுக்கு தியான நிலையில் ஒருமித்த மனதோடு இருத்தல் என்று பொருள்.
நித்திரை என்பது எதுவும் தெரியாத நிலை. விழிப்பு என்பது அனைத்தும் தெரியும் நிலை.
எதுவும் தெரியாத அஞ்ஞான நிலையில் இல்லாமல் முழுமையான ஞான நிலையில் இருப்பதற்காகச் செய்யும் சாதனையே சிவராத்திரி விரதம் என்பது தத்துவப் பொருள்.
பௌதீகமான பொருள் தூங்காமல் கண் விழித்து சிவ பூஜை, அபிஷேகம் போன்றவற்றைச் செய்வது என்பது. இதன் பலன் இதற்குண்டு. முதலில் பௌதீக பொருளை கிரகித்து அவற்றைக் கடைப்பிடித்து, பின்னர் சிறிது சிறிதாக யோக ரீதியாகப் புரிந்து கொண்டு அதையும் கடைபிடிக்கையில் சிறப்பான பலன்களைப் பெற முடியும்.



