
44ஆவது செஸ் ஒலிம்பியாட் – பூஞ்சேரி, மாமல்லபுரம்,
6 ஆகஸ்டு 2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
மாமல்லபுரத்தில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று எட்டாம் சுற்றுப் போட்டிகள் நடந்தன. இந்தியா A ஆண்கள் அணியும் ஆர்மீனியா அணியும் இன்று விளையாடின. இந்திய A அணி 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் ஆர்மீனிய அணியிடம் தோற்றுப்போனது.
விதித் குஜராதி, எரிகைசி அர்ஜுன், எஸ்.எல். நாராயணன் மூவரும் ட்ரா செய்து அரைப்புள்ளி பெற்றனர். ஹரிகிருஷ்ணா தோல்வியடைந்தார். இந்தியா B ஆண்கள் அணி பலம் வாய்ந்த அமெரிக்க அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. குஹேஷ் இன்று தனது தொடர் எட்டாவது வெற்றியைப் பதிவுசெய்தார்.
சாத்வானி ரௌனக் வெற்றி பெற்றார். சரின் நிஹால் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் தங்களது ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். இந்தியா C ஆண்கள் அணி 1-3 என்ற புள்ளிக் கணக்கில் பெரு நாட்டு அணியிடம் தோற்றது. சேதுராமனும் கார்த்திகேயன் முரளியும் ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். கங்குலியும் அபிஜித்தும் தோல்வியுற்றனர்.
இந்தியா A பெண்கள் அணி இன்று உக்ரேன் அணியுடன் விளையாடி 2-2 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை சமன் செய்தது. இந்திய வீராங்கனைகள் கோனேரு ஹம்பி, ஹரிகா த்ரோணவள்ளி, வைஷாலி, தானியா சச்சதேவ் ஆகிய நால்வரும் தத்தம் ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரை புள்ளி பெற்றனர்.
இந்தியா B பெண்கள் அணி குரேஷியா அணியுடன் விளையாடி 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. வந்திகா அகர்வால், பத்மினி ராவுத், திவ்யா தேஷ்முக் ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர். மேரி ஆம் கோம்ஸ் ட்ரா செய்தார்.
இந்தியா C பெண்கள் அணி போலந்து அணியுடன் விளையாடி 1-3 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றுப்போனது. ஈஷா கர்வாடே மற்றும் விஷ்வா வாஸ்னவாலா இருவரும் ஆட்டத்தை ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். நந்திதாவும் பிரத்யுஷாவும் தோல்வியடைந்தனர்.
எட்டாவது சுற்று முடிவில் ஆண்கள் பிரிவில் 13 புள்ளிகளுடன் ஆர்மீனியா தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்திலும் உஸ்பெஸ்கிஸ்தான், இந்தியா B அணி, இந்தியா A அணி, அமெரிக்கா, ஜெர்மனி, கஜகஸ்தான் ஆகிய அணிகள் தர வரிசைப் பட்டியலில் 2 முதல் 7ஆம் இடம் வரை பிடித்துள்ளன.
பெண்கள் பிரிவில் இந்தியா A அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்தியா B அணி 11 புள்ளிகளுடன் 17ஆவது இடத்திலும் இந்தியா C அணி 11 புள்ளிகளுடன் 23ஆவது இடத்திலும் உள்ளது.