
பாலக்காடு அருகே நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். கேரள மாநிலம் பாலக்காடு அருகே மஞ்சக்கட்டி என்ற இடத்தில் மாவோஸ்டுகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் இந்த மாவோயிஸ்ட்கள் தேடுதல் வேட்டைக்காக ‘தண்டர் போல்ட்’ என்ற சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அட்டப்பாடியில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்கிற வழித்தடத்தில் 6 கி.மீ. உள் வனப்பகுதியான மேலே மஞ்சகட்டியூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் முகாமிட்டுள்ளதாக பாலக்காடு மாவட்ட எஸ்.பி. சிவ விக்ரமிற்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அதிரடிப்படை காவலர்கள் வனப்பகுதியில் கடந்த 4 நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை மாவோயிஸ்ட்டுகள் தங்கியிருந்த பகுதியை காவலர்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

இதனால் மாவோயிஸ்ட்கள் காவலர்களிடம் இருந்து தப்பிக்க துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்துக்கொண்ட காவலர்கள் மாவோயிஸ்ட்களை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தி தக்க பதிலடி கொடுத்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களின் உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணும் பணி நடந்தது.
அவர்கள் தமிழகத்தை சேர்ந்த ரமா என்கிற இளம்பெண் மற்றும் கார்த்தி, சுரேஷ் ஆகியோர் ஆவர்.
தப்பிச்சென்ற மாவோயிஸ்டுகள் தமிழகம்,கர்நாடகம் அல்லது கேரள வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் தஞ்சம் அடையக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, காயங்களுடன் தப்பிக்க முயன்ற நபர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாவோயிஸ்டுகளின் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தப்பியோடிய மேலும் 2 பேரை தேடும் பணிகளில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மற்றும் நீலகிரி வனப்பகுதி, ஏற்கனவே மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்த பகுதிகளில் சிறப்பு அதிரடி படையினர் மற்றும் நக்சலைட் தடுப்புப்பிரிவு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம், கேரளாவின் எல்லை பகுதிகளில் வரக்கூடிய வாகனங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.