
கொரோனா பரவும் அச்சத்தால் மக்கள், சலூன் கடைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடிதிருத்தம் (கட்டிங்) மற்றும் முகச்சவரம் (ஷேவிங்) செய்து கொள்ள பழகிவிட்டதால் சலூன்கடைகள் வாடிக்கையாளர்கள் வராமல் காற்று வாங்குகின்றன.
அதனால், அந்தத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் கண்கலங்கி நிற்கின்றனர்.
சீனாவில் உருவான கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவை உருவாக்கிவருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் நோய் சமூகத்தில் அடித்தட்டு மக்கள் பார்க்கும் பல்வேறு பாரம்பரியத் தொழில்களை அடையாளம் தெரியாமல் அழித்துக் கொண்டிருக்கிறது.
அதில் முக்கியமானது சலூன் கடை. சலூன் கடைகளில் ஒரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்தப்படும் துணிகள், கத்தரிக்கோல்கள், டிரிம்மர்கள், மற்றும் ஹேர்ஸ்டைலிங் செய்ய பயன்படும் மற்ற கருவிகள் உள்பட அனைத்தும் அனைவருக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பாதுகாப்பாற்ற சூழலால் கரோனா பரவ வாய்ப்புள்ளதால் வாடிக்கையாளர்கள் கடந்த 4 மாதங்களாக சலூன்கடைளுக்குச் செல்ல ஆர்வம் காட்டவில்லை. வீட்டிலேயே முடிதிருத்தம், முகச்சவரம் உள்ளிட்டவற்றை செய்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
சிறுவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களே முடிதிருத்தம் செய்து விடத்தொடங்கிவிட்டனர். தற்போது அதுவே பழகிவிட்டதால், சலூன் கடைகள் திறந்தும், வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வந்து முடி வெட்டவும், சவரம் செய்யவும் ஆர்வம் காட்டவில்லை.
சலூன்கடைகளுக்கு இந்த நிலையென்றால், அழகுநிலையங்களின் நிலை இன்னும் பரிதமாக உள்ளது. பெரும்பாலான அழகு நிலையங்கள் மதுரையில் மூடபட்டுள்ளன.
தற்போது சலூன் கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டிருந்தும், வாடிக்கையாளர்கள் வராமல் காற்றாடுகின்றன.

சலூன்கடைகள், அழகு நிலையங்கள் மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்க தடை செய்யப்பட்டப் பகுதிகளில் மட்டும் சலூன்கடைகள், அழகு நிலையங்கள் செயல்வதற்கு அனுமதியில்லை என்றும், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வரும் தொழிலாளர்களை சலூன்கடைகளில், அழகு நிலையங்களில் பணியமர்த்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கடைகளில் சமூக இடைவெளியை பின்பிற்றவும், முககவசம், கிருமி நாசினி வழங்குவதையும் கடை உரிமையாளர்கள் உறுதி செய்கொள்ள அறிவுறுத்தப்பட்டள்ளனர்.
இப்படி பல கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் அறிவுறுத்தப்பட்டும் வாடிக்கையாளர்கள் சலூன்கடைகளுக்கு வரவில்லை. அதனால், இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து கண்கலங்கி நிற்கின்றனர்.
இதுகுறித்து ஒத்தக்கடையைச் சேர்ந்த சலூன்கடைக்காரர் சுரேஷ் கூறுகையில், ”பிஏ பொருளாதாரம் படித்துள்ளேன். சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்தேன். திருமணத்திற்குப் பிறகு ஒரு வழக்கறிஞரிடம் கிளார்க் வேலைப்பார்த்தேன். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் அப்பா பார்த்துவந்த தொழிலை தற்போது பார்த்து வருகிறேன்.
ஊரடங்கிற்கு முன்பு வரை ஞாயிற்றுக்கிழமைகளில் 40 பேரும், மற்ற நாட்களில் 20 பேரும் வருவார்கள். குடும்பத்தை நடத்துவதற்கு ஒரளவு வருமானம் கிடைத்தது.
தற்போது ஒரு நாளைக்கு 2 பேர் வந்தாலே அபூர்வமாக இருக்கிறது. ஊரடங்கிற்கு முன், செலவுபோக ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை சம்பாதித்தேன்.
தற்போது 200 ரூபாய் கூட வீட்டிற்கு கொண்டு போவதே சிரமமாக உள்ளது. நலவாரியத்தில் உள்ள முடிதிருத்தம் தொழிலாளர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கியது. எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதுவரை கடன் வாங்கிதான் குடும்பம் நடத்துகிறோம்.
கடந்த வாரம் என் மனைவிக்கு உடல் நலமில்லாமல் பக்கத்து வீட்டில் கடன் வாங்கி சென்று மருத்துவம் பார்த்தேன். அவர்களுக்கு எப்படி திருப்பிக் கொடுப்பது என்று தெரியாமல் வருமானம் இல்லாமல் தடுமாறி நிற்கிறேன். யாராவது வாடிக்கையாளர் வந்தால் அவரை கடவுள் போல் பார்க்கிறேன்.
முன்பு முகச்சவரம் மட்டுமே வீட்டில் செய்து கொண்டனர். தற்போது முடிதிருத்தமும் செய்ய ஆரம்பித்துவிட்டதால் இனி கரோனா ஒய்ந்தாலும் இந்தத் தொழில் முன்போல் நடக்குமா? என்பது தெரியவில்லை. அதனால், அரசு என்னைப்போன்ற படித்த இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும் ” என்றார்.