
புளியறை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயில்
திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டைக்கு மிக அருகே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில். செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலத்தில் கொல்லம், சபரிமலை மற்றும் திருவனந்தபுரத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது புளியறை.
நெடுஞ்சாலையில் இருந்து இடது புறம் செல்லும் சிறிய கிராமச் சாலையில் சுமார் அரை கி.மீ. நடந்து, இந்தக் கோயிலை அடைகிறோம். சுற்றிலும் மனத்தைக் கவரும் ரம்மியமான சூழல். மேற்குத் தொடர்ச்சி மலை மூன்று புறங்களிலும் சூழ்ந்திருக்க, சற்றே மேடான குன்றின் மீது இந்தக் கோயில் அமைந்திருக்கக் காண்கிறோம்.சிலுசிலுவென அடிக்கும் தென்றல் காற்றும் கண்ணுக்கு இதமளிக்கும் பசுமையும் நம் மனத்தை இயற்கையுடன் ஒன்ற வைத்து விடுகிறது.
ஆலயத்தின் வெளியே அழகிய திருக்குளம். இந்தத் தாமரைக் குளம், சடாமகுட தீர்த்தம் எனும் பெயர் தாங்கி புண்ணிய தீர்த்தமாகத் திகழ்கிறது. அதில் நம் பாதம் நனைத்து எதிரில் தெரியும் படிகளில் ஏறத் துவங்குகிறோம்.கோயில் சற்று மேடான இடத்தில் உள்ளது. 27 படிகள் இந்தக் கோவிலுக்குச் செல்ல அமைந்திருக்கின்றன…
இந்த 27 படிகளும் 27 நட்சத்திரங்களின் அம்சமாக அமைந்திருக்கின்றன. நட்சத்திரங்களின் கணவனாகப் போற்றப்படும் சந்திரன், 27 படிகள் முடியும் இடத்தில் தனியாக சிவபெருமானை நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறார். 27 நட்சத்திரங்களுக்காக இத்தனை படிகள் கேரள முறைப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. நட்சத்திர தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தப் படிகளில் ஏறி, பரமனைத் துதித்தால் போதும், நிவாரணம் பெறலாம் என்கிறார்கள்.
இந்த ஆலயத்தின் பிரதான தெய்வமாக சதாசிவ மூர்த்தி திகழ்கிறார். அவரது தேவியாக அன்னை சிவகாமி கிழக்கு நோக்கி தனியாக சந்நிதியில் திகழ்கிறார்.சந்நிதி பிராகாரத்தில் கணபதி, நாகர்கள், ஆறுமுகப் பெருமான், சனீஸ்வர பகவான், பைரவர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. மாடன், மாடத்தி, யட்சியம்மன் ஆகியோரும் தனியாக சந்நிதி கொண்டுள்ளனர். இந்தக் கோயிலின் பின்புறம், கிருஷ்ணஸ்வாமியாக பெருமாள் தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார்.

இத்தனை தெய்வ மூர்த்தங்கள் இங்கே இருந்தாலும், இந்த ஆலயம் தனிச்சிறப்புடன் திகழ, தட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு அமைந்த சந்நிதியே காரணம் எனலாம்.தென்முகக் கடவுளான ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு தெற்கு நோக்கிய தனி சந்நிதி. இங்கே பெருமானைச் சுற்றி வலம் வந்து வணங்கலாம். இதுவே ஒரு சிறப்பான அமைப்பாகத் திகழ்கிறது.
இந்தக் கோயில் இங்கே உருவான விதமே மிகவும் வித்தியாசமானதுதான்.. தலத்தின் புராண வரலாற்றை ஒன்றிப் பார்க்கும் போது, அந்தத் தனித்துவத்தை நாம் உணர்கிறோம்.
தில்லையம்பதிக்கு ஒரு சோதனை. சமணர் ஆதிக்கம் சோழ, பாண்டிய நாடுகளில் அதிகரித்தது. சைவத் தலங்களும் சுவாமி விக்கிரகங்களும் பெரும் ஆபத்தைச் சந்தித்தன. தில்லையம்பதியும் சமணர் ஆளுகைக்கு உட்பட்டது. இதனால் நடராசப் பெருமானுக்கு ஆபத்து நேருமோ என்று பக்தர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். எப்படியாவது பெருமானை பத்திரப்படுத்த எண்ணினர்.
நடராசப் பெருமானின் விக்ரஹத்தை எழுந்தருளச் செய்துகொண்டு பாண்டிய நாட்டின் தென்கோடிக்கு வந்தனர். அங்கிருந்து சேரநாடு செல்லும் எல்லைக்கு வந்தவர்கள், பொதிகை மலை அருகே திரிகூடாசலத்தை அடைந்தனர். முப்புறமும் மலைத் தொடர் சூழ்ந்திருக்க, அடர்ந்த காடாக விளங்கியது இந்தப் பகுதி. மூங்கில்கள் அடந்து படர்ந்திருந்தன.

