சவுத்தாம்டனில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் மோசமாகத் தோல்வி அடைந்து தொடரை இழந்த இந்திய அணியை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
இந்திய அணியின் மோசமான பேட்டிங் குறித்து முன்னாள் வீரரும், கேப்டனுமான சுனில் கவாஸ்கர் தொலைக்காட்சி வர்ணணையில் கடுமையாக விளாசியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் , இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்களோடு களமிறங்கியும், பயனில்லை, பணிந்துவிட்டது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் விராட் கோலி என்ற ஒற்றை வீரரை நம்பி மட்டும் அணி இருக்கக் கூடாது. அனைத்து வீரர்களும்தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி, சதம் அடித்து அணியை வெற்றி பெறவைக்க முடியுமா?. அவரும் மனிதர்தானே. தொடக்க வரிசையில் களமிறங்கிய ஷிகர் தவண், ராகுல், புஜாரா ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்துவிட்டு, கடைசி வரிசையில் களமிறங்கிய டெயில்என்டர்களிடம் வெற்றிக்கான 60 ரன்களை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். ரஹானா, கோலி கூட்டணி 100 ரன்களுக்கு மேல் சேர்த்துக் கொடுத்தனர். கடைசி வரிசை வீரர்களிடம் 70 ரன்கள் வரை எதிர்பார்ப்பது அதிகமாகும்.
இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த கவனமும், விராட் கோலி மீதுமட்டுமே இருந்தது, அவரை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் அணியின் நம்பிக்கையை உடைத்துவிடலாம் எனத் தெரிந்து விளையாடினார்கள். அது சாதகமாக அமைந்துவிட்டது.
அதுமட்டுமல்லாமல், சவுத்தாம்டன் ஆடுகளத்தில் பந்துகள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்விங் ஆகவில்லை என்பதை கவனித்தேன். எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ் மைதானத்தில் பந்துகள் பந்துவீச்சாளர்கள் சொல்படி, கேட்டு ஸ்விங்ஆகும், இதனால், பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு விளையாடுவது கடினமாக இருக்கும். ஆனால், சவுத்தாம்டனில் அந்தவகையில் பேட்மேன்களுக்கு தொந்தரவில்லாத ஆடுகளமாக இருந்தபோது, தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து விளையாடி இருக்க வேண்டும்.
இன்னும், இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என்று கூப்பிட வேண்டுமா. நீங்கள் வேண்டுமானால், ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டர் என்று கூப்பிடுங்கள், யார் வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். ஆனால், நான் ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராகவே நினைக்கவில்லை என்றார்.




