
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி
விளக்கவுரை: வேதா டி.ஸ்ரீதரன்
** கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித் துகிலுடுத்தேறினர் சூழ்புன லரங்கா
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி யென்னும்
அடியனை அளியனென் றருளியுன் னடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே. (10)
தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்
பொருள்
காவிரியால் சூழப்பட்ட அரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளே, ஆர்ப்பரிக்கும் கீழ்த்திசைக் கடலின் எல்லையில் கதிரவன் முளைத்து எழுந்தான். மணம் மிகுந்த தாமரை மலர்கள் நன்கு இதழ் விரித்தன. மெல்லிய இடை உடைய பெண்கள் நீராடி முடித்துக் கரை ஏறி, தங்கள் கூந்தலைப் பிழிந்து உதறிக் கட்டினர். நந்தவன கைங்கரியத்துக்கான மலர்க்கூடையையும், உனக்குச் சாத்துவதற்கான பருத்த மலர் மாலைகளையும் கையில் ஏந்தியபடி நிற்கும் தொண்டரடிப் பொடியாகிய அடியேனை உன் அருளுக்குப் பாத்திரமானவனாக அங்கீகரித்து, உன் அடியார்க்குப் பணிவிடை செய்யும் பாக்கியத்தை அருள்வதற்காக, அப்பனே, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

அருஞ்சொற்பொருள்
கடி – மணம் பொருந்திய, நல்ல
கனைகடல் – ஆர்ப்பரிக்கும் கடல்
துடி இடை – மெல்லிய இடை
சுரிகுழல் – சுருண்ட கூந்தல்
தொடை – நன்கு தொடுக்கப்பட்ட
பொலிந்து – உடையவனாக
துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் – கூடையும் துளசி மாலையுமாக விளங்கும் கைகளை உடைய
அளியன் – உன் அருளுக்குப் பாத்திரமானவன்
அவன் இருபுறமும் காவிரியால் (புனல் = நீர்) சூழப்பட்ட அரங்கத்தில் பள்ளி கொண்டவன். எனவே, ‘சூழ்புனல் அரங்கன்’. சூழ்புனல் என்பது, பெண்கள் மங்கள நீராடியது (துடி இடையார் … ஏறினர்) காவிரியில் என்பதையும் சேர்த்தே குறிக்கிறது.
தொடை என்றால் நன்கு தொடுக்கப்பட்ட என்று பொருள். எனவே, அது அழகிய பூமாலையைக் குறிக்கிறது. தொடை என்பது செய்யுளின் அழகையும் குறிக்கும். எனவே, ஆழ்வார் அழகிய (தொடை) பாமாலையைத் தரித்தவராக இருப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம். தொடை என்பதை ‘துடை’ என்பதன் முதற்போலியாகக் கொண்டால், ‘துடையைப் போன்று பருத்த துளசி மாலை’ என்று பொருள் கொள்ளலாம். அடியார்தம் அடியார் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார்தம் அடியார் அடியோங்களே (நம்மாழ்வார் வாக்கு) என்பது வைணவக் கோட்பாடு. ஆண்டவனுடைய அடியார்களுக்கு அடியார்கள்கூட நமக்கு மேம்பட்டவர்கள், அவர்களிடம் பணிவைக் கைக்கொள்ள வேண்டும், அவர்களுக்குப் பணிவிடை புரிய வேண்டும். இத்தகைய அடியார் சேவையைத் தனது பெயரிலேயே தாங்கியவராகத் திகழ்கிறார் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்.