ஏப்ரல் 21, 2021, 5:26 மணி புதன்கிழமை
More

  பிரமனை இரும்பு அறையில் அடைத்த- இரும்பறை- ஓதிமலையாண்டவர்!

  கோவையிலிருந்து சுமார் 50.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் இரும்பறை உள்ளது.

  odhimalaiandavar-temple-covai1
  odhimalaiandavar-temple-covai1

  ஓதிமலையாண்டவர் திருக்கோயில்,
  இரும்பறை, கோவை மாவட்டம்

  மூலவர்: ஓதிமலையாண்டவர்
  உத்ஸவர்: கல்யாண சுப்பிரமணியர்
  தலமரம்: ஓதிமரம்
  தீர்த்தம்: சுனை தீர்த்தம்
  தல பிள்ளையார்: அனுக்ஞை பிள்ளையார்

  சிறப்பு:

  மூலவரான முருகப்பெருமான் இங்கு மட்டுமே ஐந்து திருமுகங்களுடன் காட்சி தருகிறார். முருகப்பெருமானின் இத்திருக்கோலத்திற்கு “ஆதி பிரம்ம சொரூபம்” என்று பெயர்.

  பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் யாகம் செய்த திருத்தலம். இவ்விடத்தில் உள்ள மண் தற்போதும் வெண்ணிறமாக உள்ளது. இதையே திருக்கோயிலின் பிரசாதமாக அன்பர்களுக்கு வழங்குகின்றனர்.

  முருகப்பெருமான் சன்னதி சோமஸ்கந்த அமைப்பில் உள்ளது. அதாவது சிவபெருமான் அம்மன் சன்னதிகளுக்கிடையில் முருகப்பெருமான் சன்னதி அமைக்கப்படுவதை சோமஸ்கந்த அமைப்பு என்று கூறுவர்.

  odhimalaiandavar-temple-covai2
  odhimalaiandavar-temple-covai2

  பழமை: யுகங்கள் தாண்டிய திருத்தலம்

  ஊர்: இரும்பறை, கோவை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
  பெயர் காரணம்: படைப்புக் கடவுளான நான்முகனை (பிரம்ம தேவர்) முருகப்பெருமான் இரும்பு அறையில் சிறைப்படுத்திய திருத்தலம் “இரும்பறை” என்று போற்றப்படுகிறது.

  புராணப்பெயர்: ஞானமலை

  கோவையிலிருந்து சுமார் 50.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் இரும்பறை உள்ளது.

  மேட்டுப்பாளையத்திலிருந்து சுமார் 21.9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் இரும்பறை உள்ளது.

  சத்யமங்கலத்திலிருந்து சுமார் 25.2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புளியம்பட்டியிலிருந்து சுமார் 11.4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

  odhimalaiandavar-temple-covai4
  odhimalaiandavar-temple-covai4

  தலவரலாறு:ஒருமுறை படைப்புக் கடவுளான நான்முகன் (பிரம்ம தேவர்) திருக்கயிலை சென்றபோது, பிள்ளையாரை மட்டும் வணங்கி, முருகப்பெருமானை வணங்காது சென்றார். அவரை வழிமறைத்த முருகப்பெருமான், பிரணவ மந்திரத்திற்கு பொருள் கேட்டார். சரியான விளக்கத்தை தர இயலாமல் நான்முகன் திணறினார். உடனே முருகப்பெருமான் நான்முகனை இரும்பு சிறையில் அடைத்து, படைப்பு தொழிலை தானே எடுத்துக் கொண்டார்.

  ஆதியில் நான்முகனுக்கு ஐந்து திருமுகங்களே இருந்தன. அவரை ஒத்து, தானும் ஐந்து திருமுகங்கள் தரித்து, படைப்பு தொழிலை செவ்வனே செய்து வந்தார் முருகப்பெருமான். காலங்கள் கடந்தன. முருகப்பெருமான் படைப்பில் புண்ணிய ஆத்மாக்களே புவியில் பிறந்தன.

  அதனால் பூதேவியின் பாரம் அதிகமானது. பூதேவி சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் நான்முகனை விடுவித்து படைப்பு தொழிலை அவரிடம் திருப்பி தருமாறு முருகப்பெருமானிடம் கூறினார்.

  மேலும், சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்கும் படி முருகப்பெருமானிடம் கூறினார். தந்தையின் சொல்லுக்கு செவிமடுத்த முருகப்பெருமான், பிரணவ மந்திரத்தின் பொருளை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமிமலையில் சிவபெருமானுக்கு விளக்கிக் கூறினார்.

