சென்னை: ஆலயங்களில் இறைவன் முன் சமம் என்னும் சமநிலை உருவாக, தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு பாராட்டு தெரிவிப்பதாக, இந்துமுன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராம.கோபாலன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் 38 ஆயிரம் கோயில்களுக்கு மேல் இருக்கின்றன. அவற்றில் கோயில் வருமானம் வரும் கோயிலை மட்டுமே இந்து அறநிலையத்துறை கவனிக்கிறது. வருமானம் வரும் கோயில்களிலும் பக்தர்களை கசக்கிப் பிழிந்து கல்லா கட்டும் கேவலம் அரங்கேறுகிறது. அதிலும் கோயில்களில் தரிசனம் கட்டணம் என இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களிடம் பாகுபாடு படுத்துவது கேவலத்திலும் கேவலமானது. ஆலய தரிசனக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி தொடக்ககாலம் முதலே வலியுறுத்தி வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி மாபெரும் ஆர்ப்பாட்டங்களையும், கையெழுத்து இயக்கங்களை, பேரணிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் வருமானம் அதிகமுள்ள 234 கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய தமிழக அரசிற்கு இந்து அறநிலையத்துறை பரிந்துரைத்திருப்பது பாராட்டத்தக்கது. தரிசனக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும், அனைத்து ஆலயங்களிலும் இறைவன் முன் பக்தர்கள் அனைவரும் சமமாக நடத்திடவும், அனைவரும் கௌரவத்துடன் இறைவனை தரிசிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவிலும், வட பாரதத்திலும் தரிசன கட்டணம் என்பது எந்தக் கோயிலும் கிடையாது. தமிழகத்தில் திரைப்பட அரங்கு போல, விசேஷ நாட்களில் கட்டணக் கொள்ளை நடக்கிறது. பிரதோஷ காலங்களிலும் ஒரு கட்டணமும், சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் அதிக கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன. இன்னும் சில கோயில்களில் மக்கள் தரிசனத்திற்கு வரும் காலை மாலை வேளைகளில் கட்டணம் செலுத்தாமல் உள்ளே செல்லமுடியாத நிலை இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். தரிசன வரிசையை நெறிப்படுத்திடவும், ஒழுங்குப்படுத்தி பக்தர்கள் முறையாக இறைவனை தரிசிக்க முறையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்ய வேண்டும். அதற்கு வழிபாட்டு குழுக்கள், பிரதோஷ வழிபாட்டுக்குழுக்களின், சகஸ்ரநாம குழுக்கள் போன்ற பக்தர்களின் குழுக்களின் உதவிகளை பெற்று நடைமுறைப்படுத்தலாம். கோயில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யும் தமிழக அரசிற்கு இந்து முன்னணி பாராட்டுத் தெரிவித்துக்கொள்வதோடு, முழுமையாக அனைத்து தரிசன கட்டணங்களையும் அனைத்து கோயில்களிலும் ரத்து செய்யவும் வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.. என்று கூறியுள்ளார்.
ஆலயங்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யும் தமிழக அரசுக்கு ராம.கோபாலன் பாராட்டு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week