பாஜக தெளிவான வேலைத் திட்டத்துடன் அரசியல் செய்யும் கட்சி. இந்துத்துவம் என்பது- மையப்படுத்த ஒரு இந்து மதம்,ஒரே மொழி ஹிந்தி- இவ்வாறாக ஒற்றைப்படுத்தலுடன் மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் கருத்தியல். இதன் பின்னால் இருக்கும் வர்க்கநலன் என்பது பெருமுதலாளிகளினதாகும்.
பனியா-பிராமண சாதிகளின் நலன்களுக்கு சாதகமானது என்று பிரச்சாரம் இருந்தாலும் பிராமண சாதிகளில் ஏழைகளுக்கு அதனால் எந்தப் பயனுமில்லை. அது வழங்கும் மதம் என்னும் போதை மட்டும்தான் அவர்களுக்கு மிச்சம்.
இந்துத்துவத்தைத் தோற்கடிப்பதென்பதை பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிடுவது என்று சுருக்கிப் புரிந்துகொள்வது வெற்று அரசியலாகும்.
பாஜக தேர்தலில் தோற்றுப்போனால்கூட வரக்கூடிய காங்கிரஸ் ஆட்சியோ,அல்லது வேறொரு மூன்றாம் தரப்பு கூட்டணி ஆட்சியோ இதே கொள்கைகளைத்தான் மேலே இனிப்புப் பூசி நடைமுறைப்படுத்துவார்கள்.
அத்துடன் அவர்கள் விடும் தவறுகளால் மீண்டும் பாஜகதான் ஆட்சிக்கு வரும். எனவே ஆட்சி மாற்றம் என்பது இந்துத்துவ செயற்திட்டத்தை சற்று மட்டுப்படுத்தலாம்,பிற்போடலாம்,ஆனால் தோற்கடிக்க முடியாது. அதனால்தான் பாஜக ஒழிக,மோடி ஒழிக என்று சுகமாகச் சொறிந்து கொள்வதில் எந்தப் பயனுமில்லை.
இந்துத்துவத்தை தோற்கடிக்க பன்மைத்துவத்தைப் பாதுகாக்கும் அரசியலாலேயே முடியும். வடக்கே இந்து-முஸ்லிம் என்ற அரசியல் பிளவையும்,சாதிய அரசியலையும் தாண்டி வேறொரு அரசியல் இல்லை.
இந்து-முஸ்லிம் பிளவுகளை,சாதிய அரசியலைத் தாண்டி மக்களை ஒன்று திரட்ட மொழிவாரி இனங்களால் மட்டுமே முடியும். வடக்கில் மக்கள் மொழிகள் நசுக்கப்பட்டு இந்தி என்னும் ஒற்றை மொழி போலியாக கட்டமைக்கப்பட்டுள்ளது.இந்துத்துவத்தின் ஒற்றைப்படுத்தலுக்கான ஒரு கருவியாக மொகலாயரின் மொழியான ஹிந்தி பயன்படுவது ஒரு முரண்நகையாக இருந்தாலும் இந்துத்துவப் பேரரசும், மொகலாய ஆட்சியும் வர்க்க நலன்களில் ஒரே பிரிவினருக்கே சாதகமானவை என்பதால் அவற்றுக்கு ஒரே கருவி பொதுவாக இருப்பது ஆச்சரியமில்லை.
இந்துத்துவத்தை வெற்றிகரமாக எதிர்கொள்வது இந்தியா முழுவதும் முழுமையாக மொழிவாரி மாநிலங்களாக உருவாக்கப்படுவதிலும் இந்தியா முழுமையான கூட்டாட்சியை நோக்கி செல்வதிலுமே தங்கியுள்ளது. அதற்கான செயற்திட்டங்களை உருவாக்குவதை விட்டுவிட்டு பாஜகவின் தமிழகத் தலைவர்களிலேயே எளிதாகக் கிண்டலுக்கு உள்ளாகும் தமிழிசை சௌந்தரராஜனை பார்த்து பாசிச பாஜக ஒழிக என்று கூச்சலிடுவது செம காமடி.
அதை செய்தவரை அவரின் அரசியல் பின்னணிகூட அறியாமல் புரட்சியாளர் என்று கொண்டாடுவது தமிழர்களின் அரசியல் வறுமையைக் காட்டுகின்றது.
கவனம், நீங்கள் புரட்சியாளர் என்று நினைப்பவர் எவ்வித அரசியல் சிந்தனையுமற்றவராகவும்,வெற்று மதவெறுப்பில் மட்டுமே பாஜகவுக்கு எதிராக கூச்சல் போட்டவராகவும் இருந்துவிடப்போகிறார்.
கருத்து: – Nadesapillai Sivendran




