கேரளியர், கன்னடியர், தெலுகர் யாதொரு வெறுப்புமில்லாமல் ஹிந்தியை அனுமதித்தனர்; இன்று அம்மொழிகள் அழிந்து விட்டனவா ? ’மலையாள மனோரமா’ மலையாள நாளிதழ் உலக நாளிதழ் பட்டியலில் ஐந்தாமிடத்தில் உள்ளது விற்பனை எண்ணிக்கையில். மலையாளிகளின் ஹிந்தி மொழியறிவால் மலையாளத்துக்கு ஊறு நேரவில்லை. அம்மொழியறிவால் மலையாளிகள் பிறபுலங்களிலும் எளிதாக இணைந்துவாழ முடிகிறது. மலையாள, வடுக வரிவடிவங்களை ஹிந்தி அழித்து விடவில்லை.
மராட்டி, நேபாளி, ஸிந்தி போன்ற சில மொழிகள் தேவநாகரியைக் கையாள்வதற்கும் மக்கள் தேர்வுதான் காரணம்; அதில் திணிப்பு இல்லை. குஜராதி மொழியின் வரிவடிவம் முன்பு தேவநாகரியாக இருந்தது. பின்னால் வணிகர் மட்டும் பயன்படுத்திவந்த ஷராஃபி லிபிக்கு மாற்றம் பெற்றது; காரணம் மக்கள் தேர்வு,மக்கள் விருப்பம். இன்று மைய அரசு அங்கு தேவநாகரியைத் திணிக்கவில்லை. குருமுகி, வங்கம் போன்ற மொழிகள் இன்னும் தமக்குரிய பழைய வரிவடிவங்களுடனேயே நீடிக்கின்றன.
குறைந்த எண்ணிக்கை மக்கள் பேசும் மேற்கடற்கரை துளு மொழியின் வரிவடிவம் திகளாரியும் ஒருங்குறி பெற்றுவிட்டது. துளுவுக்கு அணியமான பெரும்பாலோர் பேசும் அம்மாநில மொழியான கன்னடத்தாலோ, தேசிய அளவில் செல்வாக்குப் பெற்ற ஹிந்தியாலோ அம்மொழியை – அதன் வரிவடிவத்தை விழுங்க முடியவில்லை. திரைத்துறையில் துளு பேசும் மக்கள் பலர் ஈடுபட்டுள்ளதாகவும் ஒரு தகவல். துளுவைத் தாய்மொழியாகக் கொண்ட பல பிரபலங்கள் உள்ளனர்.
கொங்கணியும் துளுவைப்போன்ற மேற்குக் கடற்கரைச் சிறுபான்மை மொழி; அணியமான பெரும்பான்மை மொழி மராட்டி. பல கொங்கணியர் ஹிந்தி [தேவநாகரி] வரிவடிவத்தை அம்மொழிக்குப் பயன்படுத்துவர்; ஆனாலும்கூட அம்மொழி அழிந்துவிடவில்லை.
போடோ மொழி அசாமில் புழங்குகிறது; தன் தேவதாயி வரிவடிவத்தைக் கைவிட்டு தேவநாகரி வரிவடிவுக்கு மாறியது. கிரித்தவ மிஷனரிகள் ரோமன் வரிவடிவைப் புகுத்தினர். கலவரம் மூண்டது, சாவில் முடிந்தது. இன்று அதற்கு மூன்று வரிவடிவங்கள்.
வடபுலத்திலேயே ஹிந்திக்கு அணியமான பல வடபுல மொழிகள், வளர்ச்சி குன்றிய நிலையில். அதற்குக் காரணம் அம்மொழிகள் பேசும் மக்களிடையே காணப்படும் ஆர்வக்குறைவு மட்டுமே; வேறு காரணம் கிடையாது.
பத்மஸ்ரீ ஹலதர நாக் எடுத்துக்கொண்ட முயற்சியால் ‘கோசலி’ [சம்பல்புரி] எனும் சிறுபான்மை மேற்கு உடிய மொழி உயிர் பெற்றது அண்மைக்கால நிகழ்வு. அவர் மொழி வளர்ச்சியில் ஆர்வம் காட்டுகிறார்; மொழி அரசியலை ஒதுக்குகிறார். தோளில் கரைத்துண்டு போட்டுக்கொண்டு இளைஞரிடம் மொழி வெறுப்பு அரசியலை வளர்க்கும் உத்தியும் இவர் அறியாதது. பிற மொழிகளை அழிக்கும் எண்ணம் மைய அரசுக்கு இருந்திருக்குமானால் இவர் ’பத்ம’ விருது பெற்றிருப்பாரா என்பதையும் யோசித்துப் பார்க்கலாம்.
