
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாள் நாளை கொண்டாடப் படுகிறது. ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற கோஷத்தை முன்னெடுத்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய். இந்த நாளில் 9 லட்சம் விவசாயிகளுக்கு ‘கிசான்’ திட்டத்தின் கீழ் தலா ரூ.2,000 உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (டிச.25) வழங்குகிறார்.
பிரதமரின் கிசான்’ திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தலா, 2,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம், விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இந்த ஆண்டின் மூன்றாவது தவணையாக, ஒன்பது கோடி விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட உள்ளது. உதவித்தொகை வழங்கும் பணிகளை ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். அப்போது ஆறு மாநில விவசாயிகளுடன் அவர் பேசுகிறார்.
இந்தத் திட்டத்தின் பயன் மற்றும் தங்கள் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த கருத்துகளை விவசாயிகள் பிரதமருடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர் !
இந்த நிகழ்ச்சி குறித்து இன்று பாஜக., தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக., தலைவர் எல்.முருகன், ‘பிரதமர் மோடி, நாளை 6 மாநில விவசாய சங்கங்களுடன் காணொளி காட்சி மூலம் பேச உள்ளார். தமிழகத்தில் 4 மாவட்டங்களில் செங்கல்பட்டு, பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் பேச உள்ளார். இதில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொள்ள உள்ளார்… என்றார்.