
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2025 பெரும் சர்ச்சைகளுக்கிடையே நடந்து முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றும் இந்திய அணி கோப்பையைப் பெறவில்லை. இதற்குக் காரணம் கிரிக்கெட்டில் பண்புகளை பஞ்சர் ஆக்கிய பாகிஸ்தான் வீரர்களின் செயல்தான்.
28.09.2025 அன்று ஆசிய கோப்பை டி20 ஆண்கள் இறுதி ஆட்டம் நடைபெற்றது. வழக்கம்போல இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது.
நீண்ட நாள்கள் கழித்து இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் பூவாதலையா வென்றார். பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.
இதனால் முதலில் மட்டையாட வந்த பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சாஹிப்சாதா ஃபர்ஹான் (38 பந்துகளில் 57 ரன்) மற்றும் ஃபகர் ஸமாந் (35 பந்துகளில் 46 ரன்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இந்திய அணியில் ஹார்திக் பாண்ட்யா ஆடவில்லை. அதனால் பும்ராவுடன் ஷிவம் துபே முதலில் பந்து வீசினார்.
முதல் விக்கட் 9.4ஆவது ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் விழுந்தது. அதன் பிறகு பாகிஸ்தான் அணியின் மட்டையாளர்கள் இந்திய அணியின் பந்துவீச்சில் மட மடவென ஆட்டமிழந்தனர்.
12.5 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 113 ரன் என்ற நிலையில் இருந்து 19.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து அந்த அணி 146 ரன் மட்டுமே எடுத்தது. குல்தீப் யாதவ் 4 விக்கட்டுகளும் பும்ரா, வருண், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளும் எடுத்தனர்.
இரண்டாவதாக ஆடவந்த இந்திய அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் ரன்ரேட் கடைசி ஓவர் வரை பாகிஸ்தான் அணியின் ரன்ரேட்டை விடக் கம்மியாக இருந்தது. அபிஷேக் ஷர்மா (5 ரன்), ஷுப்மன் கில் (12 ரன்), சூர்யகுமார் யாதவ் (1 ரன்) ஆகியோர் முதல் நான்கு ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் திலக் வர்மா (69 ரன்)-சஞ்சு சாம்சன் (24 ரன்) ஜோடி மற்றும் திலக் வர்மா மற்றும் ஷிவம் துபே (33 ரன்) ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றனர்.
19ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஷிவம் துபே ஆட்டமிழக்க, ரிங்குசிங் உள்ளே வந்து ஒரு ஃபோர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார்.
ஆட்ட நாயகனாக திலக் வர்மாவும் தொடர் நாயகனாக அபிஷேக் ஷர்மாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை
அண்மையில் நடந்து முடிந்த ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பெரும் பகை உணர்வும் வெறுப்பும் மேலும் வளர்ந்தது. பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலையை இந்திய ராணுவத்தால் இழந்த போதும் தான் பெற்ற பணத்தைக் கொண்டு மீண்டும் கட்டமைக்க தொடங்கியது. இதனால் பாகிஸ்தான் மீதான கோபம் மற்றும் வெறுப்பு இந்திய மக்களிடம் அதிகரித்தது. இதன் காரணத்தால் பாகிஸ்தானுடன் எந்தவித உறவையும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற குரல் இந்தியாவில் எதிரொலிக்க தொடங்கியது.
இந்த உணர்வு விளையாட்டு போட்டிகளிலும் தலை தூக்கியது. குறிப்பாக ஒருபுறம் ராணுவத்தினர் சண்டை போட்டுக் கொண்டிருக்க மறுபுறம் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுடன் கைகுலுக்கி கொண்டு அவர்களுடன் விளையாடி மகிழ்வதா என்ற எண்ணம் இந்தியாவில் ஏற்பட்டது. இதற்காக நீதிமன்றத்தின் கதவுகளையும் சிலர் தட்டினார்கள். ஆனால் அடுத்த இரு நாட்களில் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றமே கை விரித்தது.
இத்தகைய பின்னணியில் இந்தப் போட்டித் தொடரின் தொடக்கம் முதலே இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையே பிரச்சனை இருந்து வந்தது. டாஸ் போடும்போது அணித் தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். ஆட்டம் முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் இதற்கு மறுத்துவிட்டார்.
இப்போதைய ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பில் பாகிஸ்தான் உள்ளது. அந்தநாட்டின் ஒரு அமைச்சர் அதன் தலைவராக இருக்கிறார். இதனால் இந்த கைகுலுக்காமல் சென்ற பிரச்சனை ஊதி பெரிசாக்கப்பட்டது. ஒரு ஆட்ட நடுவர் மன்னிப்பு கேட்கும் அளவிற்குப் பெரிசானது.
பாகிஸ்தான் அணி டி20 ஆட்டங்களில் உலகத் தரவரிசையில் எட்டாம் இடத்தில் இருந்தது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பாகிஸ்தான் அணியை விட மேலிருந்தன. ஆனால் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. குருப் ஆட்டங்களின் போதும் சூப்பர் 4 ஆட்டங்களின்போதும் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோற்றுப் போனது.
