
இடைவிடாத மழையின் காரணத்தால், திருநெல்வேலி மாவட்ட பிரதான அணைகளிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டது. இதை அடுத்து, திருநெல்வேலி மாநகர் பகுதியில் தாமிரபரணிக் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், நெல்லை மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவை நிரம்பிவிட்டன. இதை அடுத்து, அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று இந்த அணைகளிலிருந்து 22,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் காட்டாற்று வெள்ளம் சேர்ந்து திருநெல்வேலி மாநகரப் பகுதி தாமிரவருணி ஆற்றில் சுமார் 25 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை மாநகரப் பகுதிகளான மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்தது.

வண்ணாரப்பேட்டை எட்டுத்தொகை தெரு, திருக்குறிப்பு தொண்டர் தெரு, இசக்கியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் 150க்கும் மேற்பட்ட வீடுகளை புதன்கிழமை காலை வெள்ள நீர் சூழ்ந்தது.
தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு வந்தால், வழக்கமாகவே குறுக்குத்துறை முருகன் கோயில் மண்டபத்தை நீர் சூழ்ந்துவிடும். தாமிரபரணி ஆற்றுக் கரையில் உள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்துக் கொண்டு, தாமிரபரணியில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

தாமிரபரணியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், பெருநை ஆற்றைக் கடந்து செல்லும் சேரன்மகாதேவியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று பகல், அடுத்த ஆறு மணி நேரத்திற்கு நெல்லை தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

கல்லிடைக்குறிச்சி பழைய பாலம் பகுதி தாமிரபரணி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கியது. புதிய பாலப் பகுதியில் போலீஸார் எவரையும் அனுமதிக்கவில்லை. கனடியன் கால்வாய் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துச் செல்வதால், தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் அளவில் மூழ்கித் தெரிகிறது. தற்போதும் பலத்த மழை பெய்து வருவதால், தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.