
இந்தியா தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒரு நாள் போட்டி, ராஞ்சி, 09.10.2022
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இன்று ராஞ்சியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை (50 ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 278 ரன், மர்க்ரம் 79, ரீசா ஹெண்டிக்ஸ் 74, டேவில்ட் மில்லர் 35, சிராஜ் 3/38) இந்திய அணி (45.5 ஓவரில் 3 விக்கட் இழப்பிற்கு 282 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 113, இஷான் கிஷன் 93) ஏழு விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணியில் இன்று மூன்று மாற்றங்கள்; அனித்தலைவர் பவுமா இன்று விளையாடவில்லை; மேலும் ஷம்சி, நெகிடி இருவரும் ஆடவில்லை.
கேசவ் மகராஜ் இன்று தென் ஆப்பிரிக்க அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஜோர்ன் ஃபொர்டின், ரீசா ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோர் அணியில் ஆடினார்கள். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்; ஷாபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர் இருவரும் பிஷ்னோய், கெய்க்வாட் இருவருக்குப் பதிலாக ஆடினர். டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி மட்டையாடத் தீர்மானித்தது. இது ஒரு தவறான முடிவு. இது பகல்-இரவு ஆட்டம்; ஆட்டத்தின் பின் பாதியில் பனி காரணமாக பந்து வீச்சாளர்கள் சிரமப் படுவர்.
இருப்பினும், கேசவ் மகராஜ் மட்டையாடத் தீர்மானித்தார். மூன்றாவது ஓவர் முதல் பந்தில் டி காக் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜன்னன் மாலன் (25 ரன்) ஷபாஸ் அகமது பந்தில் 10ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஹெண்ட்ரிக்ஸ் (74 ரன்), மர்க்ரம் (79 ரன்), மில்லர் (35 ரன்) அணிக்கு ஒரு கவுரவமான ஸ்கோரைத் தந்தனர். 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 278 ரன் எடுத்தது.
ஒரு கட்டத்தில் 300 ரன் வரை தென் ஆப்பிரிக்க அணி எடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய பந்து வீச்சாளர்கள் அந்த அணியின் ஸ்கோரை 278க்கு குறைத்தார்கள். குறிப்பாக முகமது சிராஜ் 38 ரன்னுக்கு 3 விக்கட் எடுத்தார். அதன் பின்னர் ஆடவந்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் (13 ரன்), ஷுப்மன் கில் (28 ரன்) சோபிக்கவில்லை. ஆனால் அவர்களுக்குப் பிறகு ஆட வந்த இஷான் கிஷன் (93 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (ஆட்டமிழக்காமல் 113 ரன்) சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியைத் தந்தனர்.
இறுதியில் ஷ்ரேயாஸுடன் சஞ்ச்சு சாம்சன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியோடு மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தின் ஆட்டநாயகனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டார். அடுத்த போட்டி டெல்லியில் அக்டோபர் 11ஆம் தேதி நடக்கிறது.