இறைவனை அந்த வேணு வனத்திலேயே பாதுகாப்பாக வைக்கலாம் என்று எண்ணினார்கள். இருப்பினும் எங்கே வைப்பது? குழப்பத்தில் ஆழ்ந்திருந்த அவர்களுக்கு ஒரு புளியந்தோப்பைச் சுற்றி வட்டமடித்த கருடன் வழிகாட்டினார்.
அந்தத் தோப்பில் ஒரு புளிய மரம்… விக்கிரகத்தை மறைத்து வைக்க வசதியாக பெரிய பொந்துடன் இருந்தது. அங்கே நடராசப் பெருமானை எழுந்தருளச் செய்து, இலை, தழைகளால் அந்தப் பொந்தை மூடிவிட்டுச் சென்றார்கள்.வருடங்கள் கடந்தன.
தோப்புக்குச் சொந்தக்காரர், அடுத்த கிராமத்தைச் சேர்ந்த வேளாளச் செல்வந்தர். ஒருநாள் புளியமரத்தைப் பார்த்த அவர், ஞானமா நடராச மூர்த்தி ஏகாந்தமாய் எழுந்தருளியிருப்பதை அறிந்து மகிழ்ச்சி கொண்டார். மரப்பொந்தினை சுத்தம் செய்து, பெருமானை வழிபடத் தொடங்கினார். அக்காலச் சூழ்நிலையை எண்ணி எவரிடமும் இதனைக் கூறாதிருந்தார்.

காலம் கடந்தது. சோழ நாட்டில் மீண்டும் சைவம் தழைத்தது. ஆடல்வல்லான் இல்லாத தில்லையை எண்ணிப் பார்க்க இயலவில்லை பக்தர்களால். மீண்டும் அவர்கள் பெருமானை அங்கே எழுந்தருளச் செய்ய எண்ணினர். அவர்களுக்கு சிவபெருமானே வழிகாட்டினார். தென் திசை வந்தவர்கள், வேணு வனம் இருக்கும் பகுதிக்கு வந்தனர். அசரீரி மூலமாக இறைவன் தன் இருப்பிடத்தைச் சொன்னான்.
புளியமரப் பொந்தில் இறைவனைக் கண்டு அதிசயித்த அவர்கள், பெருமானை மீண்டும் தில்லைக்கு எடுத்துச் சென்று எழுந்தருளச் செய்தார்கள்.
இங்கே புளியமரத்தில் பெருமானைக் காணாமல் தவித்த அந்த வேளாளர், அழுது புலம்பினார். அவரது நிலைக்கு மனமிரங்கிய பெருமான், மரத்தின் அடியில் இருந்து சுயம்பு லிங்க உருவாய் வெளித் தோன்றி அருள் புரிந்தார்.
பெருமானின் கருணையை எண்ணி மனம் உருகி அங்கே அவருக்கு வழிபாடு செய்யத் தொடங்கினார் அவர். இந்த விவரம் கேட்ட கிராமத்தார் தாங்களும் வழிபடத் தொடங்கினார்கள். தன் நாட்டு எல்லைக்குள் நடந்த இந்த அதிசயத்தை அறிந்த சேர மன்னன், இங்கே வந்து சிவ பெருமானை வழிபட்டு, அவருக்காக ஒரு ஆலயத்தையும் எழுப்பினான்.
சேர மன்னர் கட்டிய கோயில் என்பதால், கொடிமரம் இல்லாமல் அவர்களின் வழக்கப் படி கோயில் அமைந்தது. அந்தப் புளிய மரமே தல விருட்சமானது. பெருமான் புளிய மர அறையில் தங்கியதால், இந்தப் பகுதிக்கும் புளியறை என்னும் பெயர் ஏற்பட்டது.

