விருத்தாச்சலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக மகன், மகளை கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ராமச்சந்திரன்பேட்டயைச் சேர்ந்தவர் செ.குமார் (51). கடலூர் சாலை அருகே இந்திராநகரில் சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவர் கரூரைச் சேர்ந்த சாஹிராபானுவை (40), காதலித்து திருமணம் செய்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, இவர்கள் இந்திரா நகரில் உள்ள மகாலட்சுமி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் பரத் (12), 5 ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஹேமவர்ஷினி (10) ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவில் வழக்கம்போல் அனைவரும் வீட்டில் தூங்கி உள்ளனர். குமார் வீட்டில் உள்ள ஹாலில் படுத்துள்ளார். சாஹிராபானு தனது இரண்டு குழந்தைகளுடன் அறைக்குள் படுத்து தூங்கி உள்ளனர். காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வெகு நேரமாகியும், கதவு திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று குமார் பார்த்துள்ளார்.
அப்போது தாய், மகன், மகள் என மூவரும் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு, கதறி அழுது உள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் மூன்று உடல்களையும், மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மூன்று பேர் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது.
இது குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் குமார் மற்றும் அவரது மனைவி சாஹிராபானுக்கு இடையே, கடந்த மூன்று மாதமாக பிரச்னை இருந்து வந்ததாகவும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது இல்லை என கூறப்படுகிறது.
மேலும், மூன்று மாதமாக குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகவும், அதனால் மனமுடைந்த குமாரின் மனைவி சாஹிராபானு, தனது மகன், மகளின் மூக்கில் பஞ்சு வைத்து அடைத்து, மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டதாகவும், அதன் பின்னர் சாஹிராபானுவும் மின்விசிறியில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் இறந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.