படித்த பண்புள்ள மக்களும் மூன்றாந்தர திராவிட திராபை அரசியலார்போல் எழுதுவது மனச்சோர்வு தருகிறது.
ஹிந்தி எங்கோ வடபுலத்திலுள்ள சிறுபான்மையர் மொழி; ஒரு தொல்மரபைச் சேர்ந்த தமிழரான நாம் ஏன் அதைக் கற்க வேண்டும் என்பதெல்லாம் கவைக்குதவாத கேள்வி. ஆங்கிலமும் எங்கோ ஐரோப்பாவின் ஒரு கோடியிலிருந்த சிறுபான்மை மொழிதான், ஐரிஷ் -ஸ்காட்டிஷ் மொழிகளைப்போல . ஆனால் அதற்கான தேவை நவீன உலகில் எல்லாத் துறைகளிலும் பெருகியுள்ளதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஹிந்தி இணைப்பு மொழி என்னும் அளவில் முக்கியத்துவம் பெற்றுப் பெரும்பாலானோர் ஏற்ற மொழியாகி விட்ட நிலையில் அதை ஏற்க மறுப்பது தவறு. வளைகுடா நாடுகளிலும் அதற்குத் தேவை உள்ளது.
மொழி வளர்ச்சி பெற வேண்டுமானால் கருத்தான களப்பணிகள் பெருக வேண்டும்; மேடைப்பேச்சுகளால் தனி மனிதருக்கே ஆதாயம், மொழி ஒருகாலும் வளராது. பிறமொழிகளை வெறுப்பதே தமிழ் ஆர்வம் எனும் மாயவட்டத்துக்குள் தமிழரைச் சிக்க வைத்துவிட்டனர், வெளிக்கொணர்வது சிக்கலாக உள்ளது.
தமிழ்ப் பணி – இந்த அளவு தமிழ் இணையமேறக் காரணம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர். Pollachi Nasan அவர்கள் சிறிதும், பெரிதுமான பல இதழ்களை, நூல்களை இணையமேற்றி வருகிறார் . மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்கள் பன்னிரு திருமுறைகளையும் பல லிபிகளிலும் ஒளிரச் செய்து வருகிறார்.
Annamalai Sugumaran அவர்கள் ஓலைச்சுவடிகளைச் சேகரம் செய்து பல்கலைக் கழகத்துக்கு அளித்தார். மதுரை திரு. பாண்டிய ராஜா அவர்களின் தொடரடைவுகள் இலக்கிய ஆர்வலர்க்கு மிகவும் பயனாகும். நண்பர்கள் Selva Murali Vinodh Rajan Udhaya Sankar Orissa Balu விஜய் குமார் போன்றோரின் துறை சார்ந்த பங்களிப்புகளும் போற்றத்தக்கவை.
இன்றுள்ள அளவு வாய்ப்பு – வசதிகள் இல்லாத முற்காலத்தில் வைணவ அறிஞர் நாலாயிரத்தையும் ஹிந்தியில் மொழி பெயர்த்தனர்; முதுமையின் எல்லைவரை ஏடுதேடியலைந்து அச்சுப்போட்ட ஒரு மஹானும் இருந்துள்ளார். திருப்புகழைத் தேடி அச்சேற்றம் செய்தனர். விடுதலைப் போராட்டப் பணி நெருக்கடிக்கிடையிலும் கப்பலோட்டிய தமிழர் தண்டமிழ் நூல்களுக்கு உரையெழுதி அச்சிட்டார்.
தெய்வத் தமிழை ‘காட்டுமிராண்டி பாஷை’ என ஏசி அச்சேற்றியதும், எழுத்துச் சீர்திருத்தம் செய்கிறேன் என்று, அருமை தெரியாமல் அருந்தமிழ் ஓரெழுத்தொரு மொழியான ‘ஐ’யை அகற்றியதும் பெரும்புலவர் ஈரோட்டுப் பெரியய்யா செய்தருளிய பெருந்தொண்டுகள். பின்னால் அமரர் வாரியார் அவர்களின் முயற்சியால் அது மீண்டது தனிக்கதை.
