
செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பேட்டையைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்குத் திருமணமாகி 4 வயது பெண் குழந்தையும் 1 வயது ஆண்குழந்தையும் உள்ளனர்.
இவர் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை, சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் வெண்மாலகரத்தில் வசித்து வரும் அவரது பெற்றோரைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார்.
அதன் பின்னர், இரவு 7 மணியளவில் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூர் என்னும் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே ஒரு பைக்கில் மணிகண்டன் என்பவர் வந்துள்ளார்.
சற்று நேரத்தில் ஐயப்பன் பைக்கும், மணிகண்டன் பைக்கும் நேருக்கு நேர் மோதி ஐயப்பன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மணிகண்டனுக்குக் கால்கள் இரண்டும் துண்டாகியுள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும், ஐயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



