
ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs ஹைதராபாத் – கொல்கொத்தா – 03.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (200/6, வெங்கடேஷ் ஐயர் 60, அங்கிரிஷ் ரகுவன்ஷி 50, அஜிங்க்யா ரஹானே 38, ரிங்கு சிங் 32, ஷமி, கம்மின்ஸ், சீஷன் அன்சாரி, ஹர்ஷல் படேல், மெண்டிஸ் தலா ஒரு விக்கட்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (16.4 ஓவர்களில் 120, ஹென்றி கிளாசன் 33, மெண்டிஸ் 27, நிதீஷ் குமார் ரெட்டி 19, பாட் கம்மின்ஸ் 14, வைபவ் அரோரா 3/29, வருண் சக்ரவர்த்தி 3/22, ஆண்ட்ரு ரசல் 2/21, ஹர்ஷித் ராணா, சுனில் நரேன் தலா ஒரு விக்கட்) 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாட வந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர்கள் க்விண்டன் டி காக் (1 ரன்) மற்றும் சுனில் நரேன் (7 ரன்) இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
அதன் பின்னர் ஆடவந்த அஜிங்க்யா ரஹானே (27 பந்துகளில் 38 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்), அங்கிரிஷ் ரகுவன்ஷி (32 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), வெங்கடேஷ் ஐயர் (29 பந்துகளில் 60 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்), ரிங்கு சிங் (17 பந்துகளில் 32 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய நால்வரும் ஆகியோர் சிறப்பாக ஆடியதால் 20 ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி 6 விக்கட் இழப்பிற்கு 200 எடுத்தது.
201 என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் நான்கு வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர் அடித்தனர். பிறர் ஒற்றை இலக்க ஸ்கோரை தாண்டவில்லை. ட்ராவிஸ் ஹெட் (4 ரன்), அபிஷேக ஷர்மா (2 ரன்), இஷான் கிஷன் (2 ரன்), அனிகேத் வர்மா (6 ரன்), ஹர்ஷல் படேல் (3 ரன்), சிம்ரஜீத் சிங் (பூஜ்யம் ரன்), ஷமி (ஆட்டமிழக்காமல் 2 ரன்) ஆகியோர் ஒற்றை இலக்க ரன் எடுத்தனர்.
இரட்டை இலக்க ரன் எடுத்தவர்கள் நிதீஷ் குமார் ரெட்டி (19 ரன்), கமிந்து மெண்டிஸ் (27 ரன்), ஹென்றி கிளாசன் (33 ரன்), பாட் கம்மின்ஸ் (14 ரன்) ஆகியோர் ஆவர். கொல்கொத்தா அணிக்கு இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய வைபவ் அரோரா 29 ரன் கொடுத்து 3 விக்கட் எடுத்தார். வருண் சக்ரவர்த்தியும் 3 விக்கட் எடுத்தார். சுழல்பந்து வீச்சாளர்கள் மூவரும் விக்கட் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 120 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
கொல்கொத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் வைபவ் அரோரா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.