இந்த ஆட்டங்களின் போது பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் இராணுவம் சமீபத்தில் நடந்த போரின்போது இந்திய அணியின் போர் விமானங்கள் 6ஐ சுட்டுவீழ்த்தியதாக சைகை காண்பித்தனர்.
இதன் உச்ச கட்டமாக இந்திய அணி நேற்று பாகிஸ்தான் அமைச்சரும் ஆசிய கிரிக்கட் கவுன்சிலின் தவரிடமிருந்து வெற்றிக் கோப்பையைப் பெற விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டனர்.
பிறரிடமிருந்து திலக் வர்மா, குல்தீப் யாதவ், அபிஷேக ஷர்மா ஆகியோர் பரிசையும் பரிசுத்தொகையையும் பெற்றுக்கொண்டனர். ஆனால் வெற்றிக்கோப்பையை ஒரு பாகிஸ்தானியரிடமிருந்து பெற மறுத்துவிட்டனர். இதனால் அந்த பாகிஸ்தானிய அமைச்சர் அந்த கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இது இப்போது பிரச்சனையாகி இருக்கிறது.
சண்டை சச்சரவுகளிலிருந்து அமைதிக்குத் திரும்பத்தான் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் போர் அரசியலைப் புகுத்துவது சரியல்ல. ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டும் விளையாடுவதில்லை என முடிவெடுக்க வேண்டும் இல்லையேல் விளையாட்டில் அரசியலைப் புகுத்தாமல் இருக்கவேண்டும்.
ஒருபுறம் ஆப்ரேஷன் சிந்தூரில் பெரும் அடி வாங்கிய பாகிஸ்தான் இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பிரச்சாரம் செய்து இணையதளத்தில் பொய்களை கட்டமைத்து அதில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அரசு கட்டமைத்த பொய்களை அந்நாட்டு மக்கள் பெரும்பாலோர் நம்பவில்லை என்றாலும் சாதாரண மக்களிடம் அது கொண்டு சேர்க்கப்பட்டது. கூசாமல் பொய்களை அவிழ்த்து விட்ட பாகிஸ்தான் அரசியல்வாதிகள் பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பொய்களை தாங்களே வெளியிட்டு அம்பலப்பட்டனர்.
இந்நிலையில்தான் ஆப்பரேஷன் சிந்தூர் தோல்விக்கு அடையாளம் இல்லாமல் அழித்துவிட்ட பாகிஸ்தான் இப்போது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அனைவரும் முன்னிலையிலும் அம்பலப்பட்டும் இப்போதும் வெற்றி பெற்றதாய் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது என்ற கருத்துக்கள் சமூக தளங்களில் பரவின. இந்தப் பின்னணியில் தான் பிரதமர் நரேந்திர மோடியும் தனது சமூக தள பக்கத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் வெற்றிக்கு இரண்டையும் முடிச்சு போட்டு பாராட்டு தெரிவித்து இருந்தார்.
இந்த சமயத்தில் பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் ஒருவர் ஒரு குத்துச்சண்டைப் பொட்டியின் அறிமுக நிகழ்ச்சியில் இந்திய வீரரிடம் 6 எனச் செய்கை காண்பித்திருக்கிறார். இவையெல்லாம் விளையாட்டில் அழகல்ல!
கிரிக்கெட் & ஆப் சிந்தூர்!
ஆசிய கோப்பை போட்டியில் பாரதம் வென்றதும், “அந்த கோப்பையை பாகிஸ்தானி மோசின் நாக்வி கையால் வாங்க மாடோம்” என்று வீரர்கள் மறுத்துவிட்டனர். மோசின் நாக்வியும் அந்தக் கோப்பையை ஆசிய கோப்பை அமைப்பிடம் கொடுக்காமல் தூக்கிச் சென்று விட்டார்.
“விட்டேனா பார் உன்னை” என்று பிசிசிஐ அந்த நாக்விக்கு எதிராக துபாய் போலீஸில் புகாரளித்தது, “பாரதத்துக்கு கொடுக்க வேண்டிய கோப்பையை நாக்வி திருடிவிட்டார். அவரை கைது செய்து கோப்பையை மீட்டுத் தரவும்” என்று. அதோடு நிற்காத பிசிசிஐ நாக்வி மீது ஐசிசியில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்யவும் ஆயத்தமானது.
‘போலீஸ் கைது செய்து உள்ளே வைத்தால் என்ன ஆவது?’ என்று பயந்த நாக்வி கோப்பையை திருப்பிக் கொடுத்து விட்டு மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து பெண்கள் கிரிக்கெட் போட்டியிலும் பாரத அணியினருக்கு பாகிஸ்தானிகளிடம் கை குலுக்க வேண்டாம் என்று பிசிசிஐ சொல்லியிருப்பதாக செய்தி வெளியானது.





