
இந்தியா இலங்கை மூன்றாவது டி 20 போட்டி
மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி
– K.V. பாலசுப்பிரமணியன் –
முதலில் மட்டையாடினாலும் அல்லது இரண்டாவதாக மட்டையாடினாலும் இந்தியா வெற்றி பெறுகிறது என்பது ஒரு நல்ல விஷயம். இந்த ஆண்டின் பிற்பகுதியில் டி20 உலகக் கோப்பை நடக்கவிருக்கும்போது இவ்வாறு வெற்றிபெறுவது நம் அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
தர்மசலாவில் நடந்த இன்றைய போட்டியில் பூவாதலையா வென்ற இலங்கை அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது.
முதல் ஓவரில் ஒரு விக்கட்; இரண்டாவது ஓவரில் அடுத்த விக்கட்; நாலாவது ஓவரில் மூன்றாவது விக்கட்; ஒன்பதாவது ஓவரில் நாலாவது விக்கட்; 12.1ஆவது ஓவரில் ஐந்தாவது விக்கட் என இலங்கை அணியின் விக்கட்டுகள் மளமளவென விழுந்தன.
அதன் பின்னர் தசுன் ஷனகா அதிரடியாக ஆடி, 74 ரன் எடுத்து இலங்கை அணியின் ஸ்கோரை 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 146 வரை உயர்த்தினார். பின்னர் ஆடிய இந்திய அணியின் வீரர்களும் தொடர்ந்து ஆட்டமிழந்து வந்தனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் 45 பந்துகளில் 73 ரன் அடித்தார். தீபக் ஹூடா 21 ரன், ரவீந்தர் ஜதேஜா 22 ரன் எடுத்தனர். 17ஆவது ஓவர் முடிவில் இந்திய அணி 148 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.
தொடர்ச்சியாக 12 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி சாதனையை சமன் செய்துள்ளது