
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ் மைதானம், கொல்கொத்தா – 26.04.2025
மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது
பஞ்சாப் கிங்க்ஸ் அணி (201/4, பிரப்சிம்ரன் சிங் 83, பிரியன்ஸ் ஆர்யா 69, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 25, வைபவ் அரோரா 2/34, வருண் சக்ரவர்த்தி 1/39, ஆண்ட்ரூ ரசல் 1/27) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (ஒரு ஓவரில் 7/0) மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன.
பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. அதன் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (35 பந்துகளில் 69 ரன், 8 ஃபோர், 4 சிக்சர்) 11.5 ஓவர் வரை விளையாடினார்.
முதல் விக்கட்டு அவர் பிரப்சிம்ரன் சிங் (49 பந்துகளில் 83 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்) உடன் இணைந்து 120 ரன் சேர்த்தார். அதற்குப் பின் வந்த வீரர்கள் இவர்களின் வேகத்தில் ரன் அடிக்க முடியவில்லை. எனவே 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கட் இழப்பிற்கு 201 ரன் சேர்த்தது.
202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கொத்தா அணி ஒரு ஓவர் மட்டுமே விளையாட முடிந்தது. அதன் பின்னர் மழை வந்துவிட்டது.
இச்சமயத்தில் மாலை/இரவு வேளைகளில் வரக்கூடிய “நார்வெஸ்டர்” என்று ஆங்கிலத்தில் அழைக்கபடுகின்ற இடிமழை இது. இதன் உக்கிரம் குறையாததால் 10.59க்கு ஆட்டம் கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது.