சுயம்புவாகத் தோன்றிய பெருமான் சதாசிவ மூர்த்தி எனும் பெயர் பெற்றார்.
இங்கே தனிச் சந்நிதியில், வலம் வந்து பக்தர்கள் வணங்கும் வகையில் சிறிய உருவுடன் சிறப்பாய்த் திகழ்கிறார் ஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமான். இவர் ஏன் இங்கே தனிச்சந்நிதி கொண்டார்?
ஞானமா நடராசப் பெருமான், இங்கே உபதேசக் கோலத்தில் குருவாக இருந்து, மரப் பொந்தில் அமர்ந்து அருள் புரிந்தார். எனவே சிவாலயங்களில் வழக்கமாக அமைக்கப்படும் கோஷ்ட தேவதையாக இல்லாமல், தட்சிணாமூர்த்திப் பெருமான் தனிச் சந்நிதியில் அமைந்தார்.
என்னதான் சுயம்புவாக லிங்க வடிவில் தோன்றினாலும் பெருமானின் ஞானம் தரும் யோக வடிவழகை தரிசிப்பது சிறப்பல்லவா?! அத்தகைய கோலம் தாங்கி இங்கே எழுந்தருளியுள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்திப் பெருமான், குரு பகவானுக்கு அதிபதியாயிற்றே. எனவே, இங்கே குருவுக்குச் செய்யும் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.
வியாழக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் வந்து பெருமானை பூஜிக்கிறார்கள். திருமணத்தடை அகல, குழந்தைகளின் கல்வி சிறக்க, குருவின் பரிபூரண சுபப் பார்வை பெற என அனைத்துக்கும் இங்கே சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை, சுசீந்திரம் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயிலான இந்தக் கோயிலில் ரிக் வேத ஆகம முறைப்படி ஆறு கால பூஜைகள் நடக்கின்றன. சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், ஹோமம் ஆகியவற்றுடன் குருப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
சுற்றுவட்டாரத்தில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தி அருள் பெற்றுச் செல்கிறார்கள்.

மிகப் பழைமையான கோவில். பிற்காலத்தில் தென்காசிப் பாண்டிய மன்னர்களால் திருப்பணிகளும் செய்யப் பட்டுள்ளது. சிறு குன்றின் மேல் அழகிய திருக்கோயிலாக அனைத்து சந்நிதிகளும் கொண்டு திகழ்கிறது.
கோயில் காலை 6 மணியில் இருந்து 12 மணி வரையிலும் மாலை 5 மணியில் இருந்து 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வியாழக்கிழமைகளில் காலை 4.30 மணிக்கே சந்நிதி திறக்கப் படும். மதியம் 2 மணி வரையிலும் பெருமானை தரிசிக்கலாம். மாலை 4.30 முதல் 8.30 வரை திறந்திருக்கும்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கொல்லம் செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. கேரளம் செல்லும் பேருந்துகளும் நின்று செல்லும் என்பதால் பேருந்து வசதிக்குக் குறைவில்லை.
இயற்கை எழிலுடன் பக்தி மணம் கமழும் அழகிய ஒரு தலத்தைக் கண்ட மனத் திருப்தி இங்கே வரும் அன்பருக்குக் கிடைக்கிறது. அந்த சுகானுபவத்தை நாமும் பெறலாமே!