தனக்குத் தலையாட்டப் பின்னால் ஒரு கூட்டம் உள்ளது எனும் தைரியத்தில் ‘தமிழனுக்கு இந்தியின் தேவை கிடையவே கிடையாது’ என்று உரத்த குரலில் அடித்துப்பேசுவதால் பயனில்லை. வடமாநிலத்தவர் வாழும் பகுதியில் திராவிடக் கச்சிகள் அவர்களிடம் ஓட்டுப் பிச்சைக்காகப் போஸ்டர் ஒட்டுவதற்கு இந்தியின் தேவையுண்டு. திராவிடக் கச்சியினர் ரகுத்தாத்தாவிடம் பயின்ற இந்தியை அதற்கு மட்டும் பயன்படுத்துவர்.
தமிழகத்தின் தொழில் நகரங்களின் வணிக நிறுவன போர்டுகளில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கத் தார்ச்சட்டி ஏந்திச் செல்ல முடியாது, ஈவேராவின் சொந்த ஊரான ஈரோடு உள்பட. எதுவும் புழக்கத்தில் இருந்துவிட்டால் மறையாது; மக்கள் தத்தம் தாய்மொழி பேணுவதில் ஊற்றத்துடன் இருந்துவிட்டால் மொழிகள் அழியா. உலகில் பல மொழிகள் அழிந்து விட்டன. ஹிந்தியா காரணம் ?
அன்பர் பல பங்கு கொண்டனர். பல்வேறு கருத்துகள். இந்தி இல்லாமல் முன்னேறலாம், ஆங்கிலம் போதும் என ஒரு கருத்து. எந்த மொழியும் கற்காமல் 6ம் வகுப்போடு நிறுத்திக்கொண்டு ஊரெல்லை தாண்டாமல் வணிகம் செய்து முன்னேறிய பாக்கியவான்கள் உள்ளனர்; அனைவருக்கும் அதுபோல் வாழ்க்கை அமைவதில்லை. அனைவராலும் கணினித் துறைக்குள் புக முடியாது.
வடக்கத்தியர் இங்குவந்து மண் சுமக்கவில்லையா ? ஆம், ஆங்கிலப் புறக்கணிப்பின் விலை. தமிழர் பிற மாநிலங்களில் அல்லாடுவது இந்திப் புறக்கணிப்புக்கு விலை. எங்கோ சிறுபான்மையர் பேசும் மொழி இந்தி; எனக்கெதற்கு ?
கேள்வியில் லாஜிக் இருக்கு, ஆங்கிலமும் பல்லாயிரம் மைல்தாண்டி, ஏதோ ஒருகோடியில் இருந்த சிறுபான்மை மொழிதான். ஆங்கிலேயர், கிரித்தவர் நாடு பிடித்து மேலாண்மை செய்து பரவலாக்கினர். இன்று அதைப் புறக்கணிக்க முடியாது. சப்பானியரும் ஆங்கில மொழிபெயர்ப்பாளரை நாடுகின்றனர்.
இந்தியைப் பரவலாக்கியது இந்திக்காரர் அல்லர். காந்தியார், ராஜாஜீ, நேருஜீ, படேல்ஜீ, மொரர்ஜீ பாய், வினோபா ஜீ போன்ற இந்தி தாய்மொழியாக அமையாத தலைவர்களே. ஹோம் ரூல் இயக்கம் ஆரம்பித்த காலத்திலிருந்தே காந்தியார் இந்தியை ஆதரித்து வந்துள்ளார். வங்க மொழியை வளப்படுத்திய குருதேவர் தாகூரும் இந்தி ஆதரவாளரே.
மைல்கல் மேட்டருக்கு நாம் கொண்டாடிப் பதவியில் இருத்திய கூனர்களை, இரட்டை வேடதாரிகளைப் பொறுப்பாக்க வேண்டும்.
பொதுவாக மொழி என்பது பல சிந்தனைகள் நிரம்பிய பெட்டகம்; பிற மொழிக்கற்பு நம் சிந்தனைகளை வளப்படுத்தும். அவன் என் மொழியைப் படிக்கிறானா ? நான் மட்டும் அவன் மொழியை ஏன் கற்க வேண்டும் என்பது முதிராத மனப்போக்கு. காசு கிடைக்குமானால் கணினி மொழிகளையும் படிக்கிறோம், கவுரவம் பார்ப்பதில்லை!




