
பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கே இத்தகைய மிரட்டல் என்றால்… சாமானியனை என்ன பாடு படுத்துவார்கள் திமுக., அரசின் காவல் துறையினர் என்ற குரல்கள் இப்போது எதிரொலிக்கத் தொடங்கி இருக்கின்றன.
இதன் பின்னணியில் தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவியின் குரல் இருக்கிறது. ”மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர்” என்று, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியிருந்தார்.
தமிழக அரசு, தனியார் மற்றும் மத்திய பல்கலை துணைவேந்தர்களின் மாநாடு, ஆளுநர் ரவி தலைமையில் ஊட்டியில் ஏப்.25 அன்று தொடங்கியது. குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை வளர்ச்சி அடைவது அவசியம். பயங்கரவாதம் உலக அளவில் அச்சுறுத்தலாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியை எந்தச் சூழலிலும் தடுக்க முடியாது. குருகுல கல்வி மிகவும் சிறந்தது என்று பேசினார்.
இந்த மாநாட்டில், 32 பல்கலைக்கழகங்களின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசுக்கு உட்பட்ட 17 பல்கலைக்கழகங்களில் இருந்து துணைவேந்தரோ, பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை.
இந்த மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியபோது, தமிழகத்தில் உள்ள கல்வித் தரம் மோசமடைந்துள்ளதை சுட்டிக் காட்டினார். மேலும், இந்தக் கூட்டம் ஏன் நடத்தப் படுகிறது என்ற காரணத்தைச் சொல்லி, இதில் அரசியல் செய்யும் திமுக., அரசு, தனது காவல்துறையை வைத்து கடுமையாக துணைவேந்தர்களை மிரட்டி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் செய்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் தெரிவித்தார்.
அவர் பேசியபோது, தமிழகத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்தவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. நேரில் சென்று நிறைய பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பிறகே, இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் நிலைமை மோசமாக உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என துணைவேந்தர்களை போலீசார் மிரட்டியுள்ளனர். இதனால் தமிழக அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. துணைவேந்தர்களின் வீட்டின் கதவை நள்ளிரவில் தட்டி, ‘மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது’ என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மாநில பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படவில்லை. தமிழகத்தில் கல்வித் தரம் மோசமாக உள்ளது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடத்தப்படுவது பிடிக்கவில்லை. சில துணைவேந்தர்கள் ஊட்டிக்கு வந்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
கல்வி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல துணைவேந்தர்கள் மாநாடு உதவியாக இருக்கும். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள். இதுபோன்ற சூழல் இதுவரை ஏற்பட்டதில்லை…. என்று வருத்தத்துடன் கூறினார்.
இதன் பின்னர் தன் எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது…
“மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் காவல்துறையைப் பயன்படுத்தி, இன்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது. மாநில உயர்கல்வி அமைச்சர், துணை வேந்தர்களிடம் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது பலனளிக்காத நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளார்.
மாநாட்டு நாளில் ஒரு துணைவேந்தர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஊட்டியை அடைந்த மற்றவர்கள் தங்கிய விடுதிகளின் அறை கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்றால் உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும் என்றும், மாநாட்டில் கலந்து கொண்டால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என்றும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது காவல்துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகம் ஆகும்!
இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? மாநிலத்துக்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? அல்லது தலித் மற்றும் ஏழை மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் மாநில பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதன் விளைவுகள், எந்தவொரு தர மேம்பாடும் மாணவர்களை ஆர்வமுள்ளவர்களாகவும் ஊக்கமளிப்பவர்களாகவும் மாற்றும் என்பதால் இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?” என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக சமூகத்தளப் பதிவில் குறிப்பிடப் பட்டிருந்தது.




