
திருப்பாவை தொடர்: விளக்கம் – வேதா டி.ஸ்ரீதரன்
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை
(எளிய உரையுடன்)
** மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் (1)
பொருள்
செல்வம் மிகுந்த ஆயர்பாடியில் வாழும் பக்திச் செல்வம் நிறைந்த கோபிகைகளே, அழகிய ஆபரணங்களை அணிந்த சிறுமிகளே, கேளுங்கள். கூர்மையான வேல் ஆயுதத்தைத் தாங்கிப் பகைவர்க்குக் கொடூரமானவனாக விளங்கும் நந்தகோபனுடைய குமாரனாக வளர்ந்தவன் ஸ்ரீகிருஷ்ணன். அழகான கண்களை உடைய யசோதைக்குச் சிங்கக்குட்டி போன்றவன். கரிய மேகம் போன்ற மேனியையும், செந்தாமரை போன்ற கண்களையும் உடையவன். சூரியனைப் போன்ற பிரகாசமும் நிலவைப் போன்ற குளிர்ச்சியும் கொண்ட முகத்தை உடையவன். மேலோர் காட்டிய வழியில் அந்த நாராயணனிடம் நாம் சரணாகதி செய்தால், அவன் நாம் விரும்பிய வரங்களைத் தந்து நமக்கு அருள்புரிவான். எனவே, மார்கழி மாதத்தின் பௌர்ணமி நன்னாளாகிய இன்று முதல், இந்தப் பாவை நோன்பில் கலந்துகொண்டு நீராட விரும்புபவர்கள் எங்களுடன் வாருங்கள்.
அருஞ்சொற்பொருள்
மதி நிறைந்த நன்னாளால் – முழுமதி கொண்ட பௌர்ணமி நன்னாளில்
போதுவீர் – விருப்பம் உடையவர்களே
போதுமின் – வாருங்கள்
நேரிழையீர் – நேர்த்தியான அணிகலன்கள் அணிந்த பெண்களே
ஏர் ஆர்ந்த கண்ணி – தோற்றப்பொலிவு நிறைந்த கண்களை உடைய
பறை – வரம்
படிந்து – நன்கு, சிரத்தையாக
நீராடப் போதுவீர் என்பது நீரில் குளிப்பதை மட்டுமல்ல, பகவானின் நாமத்திலும் கீர்த்தியிலும் குணத்திலும் குளிப்பதையும் சேர்த்தே குறிக்கிறது.
கொடுந்தொழில் என்பது அரசனின் பாரபட்சமற்ற தர்ம பரிபாலனத்தைக் காட்டுகிறது. அங்கே தண்டனைகளும் போர்களும் தவிர்க்க முடியாதவை.
அவன் திருமகள் கேள்வன். எனவே, அது சீர்மல்கும் ஆய்ப்பாடி. மாடு என்ற சொல் செல்வத்தைக் குறிப்பது. மாடுகள் நிறைந்த இடமாதலால், அது சீர்மல்கும் ஆய்ப்பாடி. அங்கு பாலகிருஷ்ணன் செய்த லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பகவானின் குணங்களைப் போற்றுவது போலவே அவனது குறும்புகளையும் போற்றிக் கொண்டாடும் க்ஷேத்திரம் அது. எனவே, சீர்மல்கும் என்பதை ‘அவனது சேட்டைகள் நிரம்பிய’ என்றும் பொருள் கொள்ளலாம்.
செல்வச் சிறுமீர்காள் என்பது கோபிகைகளின் ஐஸ்வர்யத்தையும் பக்தியையும் குறிக்கிறது.
கிருஷ்ணனுக்கே அடிமை பூண்ட கைங்கர்யஸ்ரீயை உடைய கோபிகைகள் செல்வச் சிறுமிகள். நேரிழை என்பது புனிதமான அச்சிறுமிகளின் மங்கலத்தன்மையைக் குறிக்கிறது.
மொழி அழகு
இலக்கியத்தில் ‘போதல்’ என்னும் சொல் போவது, வருவது இரண்டையும் குறிக்கும். போதல், பறை ஆகிய இரண்டு சொற்களையும் ஆண்டாள் பல்வேறு பாசுரங்களில் வெவ்வேறு விதமாகக் கையாண்டுள்ள அழகு கவனிக்கத்தக்கது
***
ஆண்டாளின் மொழிநடை தனித்துவம் வாய்ந்தது. இதில் பல்வேறு சிறப்புகள் உண்டு. அவள் பயன்படுத்தும் வர்ணனைச் சொற்கள் மிகவும் அனுபவிக்கத் தக்கவை. உதாரணமாக, இந்தப் பாசுரத்தில் உள்ள கூர்வேல் கொடுந்தொழிலன், ஏரார்ந்த கண்ணி, கார்மேனிச் செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான் முதலியன குறிப்பிடத் தக்கவை.
ஆன்மிகம், தத்துவம்
மேகத்தை ஒத்த நிறம் அவனது வற்றாத கருணையைக் காட்டுகிறது. கதிர்மதியம் என்பதை நிலவின் கிரணங்கள் போல் குளிர்ச்சியான என்று கொள்ளலாம். எனினும், கதிர் என்றால் சூரியன்; மதியம் என்றால் சந்திரன் என்று கொள்வது சிறப்பு. ஏனெனில், நிலவின் தண்மை (குளிர்ச்சி) அவனது அறக்கருணையையும், சூரியனின் வெம்மை அவனது மறக்கருணையையும் குறிக்கின்றன.
***
பாரோர் புகழ என்றால் உலகத்தில் உள்ளோர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் என்று பொருள் அல்ல. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு. எனவே, பாரோர் புகழ என்பது மேலோர் காட்டும் வழி. பகவானுக்கும் பக்தர்களுக்கும் தொண்டுபுரிவதே (படிந்து) மேலோர் காட்டும் வழி.
செய்யுள் வகை
திருப்பாவை ‘வெண்டளையால் வந்த எட்டடி, நாற்சீர் ஒரு விகற்பக் கொச்சகக் கலிப்பா’ என்னும் செய்யுள் அமைப்பைக் கொண்டது. இதை ‘இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா’ என்றும் சொல்வார்கள். இந்த வகைச் செய்யுளில் துள்ளல் ஓசை மிகுதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.