— ஆர். வி. ஆர்
டி. எம். கிருஷ்ணா ஒரு மிகச் சிறந்த கர்நாடக சங்கீத வித்வானா? ஆம். சென்னை மியூசிக் அகாடமி அவருக்கு 2024-க்கான சங்கீத கலாநிதி பட்டம் அளிப்பதோடு விஷயம் முடிகிறதா? இல்லை.
டி. எம். கிருஷ்ணாவின் பாட்டுக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. அவரது தடாலடிப் பேச்சாலும் எழுத்தாலும் அவரது பிரபல்யம் மேலும் அதிகரித்தது. பொதுவாக பிராமணர்கள் பற்றி, மற்ற சீனியர் வித்வான்கள் பற்றி, அரசியல் சார்ந்த விஷயங்கள் பற்றி, அவர் தாட்பூட்டென்று, கன்னாபின்னாவென்று, கருத்துகள் சொல்லியும், பெரியார் என்று அழைக்கப்படும் ஈ. வெ. ராமசாமியைப் போற்றியும் கூடுதலான கவனம் ஈர்த்தார். இதனால் பல கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு அவர்மீது அதிருப்தியும் வருத்தமும் உண்டு.
கர்நாடக சங்கீதம் பயில்பவர்கள், மேடைக் கச்சேரி செய்பவர்கள், அந்த இசையை ரசிப்பவர்கள் ஆகியோரில் பிராமணர்கள் தொன்றுதொட்டு அதிகம் இருக்கிறார்கள். டி. எம். கிருஷ்ணாவும் ஒரு பிராமணர்.
பொதுவாக பிராமணர்கள் அதிக தெய்வ நம்பிக்கை உடையவர்கள். ஹிந்து தெய்வங்கள் மீதான ஸ்தோத்திரங்கள் கற்று மனப்பாடம் செய்கிறவர்கள் – இப்போது அந்தச் சமூகத்துச் சிறுவர்களிடம் அந்த வழக்கம் குறைந்து வந்தாலும்.
ஹிந்து மதத்தை, ஹிந்து தெய்வங்களை, மிக இழிவாகப் பேசி, ராமருக்குச் செருப்பு மாலை அணிவித்த ஊர்வலத்தில் பிரதானமாக இருந்து, பிராமணர்களையும் கேவலம் செய்து வந்தவர் ஈ. வெ. ராமசாமி. ஆகையால் அவர் மீது மனக் கசப்பு கொண்ட நிறைய ஹிந்துக்கள் உண்டு, அவர்களுள் நிறைய பிராமணர்கள் உண்டு. அத்தகைய பிராமணர்கள் – அதுவும் தெய்வத்தைப் புகழ்வது மிக முக்கிய அம்சமாக இருக்கும் கர்நாடக இசையைப் பயின்றவர்கள் – ஈ. வெ. ரா-வைச் சிலாகித்துப் பேசும் டி. எம். கிருஷ்ணாவை அந்தக் காரணத்தினாலும் மனதளவில் தள்ளி வைப்பார்கள். தெய்வ நம்பிக்கை உள்ள மற்ற இசைக் கலைஞர்களும் அப்படித்தான்.
தெய்வ நம்பிக்கை உள்ள ஹிந்துக்களுக்கு வாழ்வில் அது மிக முக்கியம். தெய்வத்தை வலிய இகழ்கிற ஒருவரை, ஈ. வெ. ரா-வைப் பெரிதும் புகழ்கிற ஒருவரை, அவர்கள் கச்சை கட்டி பதிலுக்கு எதிர்க்காமல் இருக்கலாம், ஆனால் அந்த நபரிடமிருந்து விலகி இருப்பார்கள், அவருடன் கூடிக் குலவ மாட்டார்கள். இதற்காக இப்படி விலகி நிற்கும் போக்கு படித்தவர்களிடம் அதிகம் இருக்கும். சரித்திரக் காரணங்களால் அநேக பிராமணர்கள் படித்தவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் டி. எம். கிருஷ்ணா போன்ற பெரியார் அபிமானியிடமிருந்து – அவரே ஒரு பிராமணர் என்றாலும் – கசப்புடன் விலகி இருக்க நினைப்பார்கள்.
பகுத்தறிவுத் தந்தை எனப்படும் ஈ. வெ. ரா – வைப் போற்றும் ஒரு புதிய பாடலை டி. எம். கிருஷ்ணா சென்ற வருடம் கர்நாடக சங்கீத பாணியில் பாடினார். அதன் வீடியோ இன்டர்நெட்டில் இருக்கிறது. அந்தப் பாடலை அறிமுகம் செய்து அந்த வீடியோவில் சில வார்த்தைகள் பேசுபவர், “பயன்படாத எதையும் பெரியார் திரும்பிக்கூட பார்க்க மாட்டார். அதில் இசை முதலிடம் பெறும்” – அதாவது, பெரியாருக்கு இசை பிடிக்காது, ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை இசையினால் யாருக்கும் எதுவும் பிரயோஜனம் இல்லை – என்றும் தெரிவிக்கிறார். பெரியாரைப் போற்றும் டி. எம். கிருஷ்ணா, பெரியார் நிராகரித்த இசையிலேயே அவரைப் புகழ்ந்து பாடுகிறார். இது என்ன பகுத்தறிவோ?
பகுத்தறிவு விஷயத்தை விட, அடிப்படை மனித இயல்பு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம், டி. எம். கிருஷ்ணா விருதுக்கான எதிர்ப்பில் உள்ளது. அதுதான் முக்கிய விஷயம்.
