
உலகக் கோப்பை டி20 போட்டிகள் – முதல் நாள் – 16.10.2022
இலங்கை அணிக்கு அதிர்ச்சித் தொடக்கம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தகுதிச் சுற்றும் சூப்பர் 12 சுற்றும்
ஆண்களுக்கான உலகக் கோப்பை டி20 போட்டிகள் இன்று முதல் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. போட்டி இரண்டு பிரிவுகளாக நடக்கவுள்ளது. முதல் பிரிவு குரூப் A, குரூப் B பிரிவுகளுக்கு இடையே நடக்கும் தகுதிச் சுற்றுப் போட்டிகள்.
குரூப் Aஇல் நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்டு, இலங்கை ஆகிய நாடுகளும் குரூப் Bஇல் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாபே ஆகிய அணிகளும் உள்ளன. குரூப் Aயிலிருந்து முதல் இரண்டு இடம் பிடிக்கும் இரு அணிகளும் குரூப் Bயிலிருந்து முதல் இரண்டு இடம் பிடிக்கு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
தகுதிச் சுற்று ஆட்டங்கள் இன்றிலிருந்து, தினம் இரண்டிரண்டு ஆட்டங்களாக அக்டோபர் 16 முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெறும்.
அடுத்த சுற்று, சூப்பர் 12 சுற்று. இந்த சுற்றுக்கு 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. குரூப் 1இல் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளும் குரூப் 2இல் வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.
இன்று தொடங்கியது – இரண்டு போட்டிகள்
இன்று குரூப் A பிரிவில் இரண்டு தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவின் மெல்பார்ன் நகருக்கு அருகில் உள்ள ‘கீலாங்’ என்ற விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. முதல் போட்டியில் நமீபியா இலங்கை அணியோடு விளையாடி சாதனை வெற்றி பெற்றது.
நமீபிய அணி (163/7, ஃப்ரைலிங்க் 44, ஸ்மித் 33*, மதுஷன் 2/37) இலங்கை அணியை (108 ஆல் அவுட், ஷங்கா 29, வீஸ் 2/16, ஸ்கால்ட்ஸ் 2/18) 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீசத் தீர்மானித்தது, நமீபிய அணி 15 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த ஐந்து ஓவர்களில் அந்த அணி 68 ரன்கள் எடுத்து மொத்தம் 163 ரன்கள் எடுத்தது.
அதன் பின்னர் ஆடவந்த இலங்கை அணி வீரர்கள் நமீபியாவின் பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ராஜபக்ஷா (20 ரன்), தசுன் ஷங்கா (29 ரன்), தீக்ஷணா (11 ரன்), தனஞ்சய டி சில்வா (12) ஆகியோர் மட்டுமே ஏதோ ரன் எடுத்தனர். இலங்கஈ அணி 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 108 ரன் எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது.
இரண்டாவது ஆட்டம் UAE vs Netherlands
ஐக்கிய அரபு எமிரேட்டு அணியை (111/8, முகம்மது வாசீம் 41, லீட் 3/19) நெதர்லாந்து அணி (19.5 ஓவரில் 112/7, மேகஸ் ஓ ட்வுட் 23, சித்திக் 3/24) மூன்று விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது ஒரு குறைவான ஸ்கோர் அடிக்கப்பட்ட ஆட்டம். எனவே அதிரடி பேட்டிங் அல்லது சிறப்பான பந்து வீச்சு ஆகியவை எதுவும் பெரிதாக இடம்பெறவில்லை.
நாளைய ஆட்டங்கள்
நாளை குரூப் B பிரிவில் ஸ்காட்லாந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி காலை 0930 மணிக்கும், அயர்லாந்து ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி மதியம் 0130 மணிக்கும் டாஸ்மேனியாவில் உள்ள ஹேபர்ட் மைதானத்தில் ஆட்டங்கள் நடைபெறும்