
”இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்து அங்குக் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலவுகிறது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் .
அதனைத் தொடர்ந்து அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்திற்குப் பிறகு அதாவது அக்டோபர் 31-ஆம் தேதி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது
கனமழையை பொறுத்தவரையில் தென் தமிழக மாவட்டங்களான குமரி ,நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும் வட தமிழக மாவட்டங்களில் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ,தர்மபுரி, இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது, என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலையைத் தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை, அடுத்துவரும் 3 தினங்களுக்கு 29,30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடல் பகுதிகள்,குமரிக்கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் லட்ச தீவுப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறும் வலியுறுத்தி உள்ளது.

இதனால் செவ்வாய்கிழமை கடலுக்குச் செல்வதற்கான அனுமதி டோக்கனை ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறையினர் வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, வாலிநோக்கம், தேவி பட்டிணம், தொண்டி, எஸ்.பி. பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 2,000 விசைப்பபடகுகள் திங்கட்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
மேலும் குமரிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை முன்னிட்டு பாம்பனில் இரண்டாம் நாளாக மூன்றாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டது.