மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வங்கதேசம் அசத்தல். மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசமும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்ஸில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்கதேசம்அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் சதமடித்து அசத்தினார். அதிகபட்சமாக தமிம் இக்பால் 103, மகமதுல்லா 67 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர், ஆஷ்லி நர்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், எவின் லெவிசும் இறங்கினர். லெவிஸ் 13 ரன்னிலும், கெயில் 73 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஷா ஹோப் 64 ரன்னிலும், ரோவ்மன் பாவெல் 74 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொதப்பியதால் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 283 ரன்களுக்கு எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம் வங்கதேசம் அணி 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தியது.தமீம் இக்பால் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை கைப்பற்றினார்.



