
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 15 – 2023 தகுதிச் சுற்று
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் முதல் ஏழு இடங்களைப் பிடித்த (1) இங்கிலாந்து, (2) நியூசிலாந்து, (3) இந்தியா, (4) ஆஸ்திரேலியா, (5) பாகிஸ்தான், (6) ஆப்கானிஸ்தான், (7) வங்கதேசம், (8) தெனாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்குத் தேர்வாயின.
2019ஆம் ஆண்டு போட்டியில் கடைசி ஐந்து இடங்களைப் பிடித்த (1) அயர்லாந்து, (2) நெதர்லாந்து, (3) இலங்கை, (4) மேற்கு இந்தியத் தீவுகள், (5) ஜிம்பாபே ஆகிய அணிகளும் உலகின் பல்வேறு பகுதிகளில் தகுதிச் சுற்றில் விளையாடிய அணிகளில் வெற்றி பெற்ற அணிகளான (1) நேபாளம், (2) ஓமன், (3) ஸ்காட்லாந்து அணிகளும் நமீபியாவில் நடந்த மற்றுமொரு தகுதிச் சுற்றுப் போட்டியிலிருந்து (1) ஐக்கிய அரபு அமீரகம், (2) அமெரிக்கா ஆகிய நாடுகள் தகுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன. தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜிம்பாபேயில் நடந்தன.
பத்து அணிகளும் குரூப் A மற்றும் குரூப் B என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. குரூப் A பிரிவில் ஜிம்பாபே, நெதர்லாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், நேபாளம், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன. அவற்றுள் ஜிம்பாபே, நெதர்லாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் சூப்பர் சிக்ஸுக்குத் தேர்வாயின.
குரூப் B பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் சூப்பர் சிக்ஸுக்குத் தேர்வாயின.
சூப்பர் சிக்ஸ் ஆட்டங்களும் ‘ரவுண்ட் ராபின்’ முறையில் ஆடப்பட்டன. இதில் இலங்கையும் நெதர்லாந்தும் 2023 உலகக் கோப்பையில் பங்கு பெறத் தேர்வாயின. 1975இலும் 1979இலும் உலகக் கோப்பையை வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஐந்தாமிடம் பெற்றது அதிர்ச்சிக்குரிய செய்தியானது