  மேலும், வேதம், ஆகமம் போன்றவற்றை, ஓதிமலையில், முருகப்பெருமான் சிவபெருமானுக்கு விளக்கிக் கூறினார். நான்முகனையும் விடுவித்து, படைப்பு தொழிலை அவரிடமே திருப்பிக் கொடுத்தார்.

  வேதம், ஆகமம் போன்றவற்றை முருகப்பெருமான் சிவபெருமானுக்கு ஓதிய திருத்தலம் ஓதிமலை என போற்றப்படுகிறது.

  odhimalaiandavar-temple-covai3
  odhimalaiandavar-temple-covai3

  தலபெருமைகள்:

  மூலவர் 5 திருமுகங்கள் மற்றும் 8 திருக்கரங்களுடன் அருள்புரிகிறார். முருகப்பெருமானின் இந்த திருவுருவம் காண்பதற்கு அரியது. முருகப்பெருமானின் இந்த திருவுருவத்திற்கு “கவுஞ்சவேத மூர்த்தி” என்று பெயர்.

  மூலவருக்கு வலப்புறம் காசிவிஸ்வநாதரும், இடப்புறம் விசாலாக்ஷி அம்மனும் தனித்தனி சன்னதிகளில் அருள்புரிகின்றனர். மலையடிவாரத்தில் சுயம்பு பிள்ளையார் அருள்புரிகின்றார்.

  நான்முகனை விடுவிக்க திருக்கயிலையிலிருந்து வந்த சிவபெருமான், பார்வதி தேவி இன்றி தனித்தே வந்தார். அதனால் இத்தலத்தில் சிவபெருமான், அம்மன் இன்றி மலையடிவாரத்தில் கைலாசநாதராக தனித்து அருள்புரிகின்றார்.

  பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் பழனியை நோக்கி பயணம் மேற்கொண்டபோது, வழி தெரியாமல் தடுமாறினார். அப்போது அவர், முருகப்பெருமானை வணங்கி யாகம் செய்தார். ஒரு திருமுகத்துடன் போகருக்கு காட்சி கொடுத்த முருகப் பெருமான், பழனிக்கு செல்லும் வழியையும் கூறினார். இந்நிகழ்வு ஓதிமலையில் நடைபெற்றது.

  இதற்கு சாட்சியாக, போகர் யாகம் செய்த இடத்தில் மட்டும் மண் வெண்ணிறமாக உள்ளது. ஒற்றை திருமுகத்துடன் போகருக்கு காட்சி கொடுத்த முருகப்பெருமான், ஓதிமலைக்கு அருகிலுள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் திருக்கோயிலில் அருள்புரிகிறார். இவருக்கு ஒரு திருமுகமே உள்ளது.

  மலையடிவாரத்திலிருந்து திருக்கோயிலை அடைய நேர்த்தியான படிகள் உள்ளன. 1,770 படிகளைக் கடந்தபிறகு முருகப் பெருமானின் தரிசம் கிட்டும்.

  முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளை விட அதிக உயரத்தில் ஓதிமலை உள்ளது. மலை உச்சியிலிருந்து பார்த்தல் பவானிசாகர் அணை தெரியும் என்பதிலிருந்து இதன் உயரத்தை அறிந்து கொள்ள முடியும்.

  மலையுச்சியை அடைய படிகள் மட்டுமே வழியாக உள்ளது. இந்த படிகள் அடுத்தடுத்து உள்ளன. மேலும் செங்குத்தாக மேலே செல்கின்றன. படிகளின் இருபுறமும் உள்ள இயற்கை எழில் கண்களைக் கவர்கின்றன.

  மலை ஏறி செல்லும் பாதையில் பிள்ளையார் திருக்கோயிலை முதலில் அடைகிறோம். அடுத்ததாக வரும் கோயிலில் நடுகல் நட்டியுள்ளனர். இந்த தெய்வம் பற்றி தெரியவில்லை.

  உச்சியை அடைந்ததும் நுழைவாயில் போன்ற மண்டபத்தைக் கடக்கிறோம். இந்த மண்டபத்தின் வலப்புறம் பிள்ளையார் சன்னதியும் இடப்புறம் நாகராஜர் சன்னதியும் இருக்கின்றன. அடுத்ததாக, 12 படிகளைக் கடந்து இடும்பன் சன்னதியைக் காண்கிறோம்.

  அதன் பிறகு, 9 படிகளைக் கடந்தால் முருகப்பெருமானின் தரிசனம். தந்தையான சிவபெருமானுக்கு தனையனான முருகப்பெருமான் ஓதும் காட்சி அழகிய சிற்பமாக உள்ளதைக் காணலாம். மலையுச்சியில் நாகர் திருக்கோயிலும் உள்ளது.

  மாலை 6 மணிக்கு கோயில் நடைபாதை சாத்தப்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் மலை ஏற அனுமதியில்லை.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »