தமிழகம் முழுவதும் இன்று முருகன் மற்றும் சிவாலயங்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்த நிலையில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோயிலில் இன்று தை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட தேரில் அனந்த கிருஷ்ணன் பாமா ருக்மணியுடன் பவனி வந்து தரிசனம் தர திரளான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோயிலில் இன்று தை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.நாக தோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இங்கு மூலஸ்தானத்தில் நாகராஜா அனந்த கிருஷ்ணன் அருள் பாலிக்கின்றனர்.
கேரளா தமிழ்நாடு உட்பட வெளி மாநிலங்களில் இருந்தும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆயில்யம் நட்சத்திரத்தில் நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டு வருகிறார்கள். நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தைமாதம் 10-நாட்கள் திருவிழா நடைபெறும்.இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜன 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாள்களில் தினமும் காலை மாலை நேரங்களில் வாகன பவனி சிறப்பு அபிஷேகம் சிறப்பு வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையடுத்து காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.இதைத் தொடர்ந்து சுவாமி அனந்த கிருஷ்ணன், பாமா, ருக்மணியுடன் தேரில் எழுந்தருளினார்கள்.இதைத் தொடர்ந்து தேருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேர் சக்கரத்திற்கு தேங்காய் உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர் 4 ரத வீதிகளிலும் பழனி வந்தது.இதைத் தொடர்ந்து தேர் திருநிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது.
கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தையொட்டி கோவிலில் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
இன்று இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணமும் 10-ம் திருவிழாவான நாளை 6-ந் தேதி காலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருள் நிகழ்ச்சி நடைபெறும்.