
இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் ஜூலை 10 முதல் 14 முடிய – லார்ட்ஸ் மைதானம் – வெற்றிக்கு அருகில் வந்து இந்திய அணி தோல்வி
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ் (112.3 ஓவர்களில் 387 ஆல் அவுட், ஜோ ரூட் 104, ப்ரைடன் கார்சே 56, ஜேமி ஸ்மித் 51, பென் ஸ்டோக்ஸ் 44, ஓலி போப் 44, பும்ரா 5/74, சிராஜ் 2/85, நிதீஷ் குமார் ரெட்டி 2/62, ஜதேஜா 1/29; இரண்டாவது இன்னிங்க்ஸ் 62.1 ஓவர்களில் 192, ஜோ ரூட் 40, பென் ஸ்டோக்ஸ் 33, ஹாரி ப்ரூக் 23, க்ராவ்லி 22, வாஷிங்க்டன் சுந்தர் 4/22, பும்ரா 2/38, சிராஜ் 2/31, நிதீஷ் குமார் ரெட்டி 1/20, ஆகாஷ் தீப் 1/30) இந்தியா முதல் இன்னிங்க்ஸ் (119.2 ஓவர்களில் 387, கே.எல். ராகுல் 100, ரிஷப் பந்த் 74, ஜதேஜா 72, கருண் நாயர் 40, நிதீஷ் குமார் ரெட்டி 30, வாஷிங்க்டன் சுந்தர் 23, கிரிஸ் வோக்ஸ் 3/84, ஆர்ச்சர் 2/52, பென் ஸ்டோக்ஸ் 2/63, கார்சே 1/88, பஷீர் 1/59) இரண்டாவது இன்னிங்க்ஸ் (கே.எல். ராகுல் 39, ஜதேஜா ஆடமிழக்காமல் 61, கருண் நாயர் 14, நிதீஷ் குமார் ரெட்டி 13, ஆர்ச்சர் 3/41, பென் ஸ்டோக்ஸ் 3/48, கார்சே 2/30, பஷீர் 1/5) இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் மேட்ச் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10இல் தொடங்கியது. இந்த லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் தாயகமாகக் கருதப்படுகிறது. இங்கே ஒரு மேட்சாவது விளையாடவேண்டும் என அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் நினைக்கிறார்கள். இரண்டு அணிகளும் தலா ஒரு மேட்ச் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் மூன்றாவது மேட்ச் நடக்கிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலாவதாக மட்டையாட முடிவு செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 83 ஓவர்களைச் சந்தித்து, நாலு விக்கட் இழப்பிற்கு 251 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன் களுடனும் பென் ஸ்டோக்ஸ் 39 ரன் களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.
14ஆவது ஓவரில் நிதீஷ் குமார் ரெட்டி இரண்டு விக்கட்டுகளை எடுத்தார். அதன் பின்னர் ஜதேஜா மற்றும் பும்ராவும் தலா ஒரு விக்கட் எடுத்தனர். முதல் ஆட்டத்தின் போது ரிஷப் பந்த் கையில் அடிபட்டுக்கொண்டார். அதனால் துருவ் ஜுரல் விக்கட் கீப்பிங் செய்தார்.
இரண்டாம் நாளில் ஜோரூட் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். உணவு இடைவேளைக்குப் பின்னர் இங்கிலாந்து அணி 387 ரன்னுக்கு அனைத்துவிக்கட்டுகளையும் இழந்தது. பும்ரா ஐந்து விக்கட்டுகள் வீழ்த்தினார். இதன் பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸைத் தொடங்கினர். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 43 ஓவர்களைச் சந்தித்து (அன்றைய தினம் மொத்தம் 65 ஓவர்கள் மட்டும் வீசப்பட்டது) மூன்று விக்கட் இழப்பிற்கு 145 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சரியாக விளையாட வில்லை. கருண் நாயர் பெரிய இன்னிங்க்ஸ் விளையாடவில்லை. ராகுல் 53 ரன்களுடனும் ரிஷப் பந்த் 19 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.
மூன்றாம் நாளில் உணவு இடைவேளையின்போது இந்திய அணி நாலு விக்கட் இழப்பிற்கு 284 ரன் எடுத்திருந்தது. நன்றாக விளையாடிக்கொண்டிருந்த பந்த் 74 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டார். ராகுல் 98 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். அன்றைய ஆட்டத்தின் கடைசி ஓவருக்கு முதல் ஓவரில் 119.3 ஓவர்களில் 387 ரன்னுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. இரண்டு அணிகளுமே சரிசமமான ஸ்கோரில் இருந்தன. இங்கிலாந்து அணி ஒரு ஓவர் விளையாடி 2 ரன் எடுத்திருந்தது.
நாலாம் நாளில் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் பத்து ஓவர்களுக்குப் பின்னர், இங்கிலாந்து அணி 192 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணிக்கு நாலாம் நாளில் ஏறத்தாழ 20 ஓவர்களும் ஐந்தாம் நாள் முழுவதும் 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற இருந்தது. ஆனால் நாலாம் நாளில், இந்திய அணி 17.4 ஓவர்களில் நாலு விக்கட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்க்ஸிலும் சரியாக ஆடவில்லை. கருண் நாயர் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். இரவுக் காப்பாளராக வந்த ஆகாஷ்தீப் ஆட்டமிழந்ததும் ஆட்டத்தை நிறுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ஐந்தாம் நாளான இன்று வெற்றிக்கு இந்திய அணி 135 ரன் எடுக்க வேண்டும்; இங்கிலாந்து அணி 6 விக்கட்டுகள் எடுக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மன் கில் ஆகியோர் ஆட்டமிழந்திருந்ததால், ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல், அதிரடி ஆட்டக்காரர் (அதே சமயம் காயம் காரணமாக கீப்பிங் செய்யாமல் இருந்த) பந்தும் 135 ரன்னை அநாயசமாக அடித்து இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என எண்ணியிருந்த நிலையில், பந்த் (9 ரன்), ராகுல் (39 ரன்), வாஷிங்க்டன் சுந்தர் (பூஜ்யம் ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (13 ரன்) ஆகியோர் அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பை வீணடித்தனர்.
ரவீந்தர் ஜதேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடி 61 ரன்கள் எடுத்தார். அவரொடு பும்ரா 54 பந்துகள் மற்றும் சிராஜ் 30 பந்துகள் விளையாடி இந்திய அணிக்கு வெற்றிதரப் பாடுபட்டனர். இருப்பினும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர்.
இறுதியில் இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. கடைசி நேர வெற்றி பேறும் உணர்வு ஆங்கிலத்தில் கில்லிங் இன்ஸ்டிங்க்ட் இந்திய அணியிடம் இல்லாமல் போனது.





