
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன், நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய் (10)
பொருள்
விரதம் இருந்து பரமபதத்தை அடையப்போகிறேன் என்று வந்தாயே, பெண்ணே, இப்போது உனக்கு என்ன ஆனது? வாசல் கதவைத்தான் திறக்கவில்லை, போனால் போகட்டும், ஒரு வார்த்தையாவது பேசக் கூடாதா? துளசி நறுமணம் கமழும் முடியை உடையவன் நாராயணன்; அனைத்து உயிர்களையும் காப்பவன்; தன்னை வணங்கும் நம்மைப் போன்ற அடியார்களுக்கு வேண்டிய பலன்களைத் தரும் புண்ணியன். இப்படிப்பட்ட நாராயணனின் அவதாரமாகிய ஸ்ரீராமபிரானால் வதம் செய்யப்பட்ட கும்பகர்ணன், தன்னுடைய பெருந்தூக்கத்தை உன்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டானோ? தாயே, சோம்பல் திலகமே, எங்களுக்கு அணி போன்றவளே, உறங்கியது போதும், மளமளவென்று எழுந்துவந்து கதவைத் திறப்பாயாக!

அருஞ்சொற்பொருள்
நோற்று – பாவை நோன்பின் மூலம்
சுவர்க்கம் – வீடுபேறு
அம்மனாய் – தாயே
வாசல் திறவாதார் – வாசலைத் திறவாதவள்
மாற்றமும் தாராரோ – (எங்கள் அழைப்புக்கு) மறுமொழியும் கூற மாட்டாளோ
துழாய் – துளசி
நாற்றத் துழாய் முடி – துளசி மணம் கமழும் தலை
புண்ணியன் – தூய்மையானவன்
பண்டொரு நாள் – முற்காலத்தில்
கூற்றம் – எமன்
ஆற்ற – மிகுந்த
அருங்கலம் – அழகிய ஆபரணம்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் – விரதம் ஏற்பேன், ஸத்கதி அடைந்தே தீருவேன் என்று எங்களிடம் சூளுரைத்த பெண்மணியே
மொழி அழகு
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ –
தூக்கம் மிகுந்தவர்களைக் கும்பகர்ணனின் வாரிசு என்று கேலி செய்வதுண்டு. அதையே ‘கும்பகர்ணன் உன்னிடம் தோற்றான்’ என்று நயம்பட உரைக்கிறாள்.
ஆற்ற அனந்தலுடைய அருங்கலமே, தேற்றமாய் வந்து திற – அம்மா கண்மணியே, கும்பகர்ணியே, தூங்கி வழிந்து கொண்டே கதவைத் திறக்க வேண்டாம். நல்ல சுயநினைவுடன் வந்து கதவைத் திறப்பாயாக!
தோழிகளை ஆண்டாள் துயில் எழுப்பும் இந்தப் பாடல்களில் வர்ணிக்கப்படும் கோகுலத்தின் இயற்கை அழகும், ஆயர் சிறுமிகளின் துடுக்குத் தனமான கேலி கிண்டல்களும் ரசிக்கத்தக்கவை.
***
மாற்றமும் தாராரோ, வாசல் திறவாதார்?
வாசலைத் திறக்காத பெண்மணி உள்ளிருந்து எங்களுக்கு மறுமொழியாவது கூறியிருக்கலாமே. அதையும் செய்யவில்லையே!
வாசல் திறவாதார் என்பது வாசலைத் திறக்காத பெண்மணியை (பெயர்ச்சொல்) குறித்தது. மாற்றமும் தாரார் என்பதைப் பெயர்ச்சொல்லாகவும் எடுத்துக் கொள்ளலாம், வினைச்சொல்லாகவும் எடுத்துக் கொள்ளலாம். பெயர்ச்சொல்லாகப் பார்த்தால், மறுமொழி கூறாதவர் என்று பொருள் தரும். வினைச்சொல்லாகப் பார்த்தால், மறுமொழி கூறவும் மாட்டார் என்பது பொருள்.
***

தமிழ்மொழியின் வன்மைகளில் ஒன்று ற-கரம். ‘ற’ ஓசை மிக்க சொற்றொடர்களை அதிகம் பயன்படுத்தி எழுதுவதும் கடினம், அத்தகைய மொழிநடையை வாசிப்பதும் கடினம்.
ஆனால், ஆண்டாள் ‘ற’ ஓசை கொண்ட சொற்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறாள். இத்தகைய பாசுர வரிகளைச் சரளமாகப் படிக்க முடிவது அதிசயமே.
ஆன்மிகம், தத்துவம்
மனித வாழ்வின் நோக்கம் இறைவனை அடைவது மட்டுமே. ஆனால், நாமோ புறச் சிந்தனைகளில் மூழ்கிக் கிடக்கிறோம். இருப்பினும், அவ்வப்போது பகவத் விஷயங்களில் நாட்டம் ஏற்படத்தான் செய்கிறது. இத்தகைய சிந்தனை மேன்மேலும் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தில் ஏதாவது உறுதிகளை, விரதங்களைக் கைக்கொள்கிறோம். ஆனால், பாழாய்ப்போன மனமோ மறுபடியும் தாமசத்தில் மூழ்குகிறது, புலன் விஷயத் தேட்டங்களில் அலைய ஆரம்பிக்கிறது. இதில் குற்றம் காண இடமில்லை. ஏனெனில், இதுதான் மனதின் இயல்பு.
எனவே, நாம் ஸத்ஸங்கத்தில் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். மனதை வெல்வதற்கு இது சுலபமான வழியாகும். நமது மனம் தடுமாறும் போதெல்லாம் நம்மைவிட மேம்பட்டவர்கள் நமக்கு உதவி செய்து நம்மை இறைச் சிந்தனையில் ஈடுபடுத்துவார்கள். தோழிகளைத் துயிலெழுப்பும் பாசுரங்கள் நமது மனதின் தாமச இயல்பையும், மேலோர் நம்மை அணுகி நம்மை இறைச் சிந்தனையில் ஈடுபடுத்துவதையும் மிக அழகாகக் காட்டுகின்றன.