ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஒன்பதாம் திருநாள்

பகல் பத்து 9 ம் திருநாள் விவரமும் (19-12-15)
கட்டுவிச்சி (குறத்தி)குறி சொல்லுதலும்….
திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாக பாவித்தலும்…

நம்பெருமாள் வழக்கம் போல்,புறப்பட்டு அர்ஜுன மண்டபம் எழுந்தருளி ,ஆழ்வார் மற்றும் ஆச்சாரியர்களுக்கு
மரியாதை ஆகி உகப்புடன் சேவை சாதிப்பார்…

அத்யயன உற்சவத்தின் (பகல்பத்து)9ம் திருநாளான இன்றும் இரண்டு அரையர் சேவைகள் நடைபெறும்.
“தெள்ளியீர் தேவர்க்கும் தேவர்திருத்தக்கசீர்” என்ற பெரியதிருமொழியின் பதிகம் தொடங்கி,”ஒருநல் சுற்றம்”
ஈறாக 300 பாட்டுக்கள் சேவிக்கப்படும்….

முதல் அரையர் சேவை….

“தெள்ளியீர் தேவர்க்கும்” என்பதற்கு அபிநய
வியாக்கியானங்கள் சேவிக்கப்படும்.

இரண்டாம் அரையர் சேவை….

நம்பெருமாள் அலங்காரம் அமுது செய்த பிறகு,
“குறத்துக்கு அருளப்பாடு”என்று “முத்துக்குறிக்கு”,
அருளப்பாடு சாதிக்கபடும்.”10ம் திருநாளின் ”
திருநெடுந்தாண்டகம் பாசுரம் முதல்பாட்டு “மின்னுருவாய்”என்னும் பாசுரத்திற்கு,அபிநய வியாக்கியானங்கள்,மற்றும் பெரியவாச்சான்பிள்ளையின் வியாக்கியானங்கள் 9 ம் திருநாளான இன்றே சேவிக்கப்படும்.

” திருநெடுந்தாண்டகம் ” 11 பாடல்களுக்கும்,
பதினொன்றாவதில் “கட்டுவிச்சி(குறத்தி) குறி சொல்வது” தம்பிரான் படி வியாக்கியானத்தில் இருந்து சேவிக்கப்படும்.

10 ம் திருநாளின் இரண்டாம் சேவையில்,”முத்துக்குறி”
மற்றும் “ராவண வதம்” இரண்டும் சேவிக்க நேரம் இருக்காது என்பதால்,இன்றே அதாவது 9 ம் திருநாளன்றே “முத்துக்குறி” சேவிக்கப்படும்.”முத்துக்குறிக்காக”அரையர் இன்று ஒருநாள் மட்டுமே,அரங்கனின் தீர்த்தம் மற்றும் ஸ்ரீசடாரியினை அடியார்கள்அனைவர்க்கும் சாதிப்பார்.

ஆற்றாமையினால் “முதலானாய்”(திருநெடுந்தாண்டகம் -10)
என்றார் திருமங்கையாழ்வார்.அந்த உள்ள வெப்பத்தால்,
ஆணாக இருந்த “திருமங்கையாழ்வார்” பெண் நிலையை அடைந்தார்,அந்தப் பெண்ணான நிலையிலும்,தம் வாயாலே கூப்பிடுவதற்கு உரிய,தகுதியற்ற மயக்கமுறவே,மற்றவர் வாயாலே கூப்பிட்டுப் பேசும் படியான ,விதத்தில் அமைந்து உள்ளது இந்த பாசுரம்.

மேலே 10 பாசுரங்களில்,எம்பெருமானாகிய தலைவனைக்கூடி,
பின் பிரிவாற்ற தாளாகிய தலைவி ஒருத்தியிடம், மயக்கமும்,தெளிவும் முதலிய நிலை வேறுபாடுகள்,
ஒருகால் தோன்றுவனவாகவும்,அவைதாம்
முறை மாறியும் நிகழ, உறவினர் குழாத்தவரும்,
“இந்நிலைகள் இவளுக்கு ஏற்றனவா? ஏலாதனவா?என்று
முடிவு செய்து,மனங்கொள்ள மாட்டாமல் குழம்பியிருக்க,

தலைவிக்கு ஏற்பட்ட, இந்நோயின் காரணம் அறியாமல்,
மருந்து வழங்கும் மருத்துவரும், மந்திரவாதிகளும் புகுந்து,
இவள் உடல்நலனுக்குப் பரிகாரம் செய்வதில் முனைய,அந்நிலையில் எம்பெருமானிடம் பெரிதும்
ஈடுபாடுடைய, கட்டுவிச்சி (குறத்தி) என்னும் குறி சொல்பவள், “இவளின் நோயின் காரணத்தை நீங்கள் யாரும்உண்மையில் அறியவில்லை,இவளுக்கு வந்துள்ள இந்நோய்,எம்பெருமான் காரணமாக வந்ததாகும்.என்று உரைக்கும் நிகழ்ச்சியே
இன்று நடைபெறும் “முத்துக் குறி”ஆகும்.