மனதளவில் நான் மிகவும் கசந்த ஒருவரிடம் திறமைகள் இருந்தால், அவர் திறமையை நான் மறுக்க அவசியம் இல்லை. ஆனால், அந்தத் திறமைக்காக அந்த நபரை நான் மனமுவந்து கொண்டாடத் தயங்குவேன், அவரைக் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற விரும்ப மாட்டேன். அதுவும் என் ஜென்மத்தில் நான் பணிந்து வணங்கும் தெய்வத்தைத் தூற்றிய ஈ. வெ. ரா என்ற மனிதரின் அபிமானியாக, அந்த மனிதரைப் போற்றுபவராக, அந்த மற்ற நபர் இருந்தால் நான் அந்தக் காரணத்திற்காகவும் அந்த நபரை நிச்சயம் கொண்டாட மாட்டேன். அவர் மீது எனக்குப் பொறாமை இல்லை. ஆனால் முடிந்தவரை என் மதிப்பை என் செயலால் நான் காப்பாற்றுவேன்.
மேற்சொன்ன காரணத்தால், சங்கீத கலாநிதி விருது டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் என்று சில தினங்கள் முன் மியூசிக் அகாடமி அறிவித்த உடன், கர்நாடக சங்கீத உலகைச் சேர்ந்தவர்கள், உபன்யாசம் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், என்று சிலர் தங்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறார்கள். ரஞ்சனி-காயத்ரி, திருச்சூர் சகோதரர்கள், சித்திர வீணை ரவிகிரண், விசாகா ஹரி, துஷ்யந்த் ஸ்ரீதர், ஆகியோர் அந்த எதிர்ப்பாளர்கள். கடிதம் மற்றும் சமூக வலைத் தளம் மூலமாக, கவலை தோய்ந்த அவர்களின் உணர்வுகள் நாகரிகமாக வெளியாகி இருக்கிறது.
அகாடமியின் தேர்வுக்கு வெளிப்படையாக எதிர்ப்புச் சொன்னவர்கள் போக, தங்கள் எதிர்ப்பைப் பகிரங்கமாக வெளிப்படுத்தாத கர்நாடக இசைக் கலைஞர்கள், அதுவும் வளரும் கலைஞர்கள், இருப்பார்கள். அவர்கள் என்ன நினைப்பார்கள்? ‘நமது எதிர்ப்பை வெளியில் சொன்னால், வருவது வரட்டும் என்று டி. எம். கிருஷ்ணாவுக்கே துணிச்சலாக சங்கீத கலாநிதி பட்டம் கொடுக்கும் மியூசிக் அகாடமி, வளர்ந்துவரும் நமக்கு வேண்டுமென்றே என்ன கெடுதல் செய்வார்களோ?’ என்று அவர்கள் கவலைப் படுவார்களே? அதனால் அவர்கள் மௌனம் காப்பார்கள். அதிருப்தி அடைந்த மற்ற பல முன்னணிக் கலைஞர்கள் கூட, சக்திவாய்ந்த அகாடமியைக் குறைசொல்ல சற்று யோசிக்கலாம். போகப் போகத் தெரியும்.
மியூசிக் அகாடமியின் இப்போதையத் தலைவர் என். முரளி. அவர் ‘ஹிந்து’ பத்திரிகை வெளியிடும் கம்பெனியில் ஒரு இயக்குனரும் கூட. ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் அகாடமிக்கு வருத்தப்பட்டு எழுதிய எதிர்ப்புக் கடிதத்திற்கு அவர் எழுதிய பதிலில் கடுகடுப்பும் அதிகார தோரணையும் அதிகமாக இருக்கிறது. பிரச்சனையின் தன்மை, அதன் அடிப்படை, அவருக்குப் புரிந்த மாதிரி இல்லை. அல்லது அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை.
என்னதான் ஒருவர் சிறந்த விளையாட்டு வீரராக இருந்தாலும், பதக்கங்கள் வென்றாலும், அவர் தேசியக் கொடியை அவமதித்து வந்தால் – அல்லது, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பேசியது போல், இந்தியா-சைனா மோதலில் இந்தியாவை சங்கடப் படுத்தி சைனா சந்தோஷப்படும் வகையில் பேசி வந்தால் – அவருக்கு மத்திய அரசு அர்ஜுனா விருதை வழங்காமல் இருப்பது நல்லது. தெய்வத்தைத் துதிக்கும் கர்நாடக இசை உலகில், ஹிந்து மதத்தை அனுதினமும் இழிவு செய்த ஒருவரைப் போற்றி வந்த டி. எம். கிருஷ்ணாவுக்கு – மேற்சொன்ன மற்ற காரணங்களுக்காகவும் – பாரம்பரியமான அகாடமி இயந்திர நோக்கில் ஒரு பெரிய கௌவரத்தை அளிக்காமல் இருக்கலாம்.
ஒருவேளை, தேசிய அரசியலை ஹிந்து பத்திரிகை பொறுப்பில்லாமல் காண்பிப்பது போல், மியூசிக் அகாடமியும் இனி அப்படி நடத்தப் படுமா – தனக்குள்ள சட்ட உரிமைகளை மட்டும் உயர்த்திக் காட்டி? திமுக-வின் கனிமொழியும் தமிழக மார்க்சிஸ்ட் கட்சியும் கூட, மியூசிக் அகாடமியின் தேர்வைப் பாராட்டி எதிர்ப்பாளர்களுக்குக் கண்டனம் தெரிவித்து, அறிக்கை கொடுத்துவிட்டார்களே?
கிருஷ்ணா, கிருஷ்ணா! உன்னை வேண்டிக் கொள்வதா கடிந்து கொள்வதா?
Author:R. Veera Raghavan, Advocate, Chennai
[email protected]
Blog: https://rvr-india.blogspot.com