ஐபிஎல் மூன்றாம் நாள் ஆட்டங்கள் – 24.03.2024
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐபில் 2024இல் மூன்றாம் நாளான இன்று 24.03.2024, ஞாயிற்றுக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையில் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.
ராஜஸ்தான் vs லக்னோ
ராஜஸ்தான் அணி (193/4, சஞ்சு சாம்சன் 82, ரியன் பராக் 43, யசஸ்வீ ஜெய்ஸ்வால் 24, நவீன் 2/41) லக்னோ அணியை (173/6, நிக்கோலஸ் பூரன் 64*, கே.எல். ராகுல் 58, தீபக் ஹூடா 26, போல்ட் 2/35) 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. முதல் ஆறு பவர் பிளே ஓவர்களில் ராஜஸ்தான் அணி 2 விக்கட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சனும் (52 பந்துகளில் ஆட்டமிழக்கமல் 82 ரன், 3 ஃபோர், ஆறு சிக்ஸர்) ரியன் பிராயாக்கும் (29 பந்துகளில் 43 ரன், ஒரு ஃபோர், 3 சிக்சர்) நன்றாக ஆடினர். கடைசில் களம் இறங்கிய துருவ் ஜுரல் 12 பந்துகளில் 20 ரன் அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.
அதன்பிறகு ஆடவந்த லக்னோ அணி பவர்பிளேயில் 3 விக்கட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் இம்பேக்ட் பிளேயராக தீபக் ஹூடா இறங்கினார். ராகுல் (44 பந்துகளில் 58 ரன்கள், 4 ஃபோர், 2 சிக்சர்), தீபக் ஹூடா (13 பந்துகள் 26 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), பூரன் (41 பந்துகளில் 64 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) நன்றாக ஆடினர். இருப்பினும் அந்த அணியால் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியவில்லை. இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக அறிவிக் கப்பட்டார்.
குஜராத் vs மும்பை
குஜராத் அணி (168/6, சாய் சுதர்ஷன் 45, கில் 35, தேவாத்தியா 22, பும்ரா 3/14, கோயட்சி 2/27) மும்பை அணியை (டிவால்ட் ப்ரீவிஸ் 46, ரோஹித் ஷர்மா 43, திலக் வர்மா 25, நமன் தீர் 20, மோஹித் ஷர்மா 2/32, ஒமர்சாய் 2/27, உமேஷ் யாதவ் 2/31, ஸ்பென்சர் ஜான்சன் 2/25) 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. மட்டையாட வந்த குஜராத் அணி பவர்பிளே ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்தது. குஜராத் பேட்டர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள், ஆனாலும் அவர்களால் அதிரடியாக ஆடமுடியவில்லை. பும்ரா நாலாவது ஓவரை வீச வந்தார்; அந்த ஓவரின் இறுதியில் விருத்திமன் சாஹாவை கிளீன் போல்ட் செய்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த கில் சாவ்லா பந்தில் எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சம இடைவெளிகளில் விக்கட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. 17ஆவது ஓவரில் பும்ரா இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். பும்ரா மொத்தத்தில் நாலு ஓவர் வீசி 14 ரன் கொடுத்து 3 விக்கட்டுகள் எடுத்தார். எனவே குஜராத் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 168 ரன் எடுத்தது.
இதன் பின்னர் ஆடவந்த மும்பை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது, இஷான் கிஷன் நாலாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் ரோஹித் ஷர்மா (29 பந்தில் 43 ரன்), நமன் தீர் (10 பந்துகளில் 20 ரன்), டிவால்ட் ப்ரீவிஸ் (38 பந்துகளில் 46 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். மும்பை அணி வெற்றி பெற்றுவிடும் என்று இருந்த நிலையில் ஸ்பின்னர்கள் அருமையாக பந்து வீசி ரன் ரேட்டைக் குறைத்தனர். அதன் பின்னர் வேகப்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக 18ஆவது ஓவரில் ஒரு விக்கட், 19 மற்றும் 20 ஆவது ஓவர்களில் தலா 2 விக்கட் என மொத்தம் ஐந்து விக்கட்டுகள் வீழ்த்தினர். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
குஜராத் அணியின் சாய் சுதர்ஷன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை பெங்களூருவில் பஞ்சாப், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடைபெற உள்ளது.