அதோடு இந்த நோயும் எம்பெருமானாலேயே நீங்க வேண்டியதாகும். என்று கட்டுவிச்சி (குறத்தி)
சொல்லியதைக் கேட்ட,அந்த பெண்ணின் தாயார்,
தம்முடைய மகளின் உடல்நிலையைப் பற்றி வினவ வந்தவர்களுக்கு,இந்தப் பெண்ணினுடைய நிலைமையையும்,கட்டுவிச்சி (குறத்தி)சொல்கிற வார்த்தைகளையும்,சொல்லுகிற பாசுரத்தாலே,
இவ்வாழ்வார் (திருமங்கையாழ்வார்)
தன்னுடைய நிலையை அருளிச் செய்கிறார்….

ஒரு வயது வந்த பெண்ணின் மனதிற்குள்,
எம்பெருமான் மீது ஏற்பட்ட தீராக் காதல்நோயயையும்,
அதனால் அந்த பெண்ணின்உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களையும்,அவளின் தாயார், அந்த பெண்ணை அவளின் மனதில் உள்ளவற்றை அறிந்து கொள்ளவும்,அந்த பெண்ணின் மனதில் உள்ளேபுகுந்து அவளை ஆட்கொண்ட காதலுக்கு காரணமான எம்பெருமானையும் பற்றியும்,

இது எந்த மருந்துக்கும் கட்டுப்படாத,எம்பெருமானால் மட்டுமே தீர்க்க முடியும் (அவன் மீதுஏற்பட்ட அளப்பரிய காதல்தானே) விவரத்தையும்,ஒரு குறத்தி தன்னுடைய பாடல் மூலம் விளக்குவதாக திருமங்கையாழ்வார் எம்பெருமானைப் பற்றி
பாடிய பாடல்களையும்,அதன் விளக்கங்களையும் இன்று அரையர்கள் சேவையில் காணலாம்….

இந்த “கட்டுவிச்சி(குறத்தி) குறிசொல்லுதல்”என்னும் நிகழ்வு,வாழ்வில் ஒருமுறையாவது,நாம் கேட்க வேண்டிய ,கண்ணால் கண்டு இன்பமாய் கழிக்க வேண்டிய முக்கிய நிகழ்ச்சியாகும்.

நம்மைப் போன்ற,நிலையில்லாவாழ்வைப் பெற்ற, சாதாரண மனிதர்களின் (மனிதர்கள்) மனதில்,எதை எதையோ
நினைத்துக் கொண்டு,அதை அடைய முழுமையாக கூட முயலாமல், இறுதியில் இந்த உலகை விட்டு ,உடம்பை விட்டு,உயிர் நீங்கும்வரை ,எதை எதையோ தேடிக்கொண்டே அலைகின்றோம்.

ஆனால்,இந்த உலகில்,மனிதனாகப் பிறந்து,முரட்டு வீரனாக வளர்ந்து,அரசனாகப் பதவியும் அனுபவித்து, மங்கையின் மீது காதல் கொண்டு,அந்தக் காதலியின் வார்த்தைகளால், எம்பெருமான் மீது தீராக்காதல் கொண்டு,பரம வைஷ்ணவனாக மாறி,அரச பொறுப்பைத் துறந்து,அரங்கனுக்காக,அவன் ஆலயத்தின் திருமதில்களைக் கட்டுவதற்காக, “திருடனாகவும்”ஆகி,எம்பெருமானையே நேரில் வரவழைத்து, அவன் திருவாயினாலே”ஓம் நமோ நாராயணாய”என்ற திருஎட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற்று,

அரங்கன் ஆலயத்தில்,அரங்கனைப் பாடி,அரங்கனை மகிழ்வித்து, அவனிடமேஆழ்வார்களின் தமிழுக்கு ஒருவிழா வேண்டி, இன்றுவரை,இன்னும் வரும் காலங்களிலும், தொடர்ந்து நடைபெறும் வகையில்,இந்த உற்சவம் நடைபெறக் காரணமான,திருமங்கையாழ்வார் மனதில் எத்தகைய காதல் இருந்திருந்தால்,இந்த பக்தி நிலை ஏற்பட்டிருக்கும் என்பதை என்னும்பொழுது,நாமும் இந்த நிலையை அடைய முயற்சிக்க வேணும் என்ற ஒரு பெரிய,தீரா ஆசை ஏற்படுகிறது
என்றால் அது மிகையாகாது….

ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம்…..

 கட்டுரை: ஶ்ரீரங்கம் மாலு